03.12.2008.
தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவதாக கூறி கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் நேற்று முன்தினம் 24 பேர் கொலை செய்யப்பட்டனர்.
கிழக்கை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு பல குழுக்கள் அங்கு செயற்படும் நிலைமையை அரசாங்கம் தனது நலனுக்காக உருவாக்கிவிட்டுள்ளது. இந்தியாவின் தேவைக்காக இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துகின்றது. புலிகளை இந்தியா உருவாக்கியது. அது தனது நலனுக்காகவே அவ்வாறு செய்தது.
இலங்கையில் இந்தியா தலையிட்டு திருகோணமலை துறைமுகம், சம்பூர், புல்மோட்டை மற்றும் காங்கேசன்துறை சீமெந்து நிறுவனங்களை பெற்றுள்ள நிலையில் இதனை பிரித்து மேலும் நன்மைகளை பெறுவதற்காகவே அதிகாரங்களை வழங்கச் சொல்கின்றது. இதற்கு இடமளிக்க முடியாது.
இலங்கையில் இந்தியா தலையிட்டு திருகோணமலை துறைமுகம், சம்பூர், புல்மோட்டை மற்றும் காங்கேசன்துறை சீமெந்து நிறுவனங்களை பெற்றுள்ள நிலையில் இதனை பிரித்து மேலும் நன்மைகளை பெறுவதற்காகவே அதிகாரங்களை வழங்கச் சொல்கின்றது. இதற்கு இடமளிக்க முடியாது.
கொழும்பு தேசிய நூலகத்தில் திங்கட்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் ரில்வின் சில்வா கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை ஜே.வி.பி. உருவாக்கி இந்த அரசை ஆட்சியில் அமர்த்தியதுடன், மகிந்த ராஜபக்ஷவையும் ஜனாதிபதியாக்கியது. நாம் அரசுடன் இருந்த போதும் நாட்டுக்கு பாதகமான விடயத்தில் அதிலிருந்து வெளியேறி தேவையான நடவடிக்கையெடுத்தோம்.
உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க கடல்கோள் பொது கட்டமைப்பு உடன்படிக்கையை புலிகளுடன் செய்த போது அதனை எதிர்த்து அரசிலிருந்து வெளியேறி நீதிமன்றம் சென்றதனாலேயே புலிகளிடம் சென்ற கடற்பகுதி பிரதேசங்களை மீட்க முடிந்தது. இதனாலேயே பூநகரி இன்று மீட்கப்பட்டது. இல்லாவிட்டால் அப்பகுதி அதிகாரம் புலிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
நாம் இப்போது அரசை எதிர்ப்பது ரணில் விக்கிரமிங்கவையோ அல்லது ஐ.தே.க.வையோ ஆட்சிக்குக் கொண்டு வரஅல்ல மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான போது இருந்த நிலைக்கு திரும்புவதற்கே சொல்கின்றோம்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிலும் பார்க்க மகிந்த ராஜபக்ஷ தகுதியானவராகக் காணப்பட்டார். அதனாலேயே அவருக்கு நம் ஆதரவளித்தோம். ரணில் விக்கிரமசிங்க மேற்கு நாடுகளுடன் உறவைக் கொண்டுள்ளதுடன், அவர் நாட்டை பிரித்துக் கொடுப்பதிலிருந்து மீட்சி பெறவே மகிந்தவுக்கு ஆதரவளித்தோம்.
அப்போது மகிந்த ராஜபக்ஷ பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு ஜனநாயகத்தை ஏற்படுத்துவேன் எனக் கூறினார். இதிலிருந்து அவர் இப்போது தவறி வருகின்றதையே கண்டிக்கின்றோம்.
இதிலிருந்து தப்புவதற்கு பொதுத் தேர்தலுக்கு சென்று மக்களுக்கு பொய் சொல்லி வாக்கு கேட்க அவரே முயன்றால் தகுந்த நடவடிக்கையை எடுப்போம். பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை அவசியமானதை செய்தால் போதுமானது. தேசப்பற்றுள்ள அரசுக்கு நாம் ஆதரவளிப்போம்.
மாகாண சபையை உருவாக்குவதற்கான 13 ஆவது திருத்தச் சட்டம் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் பலாத்காரமாக செய்து கொண்ட உடன்படிக்கையினால் ஏற்படுத்தப்பட்டது. இது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றல்ல.
இதனை ஐ.தே.க. அரசாங்கமும் சரி சந்திரிகா அரசாங்கமும்சரி மக்கள் விருப்பின்றி செய்து கொள்ளப்பட்டதனால் அமுலாக்கவில்லை. இந்நிலையில், இதனை அமுல்படுத்துவதற்கு அதாவது மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்து மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனை செய்தால் மகிந்த அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட பெரிய தவறாக முடியும். இது பிரிவினைக்கு போஷாக்கு வழங்குவதாகவே இருக்கும். பிரிவினையை ஏற்படுத்த மக்கள் ஆணை வழங்கவில்லை.