Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய சுதந்திர தினம் இன்று : நயனி

15.08.1947

இரவில் சுந்ததிரம் வாங்கினோம்
இன்னும் விடியவில்லை என்று
எப்போதோ ஒரு விடியாத பொழுதில்
ஒரு கவிஞனின் பாடலின் முடியாத
வரிகளை இருளில் தேடுகிறேன்.

எங்கோ தொலைவில் மின்னலாய்
இருளில் குருடாகிப்போன கணளைச் சுடும்
ஒவ்வோர் ஒளியும்
எனது இந்தியக் கனவுகளைச்
சுட்டெரிக்கும் நெருப்புகளாக மட்டும்..
இன்னும் விடியவில்லை..

இன்னொரு நாள் தூரத்தே,
ஒரு இந்தியக் கனவான்..
நாம் நவீனமாகிறோம் என்றான்..
எனக்குப் புரியவில்லை..
என் தேசத்தின் இதயத்திலிருந்து
இரத்தம் வடிந்தபோது தான்
அதன் ஆழத்தை அறிந்துகொண்டேன்…
அங்கே பச்சைக் காடுகள்
செந்நிறமாகின ..
அமைதி சூழ்ந்த காடுகளில்
மரணம் பதித்த துப்பாக்கிகள் கிளப்பும்
தீயின் வெளிச்சமாய்..
இன்னும் விடியவில்லை..

எனது தேசத்தின் தெற்கு மூலையில்..
ஈழத் தெருக்களில்
அந்த மெலிதான இரவின் நிலவு
பாலாய் ஒளிர்வதற்குப் பதில்
இரத்தமாய் வடிந்தது..
என் இந்திய கனவுகளின்
குரல்வளை நெரிக்கப்பட்ட
ஒவ்வொரு கணங்களும்
ஆயிரம் பிணங்களைச்
சுட்டெரித்த ஒளியில்,
ராஜபக்சேயும், கருணாவும், மன்மோகனும்
கட்டித்தழுவினர்..
பொஸ்பரஸ் குண்டுகளிலிருந்து
குழந்தயைக் காப்பதற்காய்
பங்கரில் ஒளித்துக்கொண்ட
அந்தத் தாய்
புலியெனக் கொல்லப்பட்ட வேளை
அவள் கண்களில் ஒளிர்ந்த
கோபக் கனல்…
இன்னும் விடியவில்லை..

நாகாலாந்திலும் காஷ்மீருலும்..
சுடர்விட்டு எரியும்
விடுத்லைத் தீயை
அணைப்பதற்குப் பயிற்றப்பட்ட
எனது தேசத்தின்
இயந்திரங்கள்..
இன்னும் விடியவில்லை..
காந்தி தேசத்தின்
வல்லரசுக் கனவில் உட்கந்து
பசித்த வயிற்றோடு
நெருப்பெரியாத அடுப்பை நோக்க
அலறுகின்ற
ஒவ்வொரு குழந்தையின்
கண்ணீரும் வறுமைக்கோட்டைக்
கரைத்துக் கொண்டிருந்தது
இன்னும் விடியவில்லை….
கவிஞனின் பாடலின் முடியாத
வரிகளை இருளில் தேடுகிறேன்…

Exit mobile version