Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலையில் இன்னொரு பெயர் கருணை யுத்தம்…. : டி.அருள் எழிலன்

” நாம் நமது தாய்நாட்டை பிரிவினைவாத பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின்
ஒவ்வொரு அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது இந்த மேன்மைமிக்க பாராளுமன்றத்தினால் ஆக்கப்படும் சட்டங்கள் மட்டுமேயாகும். நாம் இன்று இந்த புதிய கூட்டத்தொடரை ஆரம்பிப்பது இந்த மேன்மைமிக்க அரசியல்யாப்பு அதிகாரங்கள் 65,332 சதுர கி.மீ. நிலப்பிரதேசம் முழுவதும் ஒரே சமானமாகத் திகழும் நாட்டிலாகும்”

” சிறுபான்மை மக்கள் என்ற சொல்லை நாம் மூன்று வருடங்களுக்கு முன்பே எமது அகராதியிலிருந்து நீக்கிவிட்டோம். இனியும் இந்த நாட்டில் தமிழர், முஸ்லிம்கள், பரங்கியர், மலாயர் ஆகிய எவரும் சிறுபான்மை இனத்தவரல்ல. தற்போது இந்த நாட்டில் இருப்பது இரண்டு இனங்களாகும். ஒன்று நாட்டை நேசிக்கும் இனம் அடுத்தது பிறந்த மண்ணின்மீது நேசமில்லாத ஒரு சிறு பிரிவினைக் கொண்ட ஒரு இனம். நாட்டின் மீது நேசமில்லாத பிரிவினர் ஒரு சிறு பிரிவினராக மாறியுள்ளனர்”

“எமது நாடு நீண்ட வரலாற்றைக்கொண்ட 182 அரசர்கள் ஆட்சிசெய்த 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆட்சியதிகார வரலாற்றைக் கொண்ட ஒரு நாடாகும். துட்டகைமுனு, வலகம்பா, விஜயபாகு போன்ற மன்னர்கள் எதிரிகளின் ஆக்கிரமிப்புகளை வெற்றிகொண்டு சுதந்திரத்தை உறுதி செய்த நாடு. பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் போராடிய, உலகின் ஆதிக்கத்தை தம்வசம் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள் ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப்போராடிய அனுபவம் கொண்ட ஒருநாடு. மாயாதுன்னை முதலாவது இராஜசிங்கன் விமலதர்மசூரிய போன்ற மன்னர்கள் போன்று வீரகெப்பட்டிபொல, வீரபுரன்அப்பு போன்ற வீரர்கள் ஏகாதிபத்திய வாதிகளுக்கெதிராக மேற்கொண்ட போராட்டங்களையும் நான் ஞாபகமூட்ட வேண்டும். இந்த நீண்டவரலாறுபற்றி நாம் ஆராய்ந்து பார்க்கின்றபோது எமக்கு ஒரு பொதுவான விஷயம் தெளிவாகின்றது. அதாவது பிறந்த நாட்டின் மக்கள் ஒன்றுபட்டு இருக்கும் காலமெல்லாம் வெளியிலிருக்கும் எதிரிக்கு இந்த நாட்டை அடிமைப்படுத்த முடியாது என்பதாகும். இன்று மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாக ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடுவதற்கு எமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொடுத்த இந்த இறந்தகால வீரர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”

”இந்த சிறு பிரிவினர் இந்த வெற்றி யாருடைய வெற்றியெனக் கேட்கின்றனர். அதற்கு எம்மிடம் சரியான பதில் உள்ளது. இந்த வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமான வெற்றியல்ல. எமது நாட்டின் தேசியக் கொடியை புடைசூழ எமது மக்கள் இன்று ஒன்றுதிரண்டுள்ளனர். எனவே இந்த வெற்றி பொதுமக்களுடைய வெற்றியாகும். வயிற்றை விடுத்து நாட்டைப் பற்றி சிந்திக்கும் மக்களுடைய வெற்றியாகும்.”

(இலங்கைப் பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத் தொடரை துவக்கி வைத்து 19-&04&-2009 அன்று பேசிய ராஜபட்சேவின் உரையில் சிறு பகுதிகள்)

சிங்களப் பெரும்பான்மை மக்கள் அவர்களின் பண்டை மன்னர்களான துட்டகைமுனுவையோ, மகாசேனனையோ, கஜபாவையோ அவர்கள் கண்டதில்லை படுகொலைகளுக்குப் பிந்தைய இராணுவ வெற்றிக்குப் பிறகு அவர்கள் இந்த மன்னர்களின் வடிவத்தில் ராஜபட்சேவை மட்டுமே காண்கிறார்கள்.பண்டு தொட்டு நடந்து வரும் போர்களில் மன்னர்கள் சந்தித்த போரை விட ராஜபட்சே என்னும் மன்னன் கண்ட வெற்றியே உன்னதமான ஒன்றாக பதிவிடப்படுகிறது. தோற்றுப் போன எல்லாளன்,பண்டார வன்னியனின் வீரமரபு தோற்று விட்டதாக தமிழ் மக்கள் நினைப்பது போலவே அவர்கள் துட்டகைமுனுவின் விஜிதபுர யுத்தத்திற்கு சமமான ஒன்றாகவே வன்னி யுத்தத்தைப் பார்க்கிறார்கள். அவரது அந்தப்புரமான அலறி மாளிகையில் கவிஞர்கள் அவரை புழந்துரைக்கிறார்கள். சிங்களத்தின் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு மன்னனின் கம்பீரத்தையும் அவனது அறிவார்ந்த மனித நேயத்தையும் பட்டியிலிடுகிறார்கள். இது போன்ற ஒரு கம்பீரத்தையே நாம் போருக்குப் பிந்தைய நான்காவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரை துவக்கி வைத்துப் பேசிய ராஜபட்சேவின் உறையில் கண்டேம்.

