Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இதண்டிப்போட்டாங்கள் : சோளன்

jaffna_tamil_Cartoon_UN_Lionஅந்தக் காலத்தில் கஸ்புஸ் மாஸ்டரிட்ட இங்கிலீசு படிச்சு முன்னுக்கு வந்தாக்கள் ஏராளமெண்டு என் ஆருயிர் நண்பன் சொல்லிக் கேட்டுப் புழகாங்கிதம் அடைஞ்சிருக்கிறன். கனகாலமா கஸ்புஸ் ஆகு பேயரா காரணப் பெயரா என்று ஓடித் திரிஞ்சு விசாரித்ததில கஸ்புஸ் மாஸ்ரரின்ட முதலாம் மனிசிக்குப் பேர் கஸ்தூரி என்றும் இரண்டாம் மனிசிக்கு புஸ்பராணி பேர் என்றும் தெரிந்து அது காரணப்பேர் தான் என்ற முடிவுக்கு வர எடுத்த காலத்தில கொஞ்ச நஞ்ச இங்கிலீசுவும் மறந்து போச்சு.

பிறகு லண்டனில வந்து சுப்பர் மார்க்கட்டில தமிழ் அறிஞர்களோட வேலை செய்ததில மிஞ்சின இங்கிலீசுவும் மறந்து போச்சு. தமிழோ 30 வருசத்துக்கு முந்தின் மூத்த தமிழ். அந்த வகையில் சோளன் ஆகிய அடியேனும் மூக்காத எழுத்தாளர்களுக்கு மத்தியில் மூத்த எழுத்தாளனானான் என்பதெல்லாம் மேலதிக தகவல்கள்.

சோளன் ஆகுபயரா காரணப் பெயரா என்று கன்னா பின்னா என்ற ஆராச்சியில் ஈடுபட்ட பலபேருக்கு ஒரு உண்மையைச் சொல்லியாக வேணும்.

சோளன் யாழ்ப்பாணத்து அறிவாளிகளில் ஒருவன். நல்ல தண்ணி என்றால் இப்ப எல்லாம் மினரல் வாட்டார் மாதிரி, யாழ்ப்பாணத் தமிழ் மினரல் தமிழ் என்று சொல்லிக் கேட்டு வளர்ந்தவன் இந்தச் சோளன். வடக்கத்தையானுக்கு மூண்டு சுழி ‘ண’ க்கும் இரண்டு சுழி ‘ன’ க்கும் வித்தியாசம் தெரியாது; மலையகத்தானுக்கு ‘ல’ க்கும் ‘ள’ க்கும் வித்தியாசம் தெரியாது; மட்டக்களப்பான் க்கன்னா போடமாட்டான் என்று கல்தோன்றி மண்தோன்றா டைனோசோர் காலத்துப் பெருமைகளைப் பேசக் கேட்டே எழுத்தாளனானவன் சோளன்.

ஒரு நாள் இலங்கையின்ர மூளையான யாழ்ப்பாணத்துக்கு வெளியால வந்து வன்னியில நின்று சிந்திக்கேக்க தான் தெரிஞ்சுது ‘ழ’ க்கும் ‘ள’ க்கும் வித்தியாசம் தெரியாமல் கதைக்கிற யாழ்ப்பாணப் பழங்குடிகள் மற்றவனை எல்லாம் பேப்பட்டம் கட்டுறாங்கள் என்று. அட சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கும் யாள்பாணத்துக்குமே வித்தியாசம் இல்லாமல் உச்சரிக்கிற யாழ்(ள்)ப்பாண மூத்த எழுத்தாளன் சோளனுக்கு அப்புவும் ஆத்தையும் வச்ச பேர் சோழன் தான். சக மூத்த எழுத்தாளர்கள் எல்லாம் சோழனை சோளப்பொரி ஆக்கியதால சோளன் காரணப்பெயர் தான்! யாழ்ப்பாணத் தமிழன்ர திமிரின் குறியீட்டுப் பெயரே சோளன்.

இங்கிலீசையும் தமிழையும் சேர்த்து இரட்டைக்கொலை செய்து போர்க்குற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் தென்னிந்திய தொலைக்காட்சிகளோடை யாழ்ப்பாணத் தமிழ் உசத்தி தான் என்று தேற்றிக்கொள்வான் சோளன்.

