இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கொள்ளை நோய் போல பரவி வருவதாக தெரிகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனைகளில் குவிந்து வருவதும். அவர்கள் சிகிச்சைக்காக காத்திருக்கும் போதே மரணிப்பதும் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீதியோரங்களில் பிணங்களை வைத்து காத்திருப்பதுமாக வட இந்திய மாநிலங்கள் முழுக்க கொரோனா ஒரு அவலமாக மாறி வருகிறது. இந்து ஐய்ரோப்பிய நாடுகளில் முன்னர் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற கொள்ளை நோயை நினைவூட்டுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது.மகாராஷ்டிர மாநிலத்தில் நிலமை மோசமடைந்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை அமல் செய்துள்ளது. ஆனால் ஒவ்வொரு மின் மயானத்திலும் நாளொன்றுக்கு 60 முதல் நூறு வரையிலான உடல்கள் எரியூட்டப்படுகின்றன. பலரும் உடல்களை வைத்துக் கொண்டு வெளியில் காத்திருக்கும் நிலை. மருத்துவமனைகளில் நிலையோ பெரும் சிக்கலானதாக மாறி வருகிறது.
மகாராஷ்டிரம், குஜராத், டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் கற்பனை செய்ய முடியாத அளவு வேகம் எடுத்துள்ளது. தமிழகத்தில் நிலமையும் அதுதான். தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில் இது தொடர்பான நீதிமன்ற வழக்கொன்றில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நிலமை கைமீறிச் சென்றுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் நிலமை சீராக உள்ளது. ஆனால் வரும் வாரங்களில் நோயின் தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சம் அனைவரிடமும் பரவி உள்ளது.
பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அங்குள்ள மின் தகன மயானம் ஒன்றில் இடைவிடாமல் சடலங்களை எரித்தன் விளைவாக அந்த மின் மயானமே எரிந்து நாசமாகி விட்டது. சூரத் நகர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.
பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உடல்களை மொத்தமாக வைத்து எரிக்கிறார்கள். இப்படி எரியூட்டும் மயானங்களில் விறகுத் தட்டுப்பாடு உள்ளதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடிப்படை வசதிகள் அற்ற அரசு மருத்துவமனைகளில் சாவு எண்ணிக்கை கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துச் செல்வதால் அரசுகள் திணறி வருகிறது.