இவ்வாறானதோர் சூழ்நிலையில் இன நல்லிணக்கமும் கலப்புத் திருமணமும் என்ற சிந்தனை ஓர் அரசியல் தீர்வை எதிர்பார்த்து பயணிக்கும் இலங்கைக்கு எவ்வாறு பொருத்தமானது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகவுள்ளது.
போர் முடிவுற்றதன் பின்னர் தமக்கு என ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சி, இந்த எதிர்பார்ப்புக்கு இம்மியளவும் இடைவெளியினைத் தராத என்ற நிலையில் தெற்கில் உள்ள ஜனநாயகத்தினை எதிர்பார்த்த சக்திகளுடன் இணைந்து தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தினை மாற்றத்தினை ஏற்படுத்தினர். இவ் ஆட்சி மாற்றத்தின் ஊடாக தெற்கில் நிலவிய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டு விட்டன. எனினும் வடக்குக் கிழக்கில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பிற்குரிய அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்கள் கிடப்பில் தான் உள்ளன. தற்போது “அரசியலமைப்பு மாற்றத்தின் வாயிலாக அரசியல் தீர்வைக் காண முயற்சிக்கின்றோம். அதனை யாரும் குழப்ப வேண்டாம்”; என பாராளுமன்றத்தினை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவது தொடர்பான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் கேட்டுள்ளார்.
இவ்வாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாட்டில் ஏகப்பட்ட சிக்கல்கள் நீடித்துக்கொண்டே தான் இருக்கின்றன.
ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழர்கள் இருக்கையில், சிங்கள மக்கள் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து வருகின்ற கருத்துக்கள் என்ன பிரதிபலிப்பைக் கொண்டுள்ளன என தமிழர்கள் கூர்ந்து அவதானிக்கின்றனர். காரணம், நல்லிணக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் வெகுவான தொடர்புள்ளமையே ஆகும்.
இப்படியானதோர் சூழ்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்துக்கள் அரசியல் சலனத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவர் இனம், சாதி, மதம் என்ற வேறுபாடுகள் பார்க்கப்படாமல் கலப்பு வாழ்க்கை நாட்டில் உண்மையான சமாதானத்தினையும் ஐக்கியத்தினையும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருந்தார். அவர் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், புத்திக்கூர்மையான சந்ததி உருவாக்கத்திற்கு கலப்புத் திருமணங்களே சிறந்தது எனவும் தெரிவித்திருந்தார். இனமுரண்பாடு உள்ள ஓர் அரசியல் தளத்தில் இவ்வாறான ஓர் உரை தாக்கங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதகின்றது.
இது இவ்வாறிருக்க சிக்கல்களுக்கு வெளியில் நிற்போh,; ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில் அவர்களது விருப்பே முக்கியமானது. அவர்கள் சட்டம் ஏற்றுக்கொள்ளும் திருமணத்திற்கான விதிகளை பூர்த்தி செய்திருப்பின் இணைவில் என்ன பிரச்சினை? என கேள்வி எழுப்பலாம். அதுவல்ல இங்கு பிரச்சினை. இங்கு அடிப்படைகள் வேறு. சிக்கல் யாதெனில், இனக் கலப்பு இனவாக்கத்தில் காலப்போக்கில் அரசு அல்லது அரசாங்கத்தின் ஊக்குவிப்புக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிலவுமாயின் அது திட்டமிட்ட இன மாற்றமாக அமைந்து விடும் என்பதே பிரச்சினை. காரணம், சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் அரச அங்கீகாரம் இந்த நாட்டில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இனவாதிகளின் ஆதிக்கமும் நாட்டில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆளுநர் உள்நோக்கம் இன்றி இவ்வாறானதோர் கருத்தினை முன்வைத்திருந்தாலும் கூட காலப்போக்கில் இவ் விடயம் சனத்தொகை அடிப்படையில் குறைவாக உள்ள தமிழ்த் தேசியத்தினை சனத்தொகை அடிப்படையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள தேசியம் உள்வாங்கும் அபாய பொறிமுறையாக மாறிவிடும்.
