மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதால் இந்தியாவை தீப கற்பம் என்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் கடல் மிக முக்கிய பங்காற்றும் நிலையில் இந்தியாவில் கடலுக்கென்று தனி அமைச்சகம் இல்லை. கடலோரங்களை மாநில அரசுகளே இதுவரை கையாண்டு வந்த நிலையில் இந்திய துறைமுகச் சட்டத்திருத்தம் 2021 கடல் மீதான மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
கடலோரங்களில் அமைந்துள்ள சிறிய துறைமுகங்கள் மூலம் கிடைத்த வருவாய் மாநில அரசுகளுக்கு சென்ற நிலையில் இப்போதைய சட்டம் ஒட்டு மொத்தமாக சிறிய பெரிய அனைத்து துறைமுகங்களையும் தனது கைக்குள் கொண்டு வருகிறது. இதி சிறிய துறைமுகங்களையும் தன் கைக்குள் கொண்டு வர திட்டமிடுகிறது மத்திய அரசு. இதற்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். முன்னதாக மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஏ.வ வேலு தன் எதிர்ப்பையும் பதிவு செய்தார்.
“1908ஆம் ஆண்டு இந்திய துறைமுகங்கள் சட்டப்படி துறைமுகங்கள் திட்டமிடுதல், மேம்படுத்துதல், வரையறைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது. இதில், திருத்திய வரைவு இந்திய துறைமுகச் சட்டம் 2021 மசோதாவானது இந்த அதிகாரங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்கக் கூடியது.
இந்த வரைவின் விதிகளின்படி கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமமானது சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாக செயல்பட உள்ளது. இக்குழுமத்தின் கட்டமைப்பும் ஒன்றிய அரசின் அதிகாரிகளை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன” என்றார்.
ஜி.எஸ்.டி வருவாய் உட்பட பல்வேறு வருவாய்களை மத்திய அரசு மாநிலங்களிடம் இருந்து எடுத்து விட்ட நிலையில் மாநிலங்கள் வருவாயின்றி தடுமாறி வருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு போதுமான நிதி உதவிகள் செய்யாத நிலையில் துறைமுகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து விட்டால் மாநிலங்கள் நிதி நிலை மிக மோசமாக வீழ்ச்சியடையும்.