இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள பெருந்தேசிய வாதிகளின் அடக்குமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழகத்தில் தமிழர்கள் தமது வேறுபாடுகளை எல்லாம் மறந்து எழுந்து நின்று குரல் கொடுத்திருக்கிறார்கள். தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளித்து வரவேற்றிருக்கிறார்கள்.
உலகம் முழுதும் பரந்து வாழும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு, அவர்களின் பிரதேச முரண்பாடு, சாதி முரண்பாடு, வர்க்க முரண்பாடுகளை எல்லாம் தாண்டி தீர்மானகரமான ஒரே நம்பிக்கை தமிழகத்தமிழர்கள் தான்.
ஆனால் தமிழக மக்களின் வாழ்வலங்களின் மீது கட்சி அரசியல் நடாத்தும் அரசியல் வியாபாரிகளுக்கோ, ஈழத் தமிழர்களின் அழுகுரல்களும், மரண ஓலமும் வெறும் வாக்குத் திரட்டியாகவும் காய் நகர்த்தலுக்கான ஆயுதமாகவுமே பயன் பட்டிருக்கிறது. ஒரு மனித கூட்டத்தின் மரணக் குரலை முன்வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும் தமிழகத்தின் வாக்குக் கட்சி அரசியல் வாதிகள் மௌனமாயிருந்தாலே மக்கள் தெருவுக்கு இறங்கி படுகொலைகளைத் தட்டிக்கேட்பார்கள். வன்னிப் படுகொலை நடந்துகொண்டிருந்த போது கருணாநிதி அரசு பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் போராட்டங்கள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தது. மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் அவதானமாகச் செயற்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவர்கள் எல்லாருமே பயங்கரவாதிகள் என்றும் பகிரங்கமாக அறிவித்துவந்த ஜெயலலிதா வாக்கு வேட்டைக்காக புதிய வேடமிட்டதெல்லாம் போக, இவர்களோடு தேர்தல் கூட்டு வைத்துக்கொண்ட தொல்.திருமாவளவன், வை.கோ போன்றவர்களின் வேடங்களும் கலைந்து போயின.
இவர்கள் அனைவருமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அதிகார சக்திகள் என்பதை எல்லா முற்போக்கு சக்திகளும் மறுபடி மறுபடி எச்சரித்து வந்தனர்.
தவிர, தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசியவர்களுள் குறித்த பாத்திரம் வகித்த மற்றுமொரு கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. நாடளுமன்றக் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளான CP(I), CP(M) ஆகியவற்றை போலிக் கம்யுனிஸ்ட்டுக்கள் என மாவோயிஸ்டுக்களும் இடது அமைப்புக்களும் திட்டும் போதெல்லாம் இவர்களொலெல்லாம் அதி தீவிரமாகத் திட்டித் தீர்க்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றும்.
அதிலும் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஒரு தமிழர் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்கட்பிரிவைச் சார்ந்தவர். அணுசக்தி ஒப்பந்தம், தலித் அடக்குமுறைக் போன்ற பல முக்கிய பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுத்த ஆளுமை மிக்க தலைவர். தலித் மக்களின் பிரச்சனைகளிலும் துணிந்து புதிய கருத்துக்களை முன்வைத்தவர். இலங்கைத் தமிழர் இனப்படுகொலையின் அனைத்து சூத்திரதாரிகளும் மூன்று மாதகாலத்துள் ஒரு லட்சம் மக்களைக் கொன்று போட்டுவிட்டு இன்றும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும் சூழ் நிலையில் இந்திய அரசியல் வாதிகள் அரசியற் சட்ட வரை முறைகளுக்கு உட்பட்டாவது இதையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டார்களா என்ற ஆதங்கம் உந்தித் தள்ள நான் முதலில் சந்தித்த இந்திய அரசியல் வாதிதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தூ.ராஜா. இலங்கை இனப்படுகொலையை ராஜபக்ஷ அரசு திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டிருந்த போதும் முகாம்களில் மக்கள் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போதும் பல தடவைகள் அமைச்சரவையில் குரல் கொடுத்தவர் டீ.ராஜா.
