Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மத்திய அரசும் இலங்கைத் தமிழர்களும்:வெகுஜனன்

  இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்திய கொள்கையையே எப்பொழுதும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. தென் ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்கும் நோக்குடனேயே அதன் கொள்கை வகுப்பு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென்னாசிய நாடுகள் ஒவ்வொன்றும் தனது பெரியண்ணன் பாத்திரத்தை ஏற்று நடக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்துகிறது. அதற்கு மறுத்தால் ஏதாவது ஒரு காரணங் காட்டி மிரட்டல், தாக்குதல் என இறங்குகிறது. இதற்கான உதாரணத்தை இலங்கை கடந்த காலத்தில் கண்டிருக்கிறது. இலங்கையின் இந்து சமுத்திர அமைவிடம் இப் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் வழங்குகிறது. உலக மேலாதிக்க அமெரிக்காவிற்கும் மேற்குலகுக்கும் இந்தியாவிற்கும் தேவைப்படும் தீவு இலங்கை நாடாகும். ஜே.ஆர். தன் அமெரிக்க விசுவாசம் காரணமாக இத் தீவை அமெரிக்காவிற்குத் தாரை வார்க்க முயன்ற வேளையிலேயே இந்தியாவும் இந்திராவும் இலங்கை விடயத்தில் அக்கறைப் பட்டனர். அதற்குக் கிடைத்த சந்தர்ப்பமே 1983ல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையாகும். அதன் பேரில் இந்தியா இலங்கையில் நுழைந்து கொண்டது. இந்தியா அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.

இந்தியா ஏன் அக்கறைப் படுகிறது என்பதை ஆராயவோ தூரநோக்கில் அதனை எடை போடவோ முடியாத பழைமைவாதப் பிற்போக்கு தமிழர் தேசியவாதத் தலைமை குறுந் தேசியவாத நிலைப்பாட்டில் இந்தியாவை விசுவாசத்துடன் நம்பியது. 1971ல் இந்திராவின் தலைமையில் இந்திய ராணுவம் பங்காளதேசத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்தெடுத்துத் தனிநாடாக்கியது போன்று இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழத்தைப் பிரித்துத் தரும் என நம்பப்பட்டது. பாவம், ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்களைத் தமிழர் கூட்டணியினர் நம்பவும் வைத்தனர். அவ் வேளை உண்மைகளையும் யதார்த்த நிலைமைகளையும் எடுத்துக் கூறி தமிழீழம் சாத்தியமற்றது என்பதை உறுதிபடக் கூறிய மாக்சிச லெனினிசவாதிகளின் தர்க்க ரீதியான கொள்கைகளை இத் தமிழ்த் தேசியவாதிகள் எள்ளி நகையாடினர். மாக்சிச சோ~லிச நிலைப்பாடுகளைத் தூற்றி இந்திய விசுவாசத்தை உச்சமாக வெளிப்படுத்தினர். இன்னொரு தரப்பினர் இஸ்ரேலை உருவாக்கிய மேற்குலக அமெரிக்க விசுவாசத்தில் மூழ்கினர்.

இச் சூழலில், இந்தியா தனது பிடியை முழு இலங்கை மீதும் கொண்டிருக்கக் கூடிய நிலைப்பாட்டை வலுப்படுத்தி வந்தது. அதற்கு இன்றைய மகிந்த சிந்தனை அரசு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவின் பொருளாதார ஊடுருடுவல் வேகமாக இலங்கைக்குள் பாய்ந்து வந்துள்ளது. விரைவில் இலங்கை இந்தியாவின் வலுவான ஒரு கொலனி நாடு என்ற இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதற்குத் தடையாக இருக்கும் எதனையும் இந்தியா சகித்து கொள்ள மாட்டாது. இந்த இடத்தில் இலங்கையின் பேரினவாத அரசினதும் இந்திய மேலாதிக்க அரசினதும் குவிமையம் ஒன்றாகவே உள்ளது. இதன் செயற்பாட்டைக் கடந்த மூன்று வருட மகிந்த சிந்தனை அரசின் நடவடிக்கைகளில் இருந்து கண்டு கொள்ள முடியும். இலங்கை இனப் பிரச்சினையில் அமெரிக்க மேற்குலக யப்பானியச் செல்வாக்கையும் தலையீட்டையும் இந்தியா அறவே விரும்பவில்லை. இது இப் பிராந்திய ஆதிக்கப் போட்டியின் உள்ளர்ந்த சாரம்சமாகும். புலிகள் இயக்கத்தின் சர்வதேச நேசசக்திகள் அமெரிக்க மேற்குலகில் கால் பதித்துள்ளதை இந்தியா ஏற்கனவே விளங்கிக் கொண்டது. நோர்வேயின் அனுசரனை முயற்சியின் உள்ளார்ந்தம் எத்தகையது, அதில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரம் எத்தகையது என யாவற்றையும் விளங்கிக் கொண்ட இந்தியா தனது காய்களை நகர்த்த ஆரம்பித்தது.

அதற்கு மகிந்த சிந்தனை அரசு தகுந்த இடத்தை வழங்கியது. இந்திய மேலாதிக்க இராஜதந்திரம் பொருளாதார, அரசியல், ராணுவ விடயங்களின் ஊடாகச் செயலாற்றத் தொடங்கியது. நோர்வே அனுசரணை அரங்கில் இருந்து அகற்றப் பட்டது. அதன் தொடர்ச்சியாக ராணுவ அரசியல் விவகார நெருக்கங்களின் ஊடாக வன்னி மீதான தாக்குதல்களும் வெற்றிகளும் புலிகள் இயக்கத் தடையாகவும் விரிவு பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் அமெரிக்க மேற்குலகம் இந்தியாவுடன் நட்பு வலுவடைந்த நிலையில் இலங்கையில் எதுவும் செய்ய முடியாமல் திண்டாட்ட மௌனம் காத்து வருகிறது. இலங்கை அரசின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம் என்ற முழக்கத்தின் முன் அமெரிக்க மேற்குலகம் அடக்கி வாசித்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே புலிகள் இயக்கத்தை அவர்கள் தடை செய்து விட்டனர். இறுதியாக இலங்கையும் தடை செய்து கொண்டது.

இந் நிலையில் தமிழ் நாட்டு ஆதரவு மட்டுமே தமிழர் தரப்புக்கு ஆறுதல் தரும் குரலாக ஒலித்து வருகிறது. ஆனால் அந்தக் குரல் நேர்மையான ஒருமுகப் படுத்தப்பட்ட குரல் அல்ல என்பது தமிழ்நாட்டுக் குத்துக்கரண அரசியலைப் புரிந்து கொண்டவர்களுக்குத் தெரியும். தமிழ் நாட்டுக் கட்சிகளால் இந்திய மத்திய அரசிடம் மன்றாட முடியுமே தவிர அதை வற்புறுத்திக் காரியம் எதனையும் சாதிக்க முடியாது. இதுவரை அவ்வாறு நடந்ததும் இல்லை. இனிமேலும் அவர்களால் நடத்தவும் முடியாது.

இலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்திய மத்திய அரசு ஒருபோதும் முன்வர மாட்டாது. ஏனெனில் அதன் சைகையின் மீதே வன்னி யுத்தம் ஆரம்பிக்கப் பட்டது. ஆயத, ராணுவ உதவிகள் வழங்கப் பட்டன. இத்தனைக்குப் பின்பும் மத்திய அரசையும் மாநில அரசையும் தமிழர் தரப்பு கெஞ்சி நிற்பது சுயசார்புப் போராட்டக் கொள்கை அற்ற பலவீனத்தின் வெளிப்பாடாகும். அடித்தாலும் உதைத்தாலும் காறி உமிழ்ந்தாலும் நீங்களே எங்கள் எசமானர்கள் எனத் தமிழர் தரப்பினர் நடந்து கொள்வது ‘தன்மானத் தமிழினத்தை” இழிவு செய்ததாக அமையாதா? எவ்வாறாயினும் தமிழர் தரப்பிலிருந்து இத்தகைய எதிர்ப்பார்ப்பு நிலைப்பாட்டை மாற்ற முடியாது. அது அவர்களது பிற்போக்கு அரசியலில் ஊறி உறைந்து போன விடயமாகும். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்க கூட்டமைப்பினர் எத்தனை தடவைகள் சென்று திரும்பினர். ஒரு ஐந்து நிமிடம் கூடச் சந்திக்க முடியவில்லை. கருணாநிதிக்கு வாக்குக் கொடுத்து பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகக் கூறினாராம் சோனியா காந்தி. ஆனால் இங்கு வந்து தமது உள் விவகாரங்கள் பற்றிப் பேசித் திரும்பியவர் சிவசங்கர மேனன். இவற்றின் உள்ளார்ந்தங்களைப் புரிந்து கொள்ளாது கூட்டமைப்பினர் மீண்டும் மீண்டும் மன்றாட்டப் பாடல் பாடுவது இலங்கைத் தமிழர்களுக்கு அவமானமே அன்றி வேறில்லை. இத்தகைய போக்கிலிருந்து தமிழர் தலைமைகள் விடுபடமாட்டா. ஆள்மாறி ஆள், இந்திய விசுவாசிகளாகத் தம்மை தகவமைத்துக் கொள்ளவே செய்வர். அந்தளவுக்கு இந்திய மேலாதிக்கம் சகல நிலைகளின் ஊடாகவும் ஊடுருவி நிற்கின்றது.

இந் நிலைக்கு எதிராகத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து நேர்மையும் தூரநோக்கும் கொண்ட அரசியல் சக்திகள் எழ வேண்டும். கடந்த காலப் பட்டறிவுகள் படிக்கப்பட வேண்டும். தூரநோக்கில் சுயநிர்ணய உரிமையை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் எவ்வாறு வென்றெடுப்பது என்பது பற்றியும் அதற்கான கொள்கை கோட்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெளிவான முடிவுகளுக்கு வரவேண்டும். நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பது தெளிவுடன் வகுக்கப்பட வேண்டும். தேசிய இனங்களுக்கான சுயாட்சி, சுயாட்சி உள்ளமைப்புகள் அரசியல் தீர்வாக உருவாக்கப் படுவதன் மூலம் ஐக்கியமும் பலமும் சுபீட்சமும் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை தெற்கின் சாதாரண சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். எந்தவொரு போராட்டமும் வெறுமனே பலவான்கள் நவீன ஆயுதங்கள் மூலம் மட்டும் வெற்றி பெற மாட்டாது. மக்களின் போராட்டமாக அமைய வேண்டும். அவர்களது சொந்தத் தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துப் அவர்களே போராட்டத்தின் நாயகர்களாக மாற வேண்டும். அதை விடுத்து அவர்களுக்காக ஒரு சிலர் எவ்வளவு வீரர்களாக இருந்தாலும் போராடி வெற்றி பெற முடியாது. இது தான் வரலாறு கற்பித்துத் தரும் பாடமாகும். ‘மக்களே, மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி” என்பது மறக்கப்பட முடியாத வரலாறுப் பாடமாக அமைய வேண்டும். உண்மையான மக்கள் போராட்டத்தில் மக்கள் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை. இறுதி வெற்றி அவர்களுக்கு உரியதாகவே இருக்கும். அதற்குரிய தெளிவானதும் சரியானதுமான போராட்டப் பாதையில் பயணித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதற்குரிய அடிப்படைகளைத் தேடிக் கொள்வது இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் தேவைப்படும் ஒன்றாகும்.

Exit mobile version