புலிகளுக்கு இராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் வழங்கப் போவதாக சொல்லி ராஜபட்சேயும் அவரது இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் வன்னி மீது மனிதாபிமான நடவடிக்கையை துவங்கிய போது, கனரக ஆயுதங்கள், விமானங்கள், பேரழிவு ரசாயன ஆயுதங்கள், கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், விஷவாயுக் குண்டுகள், கொத்துக்குண்டுகள், பல்குழல் எரிகணைகள், ஆட்லறிகள், நவீன ராடார் கருவிகள், ஆளில்லா வேவு விமானங்கள் என இதுவரை இல்லாத நவீன பலத்தோடு முன்னெடுக்கப்பட்டதுதான் இந்த மனிதாபிமான நடவடிக்கை. இன்று சிங்கள மக்களுக்கு விடிவைக் கொடுத்து விட்டதாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த ராஜபட்சேயின் இராணுவம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றொழிக்க வேண்டிய தேவை இருந்தது.இந்தக் கொலைகளில் இருந்தே சிங்கள பேரினவாதிகளில் பெரும்பான்மை வாதமும் ஜனநாயகமும் பிறக்கிறது.

அவர்கள் புலிகளை மட்டும்தான் அழித்தார்களா? பிரபாகரனையும் அவரது மூத்த தளபதிகளையும் மட்டுமேதான் கொன்றார்களா? இன்று முள்ளியவாய்க்காலில் எதுவுவே நடவாதது போல நடந்து கொள்ளும் ஐநாவும் மேற்குலகமும் இந்தியாவும் இந்த நூற்றாண்டின் பயங்கரப் படுகொலையில் கை நனைத்து விட்டு தமிழ் மக்களுக்கு விடிவைக் கொடுக்கப் போகும் தூதர்களைப் போல பாசாங்குடன் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கருணை யுத்தத்தின் மாடலைத்தான் எல்லா நாடுகளுமே தங்களின் நாடுகளுக்குள் பல் வேறு மக்கள் உரிமைக்காக போராடுகிற பழங்குடிகள், ஆதிவாசிகள், தலித்துக்கள், தேசீய இனத்தவர், நக்சல்பாரிகள்,மாவோயிஸ்டுகள், என கிளர்ச்சிக் குழுக்களின் மேல் பயன்படுத்துகிறது.சந்தை நலனால் கிடைக்கும் லாபத்தை விட மக்கள் சாவது பற்றியோ அவர்கள் நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அந்நியாமாவது குறித்தோ இந்த நாடுகளுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆயுதப் போராட்டங்களில் மட்டுமல்லா அணை கட்டுவதாக இருந்தாலும், அணு உலை கட்டுவதாக இருந்தாலும் அந்தப் பகுதிகளில் வாழும் ஆதிப் பழங்குடிகள் பற்றி எவ்வித கவலையும் இவர்களுக்குக் கிடையாது. அவர்களுக்காக போராட தன்னார்வக் குழுக்கள் வருவார்கள் என்பதுதான் இன்றைய நிலை. இப்படியான உலகமயப் போக்கோடு உலக நாடுகளுக்கு குறிப்பாக இந்தியா, சீனா போன்ற ஆசிய வல்லரசுகளுக்கு கிடைத்த சிறந்த மாடல்தான் ஈழப் படுகொலைகள். இந்தக் கொலைகள் கொடுக்கும் உற்சாகமே இனி காஷ்மீரிலும், வடகிழக்கிலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை தீவீரப்படுத்தும்.இலங்கை அரசின் போர் நடவடிக்கையையும் அதன் வெற்றியையும் எடுத்துக் கொள்கிற இந்தியா அதே பாணியை மேற்குவங்கத்தில் பயன்படுத்துகிற அதே நேரம் புலிகளின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிற மாவோயிஸ்டுகள் இராணுவத்துடன் நேரடி மோதலில் ஈடுபடாமல் பின்வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் வங்கதேசத்தின் முக்திபாஹினிகளையும் காலிஸ்தான் படையினரையும் இப்போது புலிகளையும் என இந்த தொடர்ச்சியான அழிப்புகள் இந்தியாவின் ஈரமில்லா விளையாட்டுகள்தான்.

புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது குறித்து எனக்கு கவலைகள் உண்டு. ஆனால் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை மட்டுமா முடிவுக்கு கொண்டு வந்தார்கள். பயங்கரவாத அரசின் ஆளுகைக்குள் தமிழ் அரசியலைக் கூட பேச முடியாத சூழலை உருவாக்கி வைத்தது புலிகள் செய்த தவறு. ஆனந்தசங்கரியும், டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், பிள்ளையானை மட்டுமே அவர்களால் உருவாக்க முடிந்தது. அல்லது ஆயுதங்களோடு உயிரை பலிகொடுக்கிற மாவீரர்களை மட்டுமல்லவா? நான் உருவாக்கி வைத்திருக்கிறோம். மக்கள் விடுதலையின் பெயரால் நாம் ஆதரித்த புலிகள் இத்தனையாயிரம் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் மக்களையும் கொல்லக் கொடுத்தது கடைசியில் வெள்ளைக் கொடியேந்தவா? செத்துப் போவதற்காக உலகில் யாரும் குழந்தைகளை ஈன்றெடுப்பதில்லை. அது துவாரவாவாக இருந்தாலும் பால்ச்சந்திரனாக இருந்தாலும் அப்படித்தான். அந்தப் பிள்ளைகளை எப்படி பேரினவாதிகள் பலி எடுத்தார்களோ அப்படியே ஒரு இனத்தின் அடுத்த தலைமுறையையே கருவறுத்து விட்டார்களே? யார்? யார் அகதி முகாம்களில் இருக்கிறார்கள். வதைமுகாம்களில் இருக்கிறவர்கள் யார்? தப்பியவர்கள் யார் என தூக்கமில்லா இரவுகளை வன்னி மக்களுக்கு பரிசளித்த முள்ளியவாய்க்கால் படுகொலைகளில் ஆயுதங்களை நம்பி போராட முடியாது என்ற கசப்பான உண்மையை தெரிந்து கொள்ள. எத்தனை கசப்புகளை நாம் இன்று மறைக்க வேண்டியிருக்கிறது. பயங்கரவாதிகளின் படுகொலைகளில் இருந்து போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் கூட தப்ப வில்லை என்பதாலேயே நாம் கசப்பை மறக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இனி எப்படிப் பேசுவது. இந்தப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்பதை எதிரிகளுக்கு எப்படிச் சொல்வது?