ராஜாவின் தொலைபேசி எண்ணைத் தேடிய போது ஒன்றிற்கு மேற்பட்ட நண்பர்கள் உடனடியாகவே அவற்றைக் கொடுத்து உதவியிருந்தார்கள். சந்திப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அவரைத் தொலைபேசியில் அழைத்த போது எனக்கு நேர்காணல் ஒன்றை வழங்குவதற்குச் சம்மதித்திருந்தார். ஆனால் நேரில் அவரைச் சந்தித்தபோது எந்தக் காரணத்தைக் கொண்டும் நேர்காணல் வழங முடியாதென்றும் நாங்கள் பேசவிருப்பதை எங்கும் எழுதவோ பதிவுசெய்யவோ கூடாதெனக் கேட்டுக்கொண்டர். ராஜாவிற்கும் எனக்கும் இடையிலான உரையாடல் என்பது சமூகப் பிரச்சனைகளை பற்றி மட்டுமானதே. இரகசிய உடன்படிக்கைக்கானதோ அல்லது வியாபார ஒப்பந்தத்திற்கானதோ அல்ல.
இந்த அடிப்படையிலேயே ராஜாவுடனான உரையாடலைப் ஒலிப்பதிவு செய்துவிட வேண்டுமென்றும் அதனை எங்காவது எழுத்தில் பதிவுசெய்துவிட வேண்டுமென்ற உந்துதலும் ஏற்பட்டது.
சுமார் பத்து மணியளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மானில அலுவலகத்தில் உரையாடல் ஆரம்பமானதுமே கே.பி யின் கைது பற்றிப் பேசவாரம்ப்பித்தோம். உடனேயெ இடைமறித்த ராஜா, தனக்குக் கே.பி யாரென்றே தெரியாதென்றும் அதனைப்பற்றிப் பேசுவதில் பயனில்லை என்றும் தெரிவிக்க இலங்கப்பிரச்சனையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்பாக பேச்சுக்களை ஆரம்பித்தேன். இந்திய மேலாதிக்கமா? இலங்கைத் தமிழர்கள் தான் அவ்வாறு சொல்கிறார்கள் என்று ஆரம்பித்தார் ராஜா.
ஜனநாயகம் என்பதே மேலாதிக்கம் தான்! பாக்கிஸ்தானிய ஜனநாயகம், பங்களாதேஷிய ஜனநாயகம், இலங்கை ஜனநாயகம் இவற்றையெல்லாம் விட இந்திய ஜனநாயகம் தாழ்ந்ததல்ல. ஆக ஜனநாயகம் என்றால் மேலாதிக்கமும் இருக்கும்.
ஆனால் இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் அதைப்பற்றித் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய முதலாளிகளுகு எதிராகப் பேசுங்கள் அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. இந்திய மேலாதிக்கம் என்று ஒரு நாட்டிற்கு எதிராகப் பேசுவதற்கு உங்களுக்கு(இலங்கைத் தமிழர்களுக்கு) எந்த உரிமையும் கிடையாது” என்று தனது முதலாவது கம்யூனிஸக் குண்டைத் தூக்கி இலங்கைத் தமிழர்களின் தலையில் வீசினார் ராஜா.
நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்ற அடிப்படையில் ….. என்று நான் தயக்கத்துடன் தொடர்ந்த போது, ராஜா சற்று உணர்ச்சிவசப்படு இடை மறித்தார்.
