Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இசை – பக்தியிலிருந்து சிம்பொனி நோக்கி … : T .சௌந்தர்

இயற்கையில் தனது உணவை தேடிய ஆதி மனிதன் வளர்ச்சி போக்கில் அதனை தானே உற்பத்தி செய்யும் திறனை பெற்றான்.தனது பயிர்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போவதை கண்டு பயந்த அவன் ஆடுவதன் மூலமும், பாடுவதன் மூலமும் தன்னையும் ,தனது பயிர் களையும் பாதுகாக்கலாம் என எண்ணினான்.இயற்கையின் வினோதங்கள் தனக்கு கட்டுபடாததை உணர்ந்த அவன் ,அது இறைவனின் செயல் எனவும் என்ன தலைப்பட்டான். பலவிதமான ஒலிகளை எழுப்பிய அவன் அதன் வளர்ச்சி போக்கில் இனிய இசையையும் கண்டடைந்தான்.மனதை ஆட்டுவிக்கும் அந்த இசை கூட இறைவனின் விந்தை எனக் கருதியதுடன், இனம் புரியாத அந்த இனிமையில் அவன் இருப்பதாகவும் எண்ணினான். அந்த இசை அவனையே மகிழ்விக்கும் என எண்ணிய அவன் அதனை இறைவனுக்கே அர்ப்பணமும் செய்தான்.அதற்க்கான சடங்குகளையும் உருவாக்கினான்.

இனம் ,மதம் ,மொழி, கலாச்சாரம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து இறைவனை பாடி மகிழ்வதை உலகெங்கும் காண்கிறோம்.இசையின் ஆற்றலை உணர்ந்த தமிழர்கள் இறைவனை இசை வடிவமாகவே கண்டனர். ” ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ..”என்கிறது ஒரு தேவார பாடல் .மிக அண்மையில் வெளிவந்த தமிழ் திரைப்பட பாடல் ஒன்று ” இசையின் பயனே இறைவன் தானே ” என்று தேவார பாடலின் கருத்துக்கு முட்டு கொடுக்கின்றது.

“ஆதியில் இசை இருந்தது ..” என்கிறது பைபிள் . “இசை என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது , அது மனிதன் பாவப்பட முன்பு இறைவனால் வழங்கப்பட்டது ; அதனால் மதத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது “.என்றார் மார்டின் லூதர் ( martin luther ) என்கிற யேர்மனிய பாதிரியார். சூட்சுமமான இசையின் ஆற்றல் தெய்வ வழிபாட்டில் பிரித்து பார்க்க முடியாத வண்ணம் ஒன்றினைக்கப்ப்டுள்ளது.இனிய இசையுடன் கூடிய வழிபாடு அல்லது பூஜை மனதை ஒரு நிலை படுத்தி செம்மைப்படுத்தும் வல்லமை கொண்டது. கூட்டு வழிபாட்டு முறையை ( congretional worship ) இசை இலகுவாக வழி நடாத்தி செல்லும் என்பார்கள்.

இவ்விதம் உலகெங்கும் இசை இறைவனுடன் இணைத்துப் பேசப்படுகிறது.சமணர்களுக்கு எதிரான் போரில் சைவர்கள் கண்ணுக்கு தெரியாத ,சக்தி வாய்ந்த ஆயுதமாக இசையைப் பயன் படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய சூழலில் மார்டின் லூதர் ( 1483 – 1546 ) என்ற யேர்மனிய மதத் தலைவர் ஈசையை வெற்றிகரமாக பயன்படுத்தினார் .மதச் சீர்திருத்தத்தில் புதிய பாதையை கடைப் பிடித்த அவர் இசையை மிகப் பெரிய பலமாகவே கருதினார்.கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து புரட்டஸ்தாந் என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தியவர் தான் இந்த லூதர். ஐரோப்பாவில் முதலில் நிலை பெற்ற கத்தோலிக்கம் , பின் வந்த புரட்டஸ்தாந் மதத்திலிருந்து விடு பட்டு இசை எவ்வாறு சிம்பொனி ( symphony ) என்கிற உயர்ந்த வடிவத்திற்கு வந்தடைந்தது என்பதை சமூக ,அவர்லாற்று பின்னணியுடன் ஓரளவு விளக்க முனைகிறது இக் கட்டுரை.