இந்தப் போரைச் சுற்றி நிலவும் மௌனம். மௌனமான ஆதரவுகள் அவர்களை மிக மோசமான கொலை வெறிக்கு இட்டுச் சென்றது. பெரும் அழிவை முள்ளிவாய்க்காலில் அவர்கள் செய்து முடித்து விட்டார்கள். உலெங்கிலும் பெரும் அதிர்வலைகளை இது ஏற்படுத்தப் போவதில்லை என்பது இலங்கை அரசுக்குத் தெரிகிறது. அதனால்தான் அரசியல் ரீதியாக தமிழ் மக்களை எதிர் கொள்ளும் தந்திரமாகத்தான் இந்தக் கொலைகள் குறித்த செய்திகளை முன்னுக்குப் பின் முரணாக வெளியிட்டார்கள். உண்மையில் ஜீ&11 மாநாட்டுக்குப் போன் ராஜபட்சே கொழும்புக்குத் திரும்பியதும் மண்ணை முத்த மிட்ட போதே பெரும் அழிவை நடத்தி முடித்து விட்டார்கள் அங்கிருந்து முப்பதாயிரம் மக்களை மீட்டு விட்டதாகவும் வேறு மக்கள் அங்கு இல்லை என்றும் அறிவித்தார்கள். அப்படியானால் மீது இருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிக்குடும்பங்களும் மக்களும் கருணாவின் வார்த்தைகளில் வந்த மாவீர்கள்.ஆகவே அவர்களைக் கொல்லுதல் நியாயம் என்றானது. அந்த நியாத்தை இந்த உலகும் இலங்கை இராணுவத்துக்கு வழங்கியிருந்தது.

புலிகளின் ஆயுதப் போராட்டமும் அவர்களும் கசப்பான முறையில் இல்லாமல் போனார்கள் என்கிற செய்தியை நம்மால் இன்று ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்தான் மனம் தவிக்கிறது. ஆனால் நமது விருப்பத்திற்கிணங்க அல்ல பயங்கரவாத இலங்கை பாசிஸ்டுகளின் விருப்பத்திற்கிணங்கே அவர்களும் மக்களும் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதோடு. நாம் இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டால் மட்டுமே மீண்டெழ முடியும். ஆனால் சிலரோ புலிகளை விமர்சிக்கத் தயங்குவதன் மூலம் வரலாற்றில் மீண்டும் அதே தவறுகளைச் செய்ய முனைகின்றனர். எல்லாம் கைமீறிப் போன நிலையில் எதிரியிடம் போய் வெள்ளைக் கொடியை ஏந்தியதாகச் சொல்வதில் என்ன வீரமோ விவேகமோ இருந்து விடப் போகிறது. இதுதான் சரணடைவதுதான் புலிகள் இறுதி நேர முடிவு என்றால் ஏன் அதை கிளிநொச்சி வீழ்ச்சியின் போதே செய்ய வில்லை. குறைவான போராளிகளை சரணடையச் செய்து விட்டு காடுகளுக்கு நகர்வதன் மூலம் மக்களை இழக்காமல் இந்தப் போராட்டத்தையும் இழக்காமல் காப்பாற்றியிருக்கலாமே?

ஈழ மக்களுக்காளுக்காத்தானே? தமிழ் ஈழம். ஆயுதம் ஏந்தியதும் அவர்கள்தானே? யாழ்பாண மக்களோ, கிழக்கு மக்களோ இராணுவ கண்காணிப்பின் கீழ் வாழ்ந்த போது வன்னி மக்கள் மட்டும்தானே எப்போதும் புலிகளுடனேயே இலங்கை இராணுவத்தோடு செல்ல மறுத்து வாழ்ந்தவர்கள். அவர்களை ஏன் புலிகளால் காப்பாற்ற இயலாமல் போனது. இது வரலாற்றில் எவளவு மோசமான கசப்பான உண்மை. ஆனால் நாம் இன்று மக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து ஐந்தாம் ஈழப் போர் குறித்துப் பேசுகிறோம். ஐந்தாம் ஈழப் போரில் ஆயுதம் ஏந்த வன்னி மக்களிடம் கைகள் இல்லை என்பதை மறந்து விட்டு மறுபடிடும் நாம் தமிழ் வீரம் பேசுகிறோம்.