“நீங்கள் எல்லாம் எப்படிக் கம்யூனிசத்தைப் பற்றிப் பேச முடியும்? பொது உடமை இயக்கங்களை வடக்கிலும் கிழக்கிலுமிருந்து அழித்தவர்கள் நீங்கள் தான், நான் ரஷ்யா வழியாக நெல்லியடி வரை சென்று வந்தவன். பீட்டர் கெனமனைச் சந்திதிருக்கிறேன். புலிகளுக்குப் பயத்தில் மல்லிகை டொமினிக் ஜீவா கொழும்பில் மறைந்து வாழந் போது சந்தித்திருக்கிறேன். உங்களுக்கு வசதி ஏற்படுகிறபோது இந்தியாவிற்கெதிராகவும் இனப்படுகொலை பற்றியும் பேசும் நீங்கள் யாழ்ப்பாணத்தில் பொதுவுடமை வாதிகள் புலிகளால் அழிக்கப்பட்ட போது எங்கு போயிருந்தீர்கள்.” என்று தனது உணர்ச்சிகளை இந்திய மேலாதிக்கத்திற்கு ஆதரவாக வெளிப்படுத்திய ராஜாவை இடை மறித்த நான், நான் புலிகள் சார்பாகப் பேச வரவில்லை. என்று மறுபடி பேச முனைந்த போது, புன்னகைத்துவிட்டு மறுபடி தொடர்ந்தார்.
செல்வாக்கு மிகுந்த இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார். எனக்கும் ராஜீவிற்கும் எந்த உடன்பாடும் இல்லை ஆனால் இவ்வாறு தேர்தல் சமயத்தில் மக்கள் தலைவன் ஒருவன் கொல்லப்பட்டது தொடர்பாக ஈழத்தமிழர்கள் கண்டித்திருக்கிறார்களா? இன்றும் கூட இந்தியா இலங்கைகையில் சித்திரவதை முகாம்களில் இருப்பவர்களுக்கு இலங்கை அர்சின் ஊடாகப் பண உதவி செய்வதை மறுக்கமுடியாது ஆனால், இவ்வுதவிகள் மக்களுக்குச் சென்றடைகிறதா என்று கேள்வியெழுப்புபவர்கள் நாங்கள் தான். இந்தியாவைப் பற்றியும் அதன் அரசியலைப் பற்றியும் பேசுவதற்கு முன்னர் அந்த மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள். இனிமேல் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பதை விடுத்து நீங்கள் கடந்த காலத்தைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.” என்று தொடர்ந்த போது இடை நிறுத்திய நான் இலங்கை அரசின் அமைப்பு மயப்படுத்தப்பட்ட இனவாதம் பற்றியும் ஆசியப் பொருளாதார நலன்கள் நிகழ்த்திய இனப்படுகொலை தொடர்பாகவும் பேச விழைந்த போது இடை நிறுத்திய ராஜா,
“இப்படித்தான் “அன்டன் பாலசிங்கம் அவரது வெள்ளைக்கார மனைவியுடன் தமது அலுவலகத்திற்கு வந்து சுய நிர்ணய உரிமை பற்றி லெனினும் ஸ்டாலினும் பேசியிருக்கிறார்கள் என்று எமக்கு அறிவுரை கூறினார்கள் உங்களுக்குத் தேவையேற்படும் போது மட்டும் மார்க்சியத்தைத் துணைக்கழைத்துக் கொள்கிறீர்கள்” என்று தொடர்ந்தார்.
இதுவரைக்கும் இந்திய வாக்குக் கட்சி அரசியல் வாதிகள் பேசியதெல்லாம் இலங்கை அரசின் மீதான எந்த அழுத்தத்தையும் பிரயோகிப்பதாக அமையவில்லை. ஆக, அனுதாபமுள்ள தமிழ் வாக்காளர்களைத் தமக்கு ஆதரவாகத் திசை திருப்பவே பயன்பட்டிருக்கிறது.
இந்த அடிப்படையில் முழு உலகமுமே மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க மனிதப்படுகொலையை நடாத்தி முடித்திருக்கும் பேரின வாதிகளை குறைந்த பட்சம் சர்வதேசச் சட்டங்களுக்கு முன்னால் தண்டனை வாங்கிக் கொடுக்கும் செயற்பாடானது தடுப்பு முகாம்களில் வதைபடும் மக்கள் மீதான அரச பயங்கர வாதத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தக் கூடும் என்ற நோக்கத்தில் இது தொடர்பாக ராஜாவிற்கு முன்னதாக ம.க.இ.க உடனும் இவர்கள் போன்ற இடது குழுக்களுடனும் பேசியிருக்கிறேன். இவர்களுடனெல்லாம் முன்னதாகப் பேசியிருந்ததை ராஜா தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் சட்ட நடவடிக்கை குறித்து ராஜா கூறிய பதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குட்படுத்துவதாக அமைந்தது.
