Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்து ராம் கொடுத்த போலிச் சான்றிதழ் :காவியா

இந்து ராம் தென்னிந்தியாவின் முற்போக்கு முகமூடி. மார்க்ஸ்சிஸ்டுகளின் கொள்கை வகுப்பாளர். பத்திரிகைத் துறையில் பல சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய மாமேதை. உணர்வுகளின் சுதந்திரம் குறீத்து நீண்டகாலமாக பேசுகிறவர் என்பதோடு வெறுப்புணர்வுக்கு எதிரான முகமாக தமிழகத்திலுள்ள மார்க்சியர்களால் போற்றப்படுபவர். தமிழகத்தில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் இந்து ராம் குறித்த பிம்பங்கள் இவைகள்தான். கடந்த காலத்தில் சந்திரிகாவிடன் இருந்து “லங்கா ரத்னா” விருதைப் பெற்றுக் கொண்டவர் சிங்கள இன வெறி பயங்கரவாத அரசின் வேலைத் திட்டத்தின் கீழ் தனது இந்துப் பத்திரிகையை நடத்தி புலிகளுக்கு எதிராக தொடர்ந்து தமிழகத்திலும் இந்தியாவிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர். பல் வேறு தருணங்களில் ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி தன் பார்ப்பன அரசியலை மார்க்ஸிய முகமூடியோடு முன்னெடுப்பவர். கடந்த காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த பொய்ச் செய்திகளை பரப்பி சுய இன்பம் அனுபவித்த இந்த இந்து ராம் இப்போது ஈழப் போராட்டத்தின் கசப்பான முடிவுகளால் உச்சக் கட்ட சந்தோசத்திற்கு சென்றிருக்கிறார். இலங்கை அரசால் தனக்குக் கிடைக்கும் அனுகூலங்களுக்கு கைமாறாக தனது இந்துப் பத்திரிகையை பயன்படுத்திய ராம். இப்போது நேரடியாக களத்தில் இறங்கி சிங்கள பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வேலை பார்க்கத் துவங்கிவிட்டார்.

கொடூரமான துயரத்தோடு வன்னிப் போர் முடிந்து அங்கிருந்து வெளியேறிய மக்கள் பல முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மிருகங்களைக் கூட அடைத்து வைக்க யாரும் பயன்படுத்தாத முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களுக்குள் அன்றாடம் கொலைகள், பாலியல் வன்முறைகள், கடத்தல், பட்டினிச்சாவுகள், சித்திரவதைகள் எனப் பலவாறாகவும் நடந்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலம் சந்திக்காத இந்த பேரவலத்தை தமிழ் மக்கள் சந்தித்து முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் போது அந்த முகாம்கள் குறித்தோ அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தோ எந்த ஊடகங்களும் செய்தி சேகரிக்க அங்கு அனுமதிக்கப் படவில்லை. முகாம்களுக்குள் இலங்கை இராணுவத்தால் அழைத்து வரப்பட்டவர்கள் வட இந்திய ஆங்கில ஊடகவியளார்களே. இவர்கள் இலங்கை அரசுச் செலவில் வந்து செல்கிறார்கள். மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு முகாம்களுக்குள் இருப்பதாக செய்திகள் கொடுக்கிறார்கள். இறுதிப் போரின் போதும் போர் முடிவுக்கு வந்த பிறகும் இந்த ஆங்கில ஊடகங்கள் தமிழக மக்கள் மீது எவளவு கொடூரமான இனவாதத்தைக் கக்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். கையலாகநிலையில் கைவிடப்பட்ட ஒரு இனம் குறித்த பொய்யான பிரச்சாரங்களை ஆங்கில ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்ட போது ஆங்கில ஊடகங்களின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக எதிர்பிரச்சாரம் செய்ய வேண்டிய தமிழக ஊடகங்களோ அமைதி காத்தது. பலரும் துணைத் தூதர் அம்சாவிடம் சரணாகதி அடைந்திருந்தார்கள். ஆனால் அதை எல்லாம் நாம் கண்டித்து எழுதினோம். ஆனால் இவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றோ? ஏன் இவ்வாறு இந்தியாவின் ஒரு பகுதி தமிழக தமிழ் மக்கள் மீது பாகுபாடு காட்டுகிறார்கள் என்றோ என்றாவது நாம் சிந்தித்திருப்போமா? ஆனால் அந்த நிகழ்வை உடைக்க இப்போது ஒரு சூழல் கனிந்திருக்கிறது.

