உலக அளவில் கொரோனா தொற்றில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா கொரோனாவை கட்டுப்படுத்தி விட்ட நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை லட்சக்கணக்கான உயிர்களை காவு கொள்ளுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம்,போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அவலக்காட்சியாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் திணறும் நிலையில் ஆக்சிஜன் தேவைப்படுகிறவர்கள் திண்டாடி வருகிறார்கள். மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் உறவினர்கள் அவர்களாகவே ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சென்று சிலிண்டர்களை வாங்கிச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் மருத்துவனைகள் நிரம்பிவழிவதால் பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியில் இருக்கும் சூழல், இன்னொரு பக்கம் ஒரே படுக்கையில் இருவர் அல்லது மூவரை படுக்க வைத்து சிகிச்சையளிக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது.
இந்த அவலங்கள் வட இந்திய மாநிலங்களில் நிகழ்ந்து வந்தாலும் இந்திய அரசு மட்டம் இந்துத்துவத்தை தீவிரமாக பின்பற்றுவதில் கவனமாக உள்ளது. பல லட்சம் சாமியார்கள் பங்கேற்றுள்ள ஹரித்துவார் கும்பமேளாவுக்கு மோடி அரசு எச்சரிக்கையையும் மீறி அனுமதி கொடுத்துள்ளது.
இன்னொரு பக்கம் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி போன்றோர் தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்து விட்ட நிலையில் பாஜக இன்னும் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா தொற்றின் பாதிப்பு வட மாநிலங்களை பதம் பார்த்து வருகிறது.