கடந்த காலத்தில் புலிகள் செய்த ஜனநாயக மறுப்பும் மாற்றுக் கருத்துச் சுதந்திர மறுப்பும், ஏனைய அரசியல் அமைப்புகளை தடை செய்தமையும், இஸ்லாமியர்களை விலக்கி வைத்து பகை கொண்டதுமான நிகழ்வுகள் ஏராளமானோரை துரோகிகளாக மாற்றி சிங்களப் பேரினவாதத்தின் பக்கத்தில் நிறுத்தியது. அவர்களும் ஈனத்தனமாக புலி எதிர்ப்பின் பெயரால் அங்கு காலம் காலமாக நடந்து கொண்டிருந்த பாசிசப் படுகொலைகளை மறைத்தும் திரித்தும் தங்களின் பன்னாடை அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இன்னும் சிலரோ பௌத்த மரபுக்குள் ஒளிந்து கொண்டு சிங்கள தர்மத்தை வேறு குரல்களில் பேசினார்கள். புலிகள் அமைப்பின் கடும் பின்னடைவுக்குப் பிறகு பிரபாகரன் குறித்து இப்படியாக எழுதுவதன் மூலம் அவர்கள் பிரபாகரனின் பிம்பங்களை தமிழ் மக்களிடம் இருந்து உடைத்தெறிய முயர்ச்சிக்கிறார்கள். புலிகளின் இராணுவ வலிமை என்பது பொய்யானது என்று புனைகிறார்கள். இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பிந்தைய உலகச் சூழலை புரிந்து கொள்ளத் தவறியதை மட்டும் எடுத்து வைத்துப் பேசும் இவர்கள் மறந்தும் புலிகள் போராடியது பிராந்திய வல்லரசுகளுக்கு எதிராக என்பதை தந்திரமாக மறைத்து இலங்கை இராணுவம் மட்டுமே புலிகளுக்கு எதிராக போர் புரிந்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.இன்னும் சிலரோ பெருந்தொகையான மக்கள் அங்கே கொல்லப்பட்ட போது அங்கே இனப்படுகொலை நடைபெற வில்லை என்றும். புலிகளும் அவர்களது தமிழக ஆதரவாளார்களும் இட்டுக்கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் அறிவுஜீவிகளாக நேர்காணலைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். புதுவிசையில் வந்த ஜெர்மனைச் சேர்ந்த சுசீந்திரனின் நேர்காணல் இவ்விதமான வக்கிரத்தை வெளிப்படுத்தியிருந்தது. போர் சூழலில் தாயகத்துக்கு சகஜமாக செல்ல முடியாத சூழலில் ஈழ மக்களுக்கு இப்போது மாற்று தாய் நிலமாக இருப்பது ஏதோ ஒரு வகையில் தமிழகம் மட்டுமே. ஈழ அரசியலை முன் வைத்துப் பேசும் பலரும் ஈழப் போரில் இந்தியாவின் பங்கு குறித்துப் பேச பயப்படுகிறார்கள். வந்து செல்வதற்கு இருக்கிற சூழலை கெடுத்துக் கொள்ள முடியாத எச்சரிக்கை உணர்வு அதில் இருந்தாலும் ராஜீவ்காந்தி கொலை பற்றிப் பேசும் போது சத்தமாகவும் இந்தியா ஈழத்தில் புரிந்த அக்கிரமங்கள் குறித்துப் பேசும் போது மென்மையாகவும் பேசுகிறார்கள்.இவ்வகையான விமர்சனப்பார்வைகளோடு மட்டுமல்லாது புலிகளுக்குப் பிந்தைய ஈழ மக்களின் அரசியல் போராட்டத்தில் இவர்களின் வகிபாகம் என்ன என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

வன்னியில் நடந்து முடிந்தது எதுவுமே வீரகாவியமும் அல்ல. சிலர் சித்தரிபப்து போல கோழைத்தனமானதும் அல்ல, பரிதாபரகரமான முடிவு அது போன்றதொரு தோல்வியே, அங்கீகரிக்கப்படாத ஒரு நிர்வாக அலகைக் கொண்டு அத்தோடு கெரில்லா போர்முறையை கைவிட்டு மரபார்ந்த இராணுவமாக மக்களோடு மக்களாக எந்த போராளி அமைப்பும் தற்கால உலகச் சூழலில் செயல் பட முடியாது எனபதை நடந்த நிகழ்வு நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது என்பதோடு, கடந்த காலத்திலிருந்து அரசியல் நீக்கம் செய்யப்பட்ட போராட்டத்தில் ஆய்தங்களைக் கொண்டு மட்டுமே எதையும் சாதித்து விடலாம் என நினைக்கிற போராளிக் குழு ஒன்று மாறி வரும் உலகச் சூழலை புரிந்து கொள்ளாமல் விழுந்த கதை புலிகளுடையது. வர்த்தக சந்தை நலனே பிராந்திய நலனாகவும் உலகமயமாக்கலாவும், போர் வெறியாகவும், உடைத்துக் கட்டுவட்காகவும் மாறி விட்டச் சூழலை புரிந்து ஒன்றிலோ முன்னரே வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.சமாதானக் காலத்தை நீட்டித்துச் செல்லும் தந்திரங்களையாவது கைக் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லை என்றால் கிளிநொச்சி விழுந்த போதே பின் வாங்கி கெரில்லா நடவடிக்கைக்குச் சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் நமது வீர உணர்வைக் காட்டிலும் புத்திசாலித் தனமே முக்கியம் ராஜபட்சே கூட போரில் வென்ற பிறகுதான் வீரம் பேசுகிறார். தந்திரங்களே மக்களைக் காப்பாற்றும் என்னும் சூழலில் அதைச் செய்வதில் என்ன தவறு நேர்ந்திருக்கும் எனத் தெரியவில்லை. அழிவு என்பதன் யதார்த்தத்தை ஈழ மக்கள் கோரமான முறையில் எதிர்கொண்டது இப்போதுதான். இத்தனை ஆண்டுகாலமும் அவர்கள் நம்பியிருந்த புலிகளால் அம் மக்களை கடைசி நேரத்தில் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு சில கசப்பான மன அதிர்ச்சிகளையும் தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் போர்.சர்வதேச நாடொன்றிடம் சரணடையும் முடிவு என்பது மேம்போக்காக பார்த்தால் கௌரவமான ஒன்றாக இருக்கலாம் ஆனால் அப்படியான துர்பாக்கிய நிலைக்கு நாம் வந்து சேராமல் தவிர்ப்பதற்கான காரணிகளை புலிகளே கைவிட்டதும் தெரிகிறது. பெரும் அவலம் ஒன்று நடந்து முடிந்து விட்ட சூழலில் தனிப்பட்ட முறையில் ஒருவரை குறை சொல்லி இனி எதுவும் ஆகப் போவதில்லை. வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வன்னிக்காக ஏனைய ஈழ மக்கள் ஏன் போராடவில்லை?