யார் இந்த இந்து ராம்? ஏன் இப்படிச் செய்கிறார்.

சந்திரிகாவிடம் இருந்து சிங்கள ரத்னா விருதைப் பெற்றுக் கொண்டவர் என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இவர் ஆங்கிலம் படித்த பத்திரிகையாளர்களை உருவாக்குகிறேன் என்று ஏஷியன் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் என்றொரு நிறுவனம் நடத்துகிறார். இவரது இந்து பத்திரிகைதான் இந்த கல்வி நிறுவனத்தை நடத்துகிறது இங்கு ஏராளமான சிங்களர்கள் படிக்கிறார்கள். இலங்கை அரசு வருடம் தோறும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியும் ஊக்குவிக்கிறது. இங்கு படித்து வருகிறவர்கள்தான் இன்றைய ஆங்கில ஊடகங்களின் அடுத்த தலைமுறை இவர்களே இலங்கை தொடர்பான கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இவர்களை மிக சாதாரணமாக எடை போட்டால் நாம்தான் முட்டாள்கள்.பெரும் நிதிப் பின்னணியோடு அரசு அதிகாரப் பலம், ஊடக சங்கங்களின் பலம் என எல்லா பலங்களோடும்தான் இவர்கள் கருத்துரிமை பேசுவார்கள். இதுதான் கடந்த இருபதாண்டுகளாக தமிழக ஊடகங்களின் நிலை. ஆனால் இது தமிழகத்தோடு முடிந்து போகிற ஒன்றல்ல.

கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக தமிழகம் கொதித்த போது 15 பேர் ஈழத்துக்காக உயிர் துறந்தார்கள். தமிழகமே கொந்தளித்தது என்பதும் உண்மைதான். ஆனால் அடக்குமுறை எப்போது துவங்கியது என்றால் முதன் முதலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்களுக்காக ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்தது. தமிழகத்தில் அதுதான் மிகப் பரந்த அளவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த முதல் போராட்டம். அதை ஒட்டி தமிழகத்தில் போராட்டம் வெடிக்க கருணாநிதியின் திமுக அரசு தவிர்க்க முடியாமல் முதன் முதலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருந்த அன்று காலை வெளிவந்த இந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி என்ற ஒரு பத்திரிகையாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். The dangers of tamil chauvinism என்கிற தலைப்பில் வெளிவந்த அந்தக் கட்டுரை திட்டமிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் அன்று இந்து பத்திரிகையால் வெளிக் கொணரப்பட்டது. சரி ஆங்கில அறிவாளிகள் அல்லவா? ஏதாவது விஷயம் இருக்கும் என நினைத்து வாங்கிப் பார்த்தால் ஈழத்தமிழர் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு தொடர்பாக ஹிந்து பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் ராம் அவர்களுக்கும் எழுந்துள்ள கொதிப்பை உணர்த்தியது. அந்தக் கொதிப்பில் உள்ள நியாயத்தை பார்ப்பதற்கு முன் மாலினியின் எழுத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

# ஈழம் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தல் இந்திய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவீரவாதமாக உருப்பெறும் தன்மை இந்த திரட்சிக்கு உண்டு. தெருவுக்குத் தெரு இது (ஈழ ஆதரவு) வளர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியும், மதிமுகவும் இதை உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

# வட இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கு (தமிழகத்தில்) கேம்பெய்ன் மாதிரி நடத்துகிறார்கள். எல்லோரையும் திரட்டி விட்டார்கள். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளின் தலைமையகத்தை பிடிக்க இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. இலங்கை ராணுவம் இது வரை இப்படி ஒரு வெற்றியை அடைந்ததில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து விடுவார்கள். இவர் யார் என்றால் பாரதப் பிரதமரை படுகொலை செய்ய மூளையாகச் செயல்பட்டவர்.

# தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் இங்கிருந்து கொண்டு காஷ்மீரிகளையும் ஜிகாதிகளையும் ஆதரிப்பதற்கு சமமாக இருப்பதுபோல் இருக்கிறது.

# இதை(ஈழத்தை) ஆதரித்தால் அதை (காஷ்மீரை) ஆதரிக்கத்தானே வேண்டும். இதையும்( ஈழத்தையும்) அதையும் (காஷ்மீரையும்) ஒன்றாக வைக்க முடியுமா?

