Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா இவர்களுக்கானது!

கொரோனா பெருந்தொற்று காரணமான ஊரடங்கு, பொருளாதார  மந்தம், விலைவாசி உயர்வு என கோடிக்கணக்கான இந்தியர்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டுள்ளார்கள். கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளார்கள். சிறு தொழில்கள் நசிந்து ஏராளமானோர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளார்கள்.

பள்ளிகளில் இருந்து இடை நிற்றல், வறுமை காரணமாக தற்கொலைகள், குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு, இளம் வயது திருமணங்கள் என  இந்தியாவில் வறுமை காரணமாக பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும், ரிச் இந்தியா நிறுவனம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 9 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

இவர்கள் சொத்து மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவு கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது.கொரோனா பரவுதலுக்குப் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து செல்வந்தர்களுக்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகக் கடும் இழப்பு ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் 28% வீழ்ந்து 3,30,000 கோடியாகக் குறைந்தது. அதன் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக், கூகுள், சில்வர் லேக் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டால் மதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த நான்கு மாதங்களில் ரிலையன்ஸ் அதிபரின் சொத்துகளின் மதிப்பு 85% உயர்ந்தது. அதாவது, இந்தக் காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 2,77,000 கோடி அதிகரித்து, 6,58,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்திலும் ரிலையன்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்ததும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு சில நிறுவனப் பங்குகளின் மதிப்பு இந்தக் காலகட்டத்தில் இரு மடங்கு அதிகரித்ததும்கூட இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த லிஸ்ட்டின் மூலம் தெரிய வந்திருக்கும் மிக சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், லாக்டவுன் ஆரம்பத்திலிருந்து முகேஷ் அம்பானி மணிக்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது

‘ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹருண் இந்தியா ரிச் லிஸ்ட் 2020’ பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டவர்கள் 828 பேர். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும். அதோடு இந்த 828 பேரில், 627 பேரின் சொத்துகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக 75 பேர்கள், இம்முறை பட்டியலிலேயே இடம் பெறவில்லை. முந்தைய பட்டியலில் இடம் பிடித்திருந்தவர்களில் 6 பேர் இறந்துவிட்டனர்.

பெண்களைப் பொறுத்தவரை 32,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், கோத்ரேஜ் குழுமத்தைச் சேர்ந்த ஸ்மிதா வி கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார்.

இவரை அடுத்து, பயோகான் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா 31,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்த 828 பேர் பட்டியலில், 21 பேர் 40 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். இவர்களில், 17 பேர் சுயமாகச் சம்பாதித்து, முன்னுக்கு வந்தவர்கள். பட்டியலில் இடம்பெற்றுள்ள 828 பேரின் மொத்த சொத்து மதிப்பு 60.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 10.29 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மோடியின் ஆட்சியில் அதானி,அம்பானி,  கிரண் மஜூம்தார் போன்ற தொழிலதிபர்கள் அரசின் அரவணைப்பில் ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். இவர்களுக்கு பிற நிறுவனங்கள் ஒடுக்கப்படுகின்றன.

இந்த கோடீஸ்வரர்கள் அனைவரும் மோடியின் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version