சென்னை, அக்.29-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பது மட்டுமே மனநிறைவை தரும். அதைவிட்டுவிட்டு குண்டுவீச்சு நடக்கும் இடத்தில் உணவுப் பொருள்களை வழங்குவோம் என இந்தியாவும் இலங்கையும் அறிவித்திருப்பது கபட நாடகம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை ராணுவத்தினர் விமானங்களின் மூலம் குண்டுகளைப் போட்டும், ஏவுகணைகளின் மூலம் நடத்தும் தாக்குதல்களால் ஒவ்வொரு நொடியும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இலங்கைத் தமிழ் மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் ஒரே நோக்கத்திற்காக, இலங்கை அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை உடனே, நிறுத்தி போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென்றும், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையையும், தமிழ்நாடு மக்கள் சார்பில் வற்புறுத்தி வந்தோம்.
இந்திய அரசு, இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை எடுத்துக்கூறி வலியுறுத்தி போரை நிறுத்துமாறு வேண்டுமென்றும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து அனுப்பிட அனுமதியும் கேட்கப்பட்டது.
பல நாட்களுக்குப் பிறகு தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசிடம் வற்புறுத்தியதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து பாஸில் ராஜபக்சேவிடம் இந்தியா வற்புறுத்தியதா என்பது பற்றியும், அதை பாஸில் ஏற்றுக் கொண்டாரா என்பது பற்றியும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
போர் நிறுத்தம் பற்றி அந்த சந்திப்பில் பேசப்பட்டதா என்றே தெரியவில்லை.
இலங்கை அரசின் சார்பில் போர் நடத்தி வெற்றி பெற்ற பின்னர் தீர்வுக்கு ஆலோசனை கூறப்படும் என்றே கூறுகிறது.
இது பற்றியும் தமிழக முதல்வரோ, வெளி விவகார அமைச்சரோ திட்டவட்ட பதிலைத் தரவில்லை.
ஏற்கனவே இலங்கைக்கு தந்த ஆயுத உதவி போதாதென்று இப்போது உணவுப் பொருட்களையும் இந்திய அரசு கொடுக்க இருக்கிறது. 800 டன் உணவு, மருந்துப் பொருட்களை ராஜபக்சே மூலம் தான் அனுப்பப்பட உள்ளன.
தலைக்கு மேல் குண்டு விழும் இடத்தில் எப்படி பால் வினியோகிக்க முடியும்?. நாம் அனுப்பும் உணவும் மருந்தும் போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
எனவே, இதில் கபட நாடகம் தான் அதிகம் உள்ளது. குண்டுவீசும் இடத்தில் குண்டு தாக்காத வகையில் குடை ஏதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?.
இலங்கைக்கு அரசிய் கட்சிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆன்மீகவாதிகளை அங்கு அனுப்பி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு இலங்கை அரசு தயாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
காயம்பட்ட தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழக மருத்துவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது சிங்களர் யாரேனும் காயம்பட்டிருந்தாலும் சிகிச்சை பெறலாம்.
ஆனால், ராஜபக்சே மூலம் ஒரு குண்டூசியைக் கூட தர நாங்கள் தயாராக இல்லை. அவரை நம்ப முடியாது.
இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி விழிப்பு பெற வேண்டும். தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.
இப்போது வெளியிடப்பட்டுள்ள நிதி, உணவு, மருந்துவ உதவி குறித்த அறிவிப்புகள் எந்த மனநிறைவையும் தரவில்லை. போர் நிறுத்தம் அறிவிப்பது மட்டுமே மனநிறைவை தரும்.
உடனே போர் நிறுத்தவும், துன்பப்படுவோர்க்கு உதவிட அனுமதி என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.
பல நாட்களுக்குப் பிறகு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்த இந்தியாவின் வெளி விவகார மந்திரி, போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசிடம் வற்புறுத்தியதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கை அரசின் சார்பில் போர் நடத்தி வெற்றி பெற்ற பின்னர் தீர்வுக்கு ஆலோசனை கூறப்படும் என்றே கூறுகிறது. இது பற்றியும் தமிழக முதல்-அமைச்சரோ, வெளிவிவகார மந்திரியோ திட்டவட்ட பதிலைத் தரவில்லை. எனவே, இந்த அறிவிப்புகள் எந்த மனநிறைவையும் தரவில்லை. உடன் போர் நிறுத்தவும்-துன்பப்படுவோர்க்கு உதவிட அனுமதி என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்ïனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும்.
இவ்வாறு தா.பாண்டியன் அறிக்கையில் கூறியுள்ளார்.