ஓர் மாகாண ஆளுநர் தெரிவித்த கருத்திற்கு இவ்வளவு விவாதம் என்ற வினாவும் எழலாம்! வடக்குக் கிழக்கில் மாகாண ஆளுநர்கள் கடந்த (மகிந்த) ஆட்சியில்; பெரும் அதிகாரங்களுடன் தமிழ் மக்கள் விடயத்தில் பெரும் முட்டுக் கட்டையாகவே இருந்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கவில்லை. நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகளைப் பிரயோகித்தனர். ஆளுநர்களாக நியமிக்கப்படுவோர் முன்னாள் இராணுவ அதிகாரிகளாக இருந்துள்ளனர். இதனால் நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர்கள் வடக்கின் அரசர்கள்; என்ற தோரணையுடனேயே பணியாற்றினர். அவர்களின் முடிவுகளில் ஜனநாயம் காணப்படவில்லை. எனினும,; ஆட்சி மாற்றத்தின் பின்னர் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் சிவில்துறை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இவ்வாறாக, மக்கள் நீண்டகாலம் ஆளுநர்களின் அடக்குமுறைகளுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டமையினால் ஆளுநர் பதவியினை இன்றும் வடக்கு மக்கள் சற்றுப் பயமாகவே பார்க்கப் பழக்கப்பட்டு விட்டனர். மேலும், மாகாண சபைகள் விடயத்தில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளைக் காட்டிலும் அதிகாரம் கொண்டுள்ளார் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், இராணுவத்தினருக்கும் தமிழ் யுவதிகளுக்கும் இடையில் திருமணங்களை நடத்தியிருந்தது. இவ்வாறு செய்ததன் மூலம், வடக்கில் இராணுவத்தினருடன் சேர்ந்து மக்கள் வாழ்கின்றனர்… வடக்கில் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டது என்றனர். அவைகள் எல்லாம் போலியான நடவடிக்கைகள் என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். இவ்வாறாக இராணுவத்திற்கு சில தமிழ் பெண்களை திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் மாற்றங்கள் ஏதும் சாதகமாக ஏற்படவில்லை. சில பிரச்சினைகளே கண்முன் தெரிகின்றன. நாட்டின் இன முரண்பாடுகளில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் எவ்வாறு நல்லிணக்கத்திற்குப் பாதகமாக அமைந்ததோ அதுபோன்ற தொரு பாதிப்பினையே காலப்போக்கில் கலப்பு இனவாக்கத்திற்கான திருமணங்களும் ஏற்படுத்தும். இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பினைத் தோற்றுவிக்கும். மேலும் நாட்டின் வடமேல் மாகாணம் மற்றும் நீர்கொழும்பு போன்றவற்றில் தமிழ் மக்கள் எவ்வாறாக காலப்போக்கில் இன மாற்றம் கண்டார்களோ அது போன்றதொரு நிலைமையினையும் வேறு இடங்களிலும் தமிழர்களிடத்தில் ஏற்படுத்தும்.
அடிப்படையில் இனங்கள் தமது அடையாளங்களுடன் கூடிய வாழ்க்கை முறையொன்றை இந் நாட்டில் வாழ எதிர்பார்க்கின்றனர். அவ்வாறானதோர் சூழ்நிலையில், இன நல்லிணக்கத்திற்கு கலப்பு இனவாக்கம் என்பது தீர்வல்ல. அது ஊக்குவிக்கப்பட முடியாதது. எனினும், மானசீகமாக தமிழர் ஒருவரும் சிங்களவர் ஒருவரும் புரிந்துணர்வுடன் திருமணத்தில் இணைவதை தடுக்க வேண்டியதில்லை. அரசின் ஊக்குவிப்பு மற்றும் சலுகை அடிப்படையில் கலப்பு இனத் திருமணத் திட்டங்கள் இருக்கக் கூடாது. நல்லிணக்கம் என்பது இனங்களைப் பொருத்தவரையில் அமைதியான வாழ்வுக்கு அவசியமானது. எனவே நல்லிணக்கம் கட்டியெழுப்பப் படவேண்டும். அதற்காக இனப்பிரச்சினைத் தீர்வு முன்வைக்கப்படும் அதேவேளை வரலாற்றுத் தவறுகள் நிவர்த்திக்கப்படவேண்டும்.
தமிழ் மக்கள் பொதுவாக நல்லிணக்கம் என்ற விடயத்தினை எப்போதும் கௌரவமான சமாதானத்திற்கு அவசியமானது என்ற உயர் ஸ்தானத்திலேயே வரவேற்கின்றனர். எனினும் அந்த நல்லிணக்கன உத்திகளிலும் தமிழர்கள் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது. அதாவது நல்லிணக்கம் என்பது வெறுமனே சிங்கள மக்களிடம் தமிழ் மக்கள் பொறுத்துக்கொண்டு வாழ்வதற்கான உத்தியாக அமையக் கூடாது என்பதுவே அவ் அவதானத்திற்கான அவசியமாகும். எனவே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல் என்ற அவாவில் பொருத்தமற்ற விடயங்களை பகிரங்கப்படுத்துவது நல்லிணக்கத்திற்குச் சாதகமான ஒன்றாக அமையாது.