இப்போது வன்னி மக்கள் போரின் பாதிப்புகளில் இருந்து மீழ இன்னும் பல தலைமுறைகள் ஆகலாம். அவர்கள் அந்த அவலமான நினைவைச் சுமக்கும் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். போர் ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகள் எதிர்கால வன்னிக் குழந்தைகளைக் கூட பாதிக்கலாம். எதுவுமற்ற மக்களை இராணுவ மயமாக்கும் நடவடிக்கையும் புற்றீசல் போல படையெடுக்கக் காத்திருக்கும் தன்னார்வக் குழுக்களும் செய்யும் வேலையில் வெகு வேகமாக ஈழ மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் அரசியல் ரீதியாக திவாலாகிப் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஏதோ ஒருவகையில் தன்னார்வக்குழுக்கள் கடந்த ஆறு ஆண்டுகளாகவே வன்னிப் பகுதிக்குள் புலிகள் அமைப்புக்குள்ளும் ஊடுறுவியிருப்பதும் தெரிகிறது. புலித் தலைவர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவும் வன்னிக்குள் மக்கள் மனங்களில் மாற்றங்களுக்காகவும் மறைமுகமாக தந்திரமாக இவர்கள் வேலை செய்ததும் தெரியவருகிறது. புலிகளின் இந்தத் தோல்விக்கு ஏதோ ஒருவகையில் அவர்களே காரணம். ஏனென்றால் இன்று அவர்கள் எல்லொரையும் பகைத்துக் கொண்டார்கள் கடைசி நேரத்தில் கூட பெரும்பலான ஈழ மக்களைத் தவிற நம்பிக்கை கொள்வதற்கான மூன்றாவது தரப்பு ஒன்று அவர்களிடம் இல்லாமல் போனது. மித மிஞ்சிய நம்பிக்கையோடு அவர்கள் போரை எதிர் கொள்ள முடியவில்லை. மாறாக ஏதோ ஒரு மாற்றம் நிகழும். இன்னும் சில காலம் தாக்குப் பிடித்திருக்க முடியும். சர்வதேசமோ, இந்தியாவோ கைகொடுக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இதில் எந்த ஒன்றும் நினைத்த மாதிரி நடைபெற வில்லை. புலிகளை யுத்தம் சோர்வாக்கிவிட்டது.அவர்களுக்கு ஓய்வு என்ற ஒன்றையே கொடுக்காத படி இலங்கை இராணுவம் படை நகர்வுகளை முன்னெடுத்தது. புலிகளின் பலத்தை அறிந்த கருணாவின் உதவியும் மித மிஞ்சிய ஆயுத பலமும்தான் இந்த போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற காரணமாக இருந்தது.பெருந்தொகையான மக்களைக் கொண்று ஈவிரக்கமின்றி யுத்தத்தை முன்னெடுக்கும் இலங்கையின் யுத்தன் மீதான கொள்கை முடிவு சரியான நேரத்தில் உலகச் சூழலை புரிந்து கொடுத்து எடுக்கப்பட்டது. அந்த தந்திரத்தை ஏன் புலிகள் செய்யவில்லை என்பதில்தான் புலிகளின் பலவீனம் இருக்கிறது.

தமிழீழத்தின் ஏனைய பகுதிகள் என்று சொல்லப்படும் யாழ்பாணம், கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவாகக் கூட அல்ல கொல்லப்படும் பொது மக்களுக்காகக் கூட போர் நிறுத்தம் கோரி ஒரு ஆர்ப்பாட்டம் கூட முன்னெடுக்கப்பட வில்லை. நாற்பதாயிரம் இராணுவத்தினர் யாழ்பாணத்தில் ஐந்து லட்சம் மக்களை திறந்த வெளிச் சிறையில் வைத்திருக்கிறார்கள். கிழக்கில் பிள்ளையான் தலைமையில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது இம்மக்கள் எப்படிப் போராடுவார்கள் என்ற கேள்வி இன்று முன்வைக்கப்படுகிறது .காஷ்மீரில் இப்போதும் ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கிறது. காஷ்மீர் மாநிலமே இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனாலும் காஷ்மீரிகள் தங்களின் உரிமைக்காவும் மனித உரிமைகளுக்காவும் போராடுகிறார்கள். இப்படியான ஒரு பார்வை இருந்தாலும் கூட இராணுவ முகாம்களுக்குள் கண்காணிப்பின் கீழ் வாழும் மக்கள் போராடுவதற்கான சூழலோ அரசியல் எழுச்சியோ இல்லை என்பது புரிந்து கொள்ளத்தக்கதுதான். ஆனால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை இழந்து ஒன்றரை இலட்சம் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் , ஆண்கள் ஊனமாகி, இன்னும் ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து வன்னி மக்கள் முகாம்களுக்குள் இருந்து அவர்களின் பாரம்பரீய பிரதேசங்களுக்குச் செல்லும் போது அவர்கள் இலங்கையில் ஆகப் பெரிய இராணுவ முகாமுக்குள்ளேதான் இனி வாழப் போகிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல நாற்பது இராணுவ முகாம்களையும் ஏராளமான காவல்நிலையங்களையும் திறக்கப் போகிறது இலங்கை இராணுவம். இப்படியான சூழலில் நாம் தமிழகத்தில் இருந்து கொண்டு ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும் என்கிறோம்? பிரபாகரன் தலைமையில் கெரில்லாப்போர் வெடிக்கும்? மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்கிறோம்? எந்த மக்கள்? முடமாக்கப்பட்டு உறவுகளின்றி தவித்து நிற்கிற வன்னி மக்களா? இது நாம் அந்த மக்களுக்குச் செய்கிற எவளவு பெரிய துரோகம். அவர்களுக்காக போராட வேண்டியது நாம். நாமோ போராடுவதற்காய் வாய்த்த தருணங்களை வீணடித்து விட்டு வன்னி மக்களையே மீண்டும் போராடக் கேட்கிறோம். இரண்டு கால்களும் வெட்டப்பட்டு முடமாகிக் கிடக்கும் ஒரு சமூகத்திடம் ஆயுதம் கொடுக்கக் கேட்கிற கொடூரத்தை இந்தத் தலைமுறையிலாவது விடுவோம்.

