தமிழக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் ‘அபீக்’ கப்பலில், கேப்டன் ஜேடி தலைமையில் தமிழக–ஆந்திர கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 படகுகளையும் கைப்பற்றினர்.
கைதான இலங்கை மீனவர்கள் 11 பேரும் நேற்று காலை 10 மணியளவில் காசிமேடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். துறைமுக போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், இலங்கையை சேர்ந்த ரோசன்(வயது 36), அமீத்(42), அமிதா(28), தோனி(28), நமிலா(53), தரங்கா(31), சவிந்தா(23), மதுரகா(28), டுமிந்தகுமாரா(24), அஜித்பிரசன்னா(22), புத்தகல்சா(20) என்பதும், அவர்கள் நந்தில், பதுங்கா ஆகிய படகுகளில் இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததும் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று மாலை 11 பேரையும் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் இலங்கையைச் சேர்ந்த 32 மீனவர்கள் ஆந்திரபிரதேசில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில் இந்த மீனவர்களின் கைதானது நாளை நடைபெறவுள்ள இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை பாதிக்காது என்று இலங்கை மீன்பிடித்து அமைச்சு தெரிவித்துள்ளது.