எங்கட தமிழ் வாத்தி வல்லிவுரத்தாற்ற மூத்த மகன் 1980 ஆம் ஆண்டே லண்டனுக்கு வந்து தேசியவாதி ஆனவன். அவன்ர பிள்ளைகளையும் தேசியவாதிகள் ஆக்கி இனத்துக்குப் பெருமை வேற சேர்த்தவன். பிள்ளைலின்ர தமிழ் சும்மா அப்பிடி இப்பிடி என்றாலும் தமிழ் உணர்வு மட்டும் இருக்கும். இங்கிலீசு ஓ பொசிட்டீவ் ரத்தம் தமிழில தமிழ் ரத்தம்

மகள் தமிழினியை நல்ல இடத்தில் கல்யாணம் பேசி கரைசேர்க்க வேணும் என்று சாத்திரம் பார்க்க லண்டனுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் நாட்டு ஐயரிட்ட குறிப்போட மகளை அனுப்பினதாலதான் காலமே சரியில்லாமப் போனது.

குறிப்புப் பார்க்க வெளிக்கிட்ட ஐயரின்ட பேரோ கல்யாணம். மங்களகரமான பேர். தமிழினிக்கோ கல்யாணம் சரியா வாய்க்குள்ள நுளையாமல் போக, மிஸ்டர் மரேஜ் என்று கூப்பிட, ஐயருக்கு வந்த கோபத்தில தமிழினிக்கு ஏழரச்சனி பிடிச்சிருக்கென்று சாத்திரத்தில எழுதிக்கொடுத்திட்டார். இதால மூன்று வருசமா தமிழினி கல்யாணம் இல்லாமல் அலைஞ்சு,  போன மாதம் தான் மரேஜு  முடிஞ்சிருக்கு. இப்படி புலம்பெயர் அடுத்த சந்ததியின்ர தேசியத் தமிழோட ஒப்பிடேக்க யாழ்ப்பாணத் தமிழ் மேல் தான்.

வல்லிவுரத்தாற்ற மகனுக்கோ இங்கிலீசு சுட்டுப்போட்டாலும் வரது. அந்தக் காலத்து தேசிய உணர்வில ஆங்கிலம் படியாதை என்று அப்பர் சொல்லி வளர்த்ததிலதான் அவனே லண்டனுக்கு வந்தவன். லண்டன் ஏயர்ப்போட்டிலையே மொழிபெயர்ப்பாளரின்ர வேலைக்கு உலை வைத்த பெருமை வல்லீன்ர மகனையே சாரும்.

1980 ஆம் ஆண்டு லண்டன் விமான நிலையத்தில ஏன் வந்தனி என்று போலிசுக்காரன் கேட்க கொழும்பில இருந்து நாவாந்துறைக்கு நடந்து போகேக்க ஆமிக்காரன் பிடிச்சுப்போட்டான் என்று சொல்லிச் சமாளிச்சுப் போட்டான். சரி, ஆமிக்காரன் பிடிச்சு என்ன செய்தவன் என்று கேட்க, அவன் பிடிச்சு ‘இதண்டிப்போட்டான்’ என்று வல்லீன்ர மகன் சொல்லியிருக்கிறான். ‘இதண்டினத’ மொழி பெயர்க்கத் தெரியாமல் மொழிபெயர்ப்பாளர் முழிக்க பொலிஸ்காரன் வல்லீன்ர மகன உள்ள விட்டுட்டு மொழிபெயர்ப்பாளரை வெளீயில விட்டுட்டான்.

யாழ்ப்பாணத் தமிழின்ர மகிமையோ மகிமை என்று விமான நிலையத்துக்கு வெளியால வந்த வல்லீன்ர மகன் ஒரு கேள்வியோடையே அகதி அந்தஸ்துத் தந்தவங்கள் என்று இப்பவும் பெருமையடித்துக்கொள்வான்.

அண்டைக்குத் தொடங்கின வல்லீன்ர மூத்த மகனின் லண்டன் வாழ்க்கை இப்ப அவனை ஒரு தேசியவாதி ஆக்கியிருக்கு.

உலகம் ஓடி, உருண்டு, எல்லாம் நடந்தாலும் வல்லீன்ர மகன் மாறவே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் மகிந்த ராஜபக்சவை ‘இதண்டப்’ போறாங்கள் என்று மேடைகளில் பேசுவான். கொடி பிடிக்காட்டி தமிழினம் இதண்டீரும் என்று சின்னப் பொடியளை விட்டு ஆலாத்தி எடுத்தவன். சனமும் இப்ப்ப இப்ப இவங்கள் இதண்டுறது எல்லாம் யாவாரத்துக்காகத் தான் என்று இதண்ட ஆரம்பிச்சுடுதுகள். இன்னும் எத்தின நாளைக்குத் தான் இந்தக் கோதாரிவிழுவாங்கள் இதண்டப் போறங்கள் என்று சோளன் யாழ்ப்பாணத் தமிழில் திட்டிக்கொண்டே நல்லாப் போத்துக்கொண்டு படுத்து இதண்டீட்டான்.

Exit mobile version