கடந்த இரண்டு மாத காலப் போரில் மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்ககீனர்களாக ஆகியிருப்பதாகவும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முழந்தைகள் பெற்றோர்கள் இழந்திருப்பதாகவும். இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலுமாக நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் கடும் துன்ப வாழ்வை எதிர்கொள்வதாகவும் இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துச் சென்றிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்த யுத்தம், இனவாதக் கொலைகள், கடத்தல், காணாமல் போதல் என நாற்பது வயதிற்கும் கீழான விதவைகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கையின் வடக்கு கிழக்கு இன்று மாறியிருக்கிறது.வன்னியில் போர் நடந்து கொண்டிருந்த போது இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி பா.அரியநேந்திரன் வடக்கு கிழக்கில் 85,000 விதவைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதேவேளை ஐ.நா.வெளியிட்ட அறிக்கை யொன்று இன்னும் பயங்கரமானதொரு புள்ளி விபரத்தை கூறுகின்றது. ஐ.நா.வின் தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் மட்டும் யுத்தத்தால் 49 ஆயிரம் பேர் விதவைகளாகியுள்ளதாகவும் இவர்களில் 35 ஆயிரம் பேர் 30 வயதுக்கும் குறைந்தவர்களென்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கிழக்கில் 49 ஆயிரம் தமிழ் யுத்த விதவைகள் உள்ள அதேநேரம் 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரையிலான சிங்கள யுத்த விதவைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆனால் இந்த சிங்கள யுத்த விதவைகளுக்கு அரசின் பாதுகாப்பு இருக்கிறது. அவர்களுக்காக புனர்வாழ்வு திட்டங்களை அறிவித்து அவர்களின் சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உத்திரவாதம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கிறது ஆனால் தமிழ் விதவைகளுக்கோ எவ்வித சமூகப் பாதுகாப்போ பொருளாதாரப் பாதுகாப்போ எதுவும் இல்லை. என்பதோடு இந்த புள்ளிவிபரங்களும் எண்ணிக்கையும் வன்னிப் போரின் முடிவுக்கு முந்தையது. முள்ளிவாய்க்காலில் மே 18&ஆம் தேதி போர் முடிவுக்கு வந்து மக்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்ட பிறகு கிழக்கை விட இரண்டு மடங்கு விதவைகள் வடக்கில் குறிப்பாக வன்னிப் பகுதியில் அதிகரித்திருப்பார்கள் என்று நாம் நம்பலாம்.அவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று குழந்தைகளுக்கு தாய்கள் அல்லது பெற்றோர்களை உறவினர்களை குழந்தையைக் கூட இழந்து தனிமைப்பட்டுப் போன கைம்பெண்கள். கடும் இந்து ஒழுக்கக் கலாசார வாழ்வைக் கொண்ட தமிழ் மரபில் இப்பெண்கள் சுயமரியாதையான ஒரு வாழ்வை எவ்வாறு வாழ முடியும் என்றோ அவர்களின் எதிர்காலம் குறித்தோ எதுவுமே புரியவில்லை. தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் ரீதியிலான வன்முறைகள் இன்று வரை முகாம்களுக்குள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில். ஆதரவற்ற இப்பெண்களின் பாலியல் சுதந்திரத்தும் சமத்துவத்துக்கும் என்ன உத்திரவாதத்தை யார் வழங்கப் போகிறார்கள்.