“எமது போராட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் வரை முறை உண்டு. இந்தியப் பிரதமராக இருந்தவரைக் கொன்றவர்களையும் இந்தியாவிற்கெதிராகச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும் எவ்வாறு நியாயப்படுத்தி இலங்கை அரசிற்கெதிராக சர்வதேச நீதிமன்றம் செல்வது. நீங்கள் உங்களுடைய பிரச்சனை என்று வரும் போது மட்டும்தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சர்வதேசக் கட்சியாகப் பார்க்கிறீர்கள். எங்களுடைய பிரச்சனைகள் பற்றி நீங்கள் புரிந்து கொள்வதில்லை” என்றார்.
இனி ராஜா என்னிடம் புலம்பெயர் தமிழர்கள் குறித்து விசாரிக்கிறார். வேலை நிமித்தம் வேற்று நாடுகள் செல்வதென்பது வேறு, சொந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ முடியாமல் வேற்று நாடுகளில் வாழ்தல் என்பதன் வலியைத் தான் புரிந்து கொள்வதாகக் கூறிய ராஜா, மேற்கு நாடுகளின் சிறைகளிலிருப்பவர்களில் பெரும் பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் தான் என்று தான் கேள்வியுற்றதாகக் கூற அது தவறானது என நான் திருத்துகிறேன்.
இப்போது, பேசியவாறே ராஜாவுடன் தெருவரை வந்துவிட்டேன். உலகமயம் ஏற்படுத்திய அழுக்குகளின் துர் நாற்றம் நடு நிசியிலும் ஏற்படுத்திய அருவருப்புடன் ராஜாவிடமிருந்து விடைபெறும் போது இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்களை எண்ணி நெஞ்சம் கனத்தது.
ராஜா என்னுடன் பேசியதெல்லம் உண்மையான அவரது கருத்துக்களா அல்லது ஏதாவது உள் நோக்கமுடைய தந்திரோபாய நடவடிக்கையா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இவையெல்லாம் இரகசியமாக வைக்கப்படுவதற்கு நாம் துப்பறியும் நாடகம் எதையும் நடாத்தவில்லை. சாட்சியின்றிச் செத்துப் போன இலட்சம் மக்களின் துயர வரலாறு. அதை நடத்திமுடித்த் இந்திய இலங்கை அரசுகளின் குரூரம் குறித்த விசாரணை.
இவ்வுரையாடலின் போது என்னோடு பிரசன்னமாயிருந்த இன்னொரு எழுத்தாள நண்பர் நான் இப்பதிவை எழுதுவதைத் தீவிரமாக எதிர்த்ததையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
என்னுடனிருந்த எழுத்தாளர் உட்படபல சமூக உணர்வுள்ள நண்பர்களின் வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாது இப்பதிவை எழுதுவது இன்றைய அரசியற் சூழலில் அவசியமானதாகவே கருதுகிறேன்.
இது தூ.ராஜா மீது சேறு பூசுவதற்காக எழுதப்பட்டதல்ல மாறாக அவர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து தனது ஈழத்தமிழர்கள் குறித்த போராட்டத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே பதியப்படுகிறது.என்னைப் பொறுத்தவரை திருமாவளவன், பழ.நெடுமாறன், வை.கோ, கருணாநிதி போன்ற அரசியல் வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது ராஜாவிடம் இன்னமும் ஒரு குறைந்த பட்ச நேர்மை உறைந்து கிடப்பதாகவே நம்பிக்கைகொள்கிறேன், தவிர அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் இனியொரு முறை யாருடைய சொந்த அரசியல் இலாபங்களுக்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது.