Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் : தோழர் மருதையன் அறிக்கை

“”மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், இந்திய மக்களின் உடைமைகள் மீதும் உரிமைகள் மீதும் ஒரு உள்நாட்டுப் போரை மத்திய அரசு தொடுத்திருக்கிறது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்று அழைக்கப்படும் நடவடிக்கையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரை இராணுவத் துருப்புகளும், விமானப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திரம், ஒரிசா, ஜார்கண்டு, சட்டிஸ்கார், மே.வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைப்புறங்களைத் தழுவியிருக்கும் தண்டகாரண்யா காட்டுப் பகுதியின் பழங்குடி மக்களை வெளியேற்றி விட்டு, கனிமவளங்கள் நிறைந்த அந்தப் பகுதியை டாடா, அம்பானி, மிட்டல் போன்ற பெரும் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சொந்தமாக்கும் நோக்கத்தில் தான் இந்தப் போர் நடத்தப்படுகிறது.

இந்தப் போரை அறிவித்திருக்கும் தற்போதைய உள்துறை அமைச்சர் திரு. ப.சிதம்பரம், ஏற்கெனவே ஸ்டெரிலைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குநராகவும், என்ரான், நோவோர்ட்டிஸ், ஜெனரல் எலக்டிரிக் போன்ற கம்பெனிகளுக்கும் மற்றும் பல சுரங்கத் தொழில் நிறுவனங்களுக்கும் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தவர். இன்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் துணை இராணுவப்படைகளை, சுரங்கத்தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூலிப்படையாக மக்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார் என்பதே உண்மை.

இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போரில் பாரதிய ஜனதா கட்சி முதல் மார்க்சிஸ்டு கட்சி வரையிலான தேர்தல் அரசியல் கட்சிகள் அனைவரும் மத்திய அரசுரடன் கைகோர்த்து நிற்கின்றனர். தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் நாட்டின் பொதுச்சொத்துகளை தனியார்மயமாக்குவதிலோ, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பழங்குடி மக்களையும் விவசாயிகளையும் வெளியேற்றுவதிலோ, எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்குவதிலோ இந்தக் கட்சிகளிடையே எவ்வித கொள்கை வேறுபாடும் இல்லை. நாட்டின் இறையாண்மையையே அமெரிக்கா போன்ற அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகின்ற இத்தகைய மறுகாலனியாக்க கொள்கைகளை எதிர்த்து நக்சல்பாரி இயக்கத்தினர் மட்டுமே நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். எனவேதான் நக்சல்பாரி இயக்கத்தை ஒடுக்குவதென்பது மத்திய அரசு அறிவித்துள்ள இந்தப் போரின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

இந்தப் போருக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் நாங்கள் மேற்கொண்டு வரும் இயக்கத்துக்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். தொழிற்சங்க உரிமை பறிக்கப்பட்டு அன்றாடக் கூலிகளாக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக வெளியேற்றப்பட்ட விவசாயிகள், மீன்பிடி உரிமை பறிக்கப்படும் மீனவர்கள், சுயநிதிக் கல்விக்கொள்ளையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், வெள்ளைக்காலர் கொத்தடிமைகளாக உழலும் ஐ.டி துறை ஊழியர்கள், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் என்று சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களும் இந்தப் போர் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் போர்தான் என்பதை உணர்ந்து வருகிறார்கள்.

இந்தப் போர், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு இலாபவெறி சூதாட்டம். மக்களைப் பொருத்தவரை இது ஜீவ மரணப் போராட்டம். எத்தகைய அடக்குமுறைகள் வரினும் இந்தப் போராட்டம் தொடரும்.

மாவோயிஸ்டு ஒழிப்புப் போர் என்ற பெயரில் மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை நிறுத்து!

பன்னாட்டு முதலாளிகள், இந்தியத் தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் மக்கள் விரோத புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்! சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதை நிறுத்து!

பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அனைத்தையும் கைவிடு!

என்று அரசைக் கோருகிறோம். இந்தக் கோரிக்கைகளுக்காக நக்சல்பாரி இயக்கத்தினர் நடத்தும் போராட்டங்களில் அணிதிரளுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மருதையன்,

பொதுச்செயலாளர்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

110/63,என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை 600 024. கைபேசி:94448 34519

Exit mobile version