நாம் சென்னையில் சர்வ பாதுகாப்போடும் இருக்கிறோம், ஏதோ ஒரு வகையில் உத்திரவாதமுள்ள ஒரு வேலை, அழகான குழந்தை சாயங்காலப் பொழுதை கழிக்க அரங்கங்கக் கூட்டங்கள். கலந்துரையாடல்கள் எல்லாம் நமக்கு இருக்கின்றன. ஒரு பாதுகாப்பான சூழலில் இருந்து கொண்டு இழப்புகள் எதுவுமின்றி ( ஈழத்துக்காகப் போராடி சிறை சென்றவர்களின் தியாகத்தையோ சிறையில் இருப்போரின் தியாகத்தையோ நான் கொச்சைப்படுத்தவில்லை. அது என்னளவில் மரியாதைக்குரியது) இங்கிருந்து கொண்டு ஐந்தாம் கட்ட ஈழப் போர் வெடிக்கும் என்கிறோம். வெடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் நண்பர்களே! போர் குழந்தைகளுக்கு வாண வேடிக்கை காட்டுவதில்லை. அது நெருப்பைக் கொண்டு வந்து கொட்டுகிறது. குழந்தைகளை எரிக்கிறது. நமது மனைவியை, காதலியை, குழந்தையை, தாயை நிர்வாணமாக்கி வன்முறை செய்கிறது. அவர்களை கொடூரமாகக் கொன்றொழிக்கிறது.நிலத்தைப் பிளக்கிறது, மக்களை வீடற்றவர்களாக்குகிறது. பெரும் கூட்டமான மக்களை பைத்தியங்களாக அலைய விடுகிறது. போர் இதை மட்டுமே மக்களுக்குப் பரிசளிக்கிறது. அந்தப் போரின் முடிவில் அவர்கள் வென்றதாக அறிவிக்கிறார்கள். நாமோ முகாம்களுக்குள் மாற்றுத் துணி கூட இல்லாமல் நிற்கிறோம். குழந்தைகள் பசியால் அழுகிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. ஒரு கிரிக்கெட் விளையாட்டின் சுவராஸ்யத்தோடு இதை அணுக முடியாது.இன்னும் பல தசாப்தங்களுக்கு வன்னி மக்கள் இந்த வடுக்களைச் சுமக்க நேரிடும் இந்தக் கொடுமையை அவர்கள் காலாகாலத்திற்கும் நினைத்து நினைத்து மாயும் அளவிற்கு போர் அவர்களை சிதைத்திருக்கிறது. இராணுவ கண்காணிப்பின் கீழ் வாழும் கிழக்கு மக்களின் யாழ்பாண மக்களின் கவலைகளையும் ஆற்றாமைகளையும் புரிந்து கொள்ளும் நாம் வன்னி மக்களை மட்டும் போராடச் சொல்லிக் கேட்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை?

தேவதூதனின் வருகைக்காக,

துளியும் நம்பிக்கையற்று முகாம்களுக்குள் முடங்கியிருக்கும் அம்மக்களுக்கு வாழ்தலுக்குறிய நம்பிக்கையை விதைப்பதே இப்போதைய தேவை. எஞ்சியிருக்கும் அவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர்கள் இந்தியாவின் மீதும் வெள்ளைத் துறைமார்களின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். இன்று அந்த நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது. ஏனென்றால் நடந்த எல்லாவற்ற்க்குமே அவர்கள்தான் சாட்சி. இந்தியாவின் ஆதரவோடு நடந்த கேள்விகளற்ற இந்தக் கொலைகளை இன்று யார் கண்டு கொண்டார்கள். போர் முடிந்த பின் 23&ஆம் தியதி ஹெலிகாப்டரில் இருந்து இறுதிப் போர் நடந்த பகுதியை சுற்றிப் பார்த்த பான்கிமூன் ”கனரக ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான தடையங்களை நான் அங்கே காணவில்லை” என்று இலங்கை அரசுக்கு சான்றிதழ் கொடுத்தார்.இன்றைய ஐநா என்பது அமெரிக்காவின் ஒரு சமாதான முகமூடி பேச வேண்டிய இடத்தில் பேசி மௌனமாக இருக்க வேண்டிய இடத்தில் மௌனமாக இருப்பதெ அதன் வேலை. அமெரிக்க ஏனைய பிராந்திய வல்லரசுகளின் நலன்களைத் தாண்டி ஐநா மக்களுக்காக எதுவுமே செய்யாது எப்பதை இலங்கையில் இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது ஐநா அவை. ஐநாவில் இலங்கைக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்ட விஜய்நம்பியார் குறித்து வெளிப்படையான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவரது சகோதரர் சதீஷ்நம்பியார் ஊதியம் பெற்றுக் கொண்டு இலங்கை இராணுவத்துக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும் போது அண்ணனை எப்படி சிறபுத் தூதுவராக நியமிக்கலாம். இந்த நியாமான கேள்விகளை மேற்குலக ஊடகவியளார்கள் மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னர் சிட்டி பிரஸ் இது தொடர்பாக தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது. விஜய் நம்பியார் தனது முதல் பயணத்தின் பின்னர் ஐநாவின் சமர்பிக்க வேண்டிய அறிக்கையை இந்தியாவின் நிர்பந்தத்திற்குப் பணிந்து சமர்பிக்காமல் போன போது பான்கிமூன் அது பற்றி கேள்வி எழுப்பவில்லை.இனப்படுகொலைகள் நடந்து முடிந்த பிறகு ஐநாவில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான், க்யூபா, போன்ற நாடுகள் சேர்ந்து முறியடித்து இலங்கையை சர்வதேச இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றியது.இலங்கையை காப்பாற்றிய இந்த நாடுகள் எல்லாம் ஒரே அணியில் உள்ள நாடுகளா? சீனாம் க்யூபா போன்ற நாடுகள் கம்யூனிஸ நாடுகள் என்று சொல்லப்படுபவை. ஈரானோ இஸ்லாமியக் குடியரசு தீவீர அமெரிக்க எதிர்ப்பு கொள்கை கொண்ட நாடு. பாகிஸ்தான் இந்தியாவின் பகைநாடு என்று கருதப்படுகிறது. சீனா இந்தியாவின் முரண் நாடு என்று சொல்லப்படும் சூழலில் இலங்கை விவாகரத்தில் இவர்களுக்குள் வந்த இணக்கம் எப்படி ஏற்பட்டது? இடது வலது என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா நாடுகளுக்குமே சந்தை நலன் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது. இந்து மகாச்சமுத்திரத்தின் பதட்டத்தைத் தணித்து தங்களின் இராணுவ பலத்தை அதிகரிப்பதும்தான் இந்த நாடுகளின் நோக்கம்.