# புலிகள்தான் தென்கிழக்காசியாவில் தீவீரவாதத்தை துவங்கியது. அவர்களால்தான் அகதிகளாக தமிழர்கள் தமிழகம் வருகிறார்கள். அவர்களின் பிரச்சனையில் இங்குள்ளவர்களை இன்வால்வ் ஆக்குகிறார்கள்.

# இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு 83லிருந்து வெறும் இருபது வருட வரலாறே தெரியும்.

# இவர்கள் புலிகளின் மாஸ்டர் மைன்டாக செயல்படுகிறார்கள். ஒரே இரவில் இவர்கள் விழித்துக் கொண்டார்கள்.

# இந்திய மத்திய அரசு கடந்த பத்து வருடமாக சக்ஸசாக போய்க் கொண்டிருக்கிறது. (ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது போல புரிந்து கொள்ளவும்) இந்நிலையில் இந்த மாஸ்டர் மைன்டுகளை வளரவிட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்து.

இப்படியாக எழுதப்பட்ட அந்தக் கட்டுரைதான் முதல் ஒடுக்குமுறை அவர்கள் இந்த எழுச்சியை எதிர்பார்க்க வில்லை என்பதோடு. இதை தடுக்கவும் முனைந்தனர். அதுவே அந்தக் கட்டுரையின் நோக்கம் இந்துவின் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்துதான் அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஏவப்பட்டது. அது மட்டுமல்லாமல் வட இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்து ராமும், சோ ராமசாமியும், சு. சாமியும் என்ன சொல்கிறார்களோ அதிலிருந்தே தங்களின் பார்ப்பன நிலைப்பாட்டை எடுப்பார்கள். எப்போதும் பார்ப்பன நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்து ராம்தான் வட இந்திய ஆங்கில ஊடகங்களின் மாஸ்டர் மைண்ட். கடைசி வரை இதுதான் தொடர்ந்தது.

கடைசியில் ஒட்டு மொத்த தமிழினமும் கதறித்துடித்த போது பெரும் சந்தோசக் களியாட்டங்களில் ஈடுபட்ட பெரும்பான்மை சிங்கள இனத்தைப் போலவே இந்து ராம் தலைமையிலான இந்திய ஆங்கில ஊட்கக் கும்பல் அதை ஒட்டி இலங்கை அரசின் விருந்தினர்களாக இலங்கைக்கு சென்று வந்தனர். இப்போதும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி இப்போது இலங்கை அரசின் விருந்தினராக போய் வந்திருக்கும் இந்து ராம் இராணுவ அதிகாரிகள் சூழ முகாம்களைப் போய் பார்த்திருக்கிறார். கருப்பும், கந்தலுமாக, உணவில்லாமலும் உடுக்க துணியில்லாமல், தண்ணீர் இல்லாமலும், செம்மண் தரையில் படுத்துக் கிடக்கும் அந்த வன்னி விவசாய மக்களைப் பார்த்து விட்டு வெளியில் வந்த இந்து ராம். “இந்த முகாம்கள் சிறப்பான முறையில் இருப்பதாகவும் இங்கு குழந்தைகள் மிக மகிழ்ச்சியுடன் உல்லாசமாக இருப்பதாகவும் இம்மக்களுக்கு அதிபர் ராஜபட்சே சிறந்த எதிர்காலத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும். தெரிவித்திருக்கிறார் என்பதோடு. முகாம்கள் குறித்த தவறான தகவல்களைக் கொடுத்த சர்வதேச பத்திரிகையாளர்களை கண்டிக்கவும் செய்திருக்கிறார் இந்த முற்போக்கு அறிவுஜீவி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐநா வெளியிட்ட தகவல்களின் படி கிழக்கில் மட்டும் 49,000 கணவனை இழந்த விதவைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வன்னிப் போர் முடிந்துள்ள நிலையில் முகாம்களில் இருக்கும் பொது மக்கள் , சிறைகளுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் என வன்னியில் மட்டும் ஏறத்தாள ஐம்பதாயிரம் விதவைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்கள். ஒன்றரை லட்சம் மக்கள் கையையோ காலையோ இழந்தவர்கள். இதுதான் முகாம்களின் நிலை இதை எல்லாம் மறைத்து உண்மையை வெளிக் கொண்டு வருகிற வெகு அபூர்வமான பத்திரிகையாளர்களைக் கூட கண்டிக்கிற இந்த இந்து ராம். பாசிச பயங்கரவாத இலங்கை அரசிற்கு இந்த சான்றிதழைக் கொடுத்து எந்த விருதைப் பெறப் போகிறார் என்று தெரியவில்லை. உடலாலும் உள்ளத்தாலும் ஊனமாக இன்னும் சில தலைமுறைகளுக்கு வாழப் போகும் ஒரு இனம் குறித்த இந்து ராமின் கொடூரக் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மனித குலம் வெட்கித் தலைகுனியும் படியான இலங்கைச் சூழலை ஆதரிப்பது என்பதற்கு இந்து ராம் பதில் சொல்ல வேண்டிய காலம் ஒன்று வரலாம் வராமலும் போகலாம். இங்குதான் நாம் அபத்தச் சூழலுக்குள் வாழ்கிறோம்.