எப்படியிருந்தாலும் ஆயுதப் போராட்டத்தின் கசப்பான முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்துள்ள அவலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளத் தவறினால் மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்தவர்களாக ஆவோம். தென் கிழக்கின் ஒரு பயங்கரவாத அரசை எதிர்த்துப் போராடும் வலு தமிழ் மக்களுக்கு இனி வரவேண்டும் என்றால் சிங்கள சமூகத்திலுள்ள நியாயக் குரல்களே அதை உருவாக்க வேண்டும். ஆனாலும் காலம் தோறும் ஏதோ ஒரு சிங்கள் குரல் தமிழ் மக்களுக்காய் பேசியே வந்திருக்கிறது. கொள்கை முரண்கள், தீர்வில் முரண்கள் இருக்கலாம் ஆனால் அந்தக் குரல்களை நாம் நமக்கானதாக மாற்ற வேண்டும். ஏனென்றால் இந்த பேரினவாதத்திற்கு ஏராளமான சிங்கள மக்களும் பலியாகி இருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக லசந்தா கொல்லப்பட்டார். அவரது துணைவியார் சோனாலி சமரசிங்கே  அயல் நாடு ஒன்றுக்கு உயிர் தப்பிச் சென்றிருக்கிறார். சுனந்த தேசப்பிரியே , போன்ற பல ஊடகவியளார்களும் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் போரின் கொடுமையை தொடர்ந்து பேசிவந்தவர்கள். ஒரு பாசிச நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த இவர்கள் வன்னிப் போர் குறித்து பேசியதற்காகவே நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.இம்மாதிரியான மாற்றுக் குரல்களை இனம் கண்டு அவர்களை நமக்கான போராட்டத்திற்கு பயன்படுத்துவதன் மூலமே நாம் வலுவானவர்களாக மாற முடியும்.

பேரினவாதத்தை எதிர்க்கும் போராட்டத்தில் தமிழ் மக்களோடு இணைந்து நின்று வலிவான முறையில் குரல் உயர்த்த வேண்டிய தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் தமிழ் மக்களும் வேறு பட்டு நிற்கிற சூழல் களையப்பட வேண்டும். கடந்த காலத் தவறுகள் களையப்பட்டு கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டும். அதிலிருந்து நாம் வடக்கில் வலுவான அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்க முடியும். பேரினவாதம் மூன்றாவது முறையாக ஒரு ஆயுதக் குழுவின் தலைமையை அழித்துள்ளதன் மூலம் தமிழ் மக்களை வென்று விட்டதாக நினைத்து இப்போது கிழக்கில் உள்ள முஸ்லீம்களை குறிவைக்கிறது. சில ஊடகவியளார்கள் போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் மே மாதத்திற்கு முன்பே கிழக்கு முஸ்லீம்களை சிங்கள அரசு குறிவைக்கிற சூழலை சுட்டிக் காட்டினார்கள். புலிகள் தோற்றுள்ள நிலையில் கிழக்கில் ஜிகாத் குழு தலையெடுக்கிறது என இஸ்லாமிய மக்களை கிழக்கு மக்களை குறிவைத்து தூபம் போடத் தொடங்கி விட்டாகள் சிங்கள பாசிஸ்டுகள். பொது எதிரியை அடையாளம் காண்பதன் மூலம் தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் ஒன்றிணைவதன் மூலமே அரசியல் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என நான் நம்புகிறேன். முள்ளியவாய்க்கால் படுகொலைகள் குறித்து இஸ்லாமிய மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க முன்வருவதோடு பரஸ்பர நம்பிக்கைகளை வளர்த்து தனித்த சக்திகளாக ஒருங்கிணைய முடியும் என நான் நம்புகிறேன்.

கடைசியாக,

உயிரற்ற பிரபாகரனின் உடலை நிர்வாணம் ஆக்கி அதற்கு சேறு பூசி ஒரு கோவணத்தைக் கட்டி கருணாவின் முன் கிடத்தியிருந்தார்கள். சிங்கள இராணுவத்தினர். உயிரோடு பிடிபடாத ஆத்திரம் அதிலே தெரிந்தது. ஆனால் கட்டப்பட்டிருந்த கோவணம் பிரபாகரனுக்கோ தமிழ் மக்களுக்கோ கட்டப்பட்டதல்ல அது ராஜபட்சே சகோதரர்களால் தீவில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு கட்டிவிடப்பட்ட கோவணம்தான். உலகெங்கிலும் போய் பிச்சை எடுத்து போரை நடத்தி முடித்த போது ஒவ்வொரு இலங்கை குடிமகனை வைத்தும் ராஜபட்சே வாங்கிய கடன் தலைக்கு ஐம்பதாயிரத்திற்கும் மேல்.ஊழலும், முறைகேடும், அதிகார துஷ்பிரயோகமுமான பயங்கரவாத அரசு சர்வாதிகாரத்தை மறைக்கத்தான் ராஜபட்சே தமிழ் மக்களைக் காட்டி பெரும்பான்மை மக்களுக்கு போதை ஊட்டி அவர்களை கொண்டாட்டக் கழிப்பில் ஆழ்த்தியிருக்கிறார். போதை தெளியும் போது கோவணம் கட்டப்பட்டிருப்பதை அம்மக்கள் உணரக் கூடும்.

விரைவில் ‘புலம்’ வெளியீடாக வர இருக்கும் ‘பேரினவாதத்தின் ராஜா’ நூலில் இருந்து சுருக்கப்பட்ட ஒரு பகுதி.

Exit mobile version