நாம் எல்லோரையும் தண்டிப்போம் என்கிறோம் தவறு செய்கிறவரன், பெண்களை பாலியல் வன்முறை செய்தவர்கள், குழந்தைகளைக் கொன்றவர்கள். ஆயுதம் கொடுத்தவர்கள் என எல்லோருமே தண்டிக்கப் பட வேண்டும் என நினைகிறோம். ஆனால் நாம்தான் வரலாற்றில் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுகிறோம். பாதிக்கப்பட்ட நமக்கே உலகம் கண்ணீரையும் துன்பத்தையும் பரிசளிக்கிறது. தவறு செய்தவன் சந்தோசமாக இருக்கிறான்.ஆயுதம் கொடுத்தவர்களுக்கோ, அதற்கு துணை போனவகளுக்கோ வெற்றி மேல் வெற்றியும் பதவி மேல் பதவியும் கிடைக்கிறது.ஆனாலும் இவைகளைக் கண்டு நாம் சோர்ந்து ஒதுங்க வேண்டியதில்லை. ஒரு சமூகம் அழிவின் விழிம்பில் சிக்கியிருக்கும் சூழலில் கூட சில குரல்கள் நம்பிக்கையளிக்கின்றன. அந்தக் குரல் ஒரு பெருபான்மை பேரினவாத சமூகத்திற்குள்ளிருந்து வருவதும் அவை முற்போக்குக் கருத்தாக இருப்பதும் ஆறுதல் அளிக்கிறது. இன்று நாம் ஒரு லசந்தாவைத் தேடுகிறோம்.இன்று இந்த நாட்டின் பாசிச சூழலுக்குள் உண்மைகளை உறத்து ஒலிக்க லசந்தாக்கள் தேவைப்படுகிறார்கள். ராம்கள் அல்ல!

கடைசியாக தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை, ஈழத் தமிழர்களின் நம்பிக்கையை இழந்த இலங்கை பாசிஸ்டுகளின் அடிவருடிகளில் ஒருவருமான ஆறுமுகத் தொண்டைமானும், துணைத்தூதர் அம்சாவும் அடிக்கடி தமிழக ஆட்சியாளர்களைச் சந்திப்பதாகத் தெரிகிறது. எப்படி இந்து ராமை அவர்கள் அழைத்துச் சென்று நற்சான்றிதழ் வாங்கிக் கொண்டார்களோ. அது போல கருணாநிதியின் வாயாலும் அவர்களுக்கு நற்சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆகவே அவர்கள் தமிழகத்தில் இருந்து ஒரு குழுவை அழைத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிகிறது. கருணாநிதி இலங்கை அரசிற்கு கொடுக்கும் சான்றிதழ்கள் குறித்து எமக்கு கவலையில்லை. ஆனால் வன்னியில் இருப்பவர்கள் கொல்லப்பட்ட மக்களில் மிச்சம் மீதி இருப்போர் என்பதோடு. தமிழகத்தின் பஜாரி அரசியலுக்கு அவர்களை பலியாக்கிவிடாதீர்கள் என்பதோடு தமிழகத்திலிருந்து அனுப்பப்படப் போகும் குழுவில் அனைத்துக் கட்சிகள், உண்மையான பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள். ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என பல தரப்பினரையும் கலந்து பேசி முடிவு எடுங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இந்திய அரசும், தமிழக அரசும் வழங்கிய நிவாரண உதவிகளை முறையாக இலங்கை அரசு முகாங்களில் உள்ள மக்களுக்கு வழங்கியதா என்பதை தமிழக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் அது இந்திய மக்களின் பணங்கள். தமிழக மக்களின் பணங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதை விடுத்து கேள்வி கேட்பவர்களை எல்லாம் உதாசீனப்படுத்தி. ஒற்றுமை ஓதாதீர்கள். அது கொஞ்சம் அபத்தமானது.

Exit mobile version