ஐரோப்பாவில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் பரவிய கிறிஸ்தவ மதம் சமூக அடித்தளத்திலிருந்த மக்களிடையே செல்வாக்கு பெற்று பிற்படுத்தப்பட்ட மக்களின் மதமாக அறிமுகமாகியது.கத்தோலிக்க மதம் என அழைக்கப்பட்ட அந்த மதம் அடுத்து வந்த நூற்றாண்டில் தனக்கென ஒரு மத பீடத்தையும் ஸ்தாபித்து அதன் பரப்பளையும் விரிவாக்கியது.அதற்கென அமைக்கப்பட்ட நிவாகத்தை பிரபுக்கள் கையில் ஒப்படைத்ததுடன், சர்ச்சுக்கான கட்டிடங்களை நிர்மாணிக்கவும் தொடங்கினர்.அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதம் ரோம ராஜ்ஜியத்தின் முன்னணி மதமாக அறிவிக்கப்பட்டு கி.பி. 392 ம் வருடம் அதிகார பூர்வமான மதமாகவும் உயர்ந்தது.தமது எண்ணங்களுக்கு ஏற்ப சமூகத்தை மாற்றுவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட ஆரம்பித்த மதபீடம் , மக்களை தம்முடன் இணைப்பதில் கவனம் செலுத்தினர். சமூக மாற்றம் என்பது தங்களை சுற்றி வளர்வதை விரும்புவதாகவும் ,தம்மை விட்டு விலகிச் செல்லும் மாற்றங்களை வெறுப்பதாகவும் ,தமது இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் கணித்தது. கை மீறிப் போபவர்களை அழித்தொழிக்கும் நடைமுறைகளையும் கைக்கொண்டனர்.

சமூகத்தில் கல்வியை தமது கைகளில் வைத்திருந்த பாதிரிமார்கள் தமக்கு அனுகூலமான முறையிலே மக்களை மாற்ற முனைப்புக் காடினர்.மக்கள் எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் , எவற்றை எல்லாம் உள்வாங்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தினர்.இசை குறித்து அவர்கள் பார்வையும் அவ்விதமே அமைந்தது.

2

அடிமைகளின் உடல் உழைப்பால் தம்மை மேல் நிலையில் வைத்துக் கொண்ட பிரபுக்களும் ,பாதிரிமார்களும் உடல் உழைப்பை கேவலமாகக் கருதினர்.கலைகளை உயர்வாகவும், கலைஞர்களை இழிவாகவும் பார்ப்பது அக் காலத்திய நடைமுறையாக இருந்தது.”Antic காலம் ” என வர்ணிக்கப்படும் அக்காலத்திலேயே லத்தீன் என்ற மொழி உத்தியோக மொழியாக திணிக்கப்பட்டு ,கிறிஸ்தவ மதத்திற்கானஓர் கலாச்சார அடித்தளம் அமைக்கப்பட்டதுடன் ,மக்களின் மதம் சாராத பழக்க வழக்கங்கள் யாவும் உள்வாங்கவும்பட்டன.

தட்டிக் கேட்பார்ற்றற்று கிடந்த ரோம ராஜ்ஜியத்தின் இறுதிக் காலங்களில் பாதிரிமார் மற்றும் பிசப்மார்களினால் நிர்வகிக்கப்பட்ட மத பீடம் ஊழலின் சாம்ராஜ்ஜியமாக விளங்கியது.ரோம ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாக அமைந்தாலும் ,அதிலிருந்து மத பீடம் தன்னை மீட்டெடுத்து ஏக பிரதிநிதியாக நிலை நிறுத்திக் கொண்டதுடன், யாரும் நெருங்க முடியாத சர்வாதிகார அமைப்பாகவும் நிலை பெற்றது.

இசையை பொறுத்த வரையில் பெரும்பாலான மக்களால் ரசிக்கப்பட்டு வந்த இசை மத பீடத்தினரின் விருப்பத்திற்குரிய இசையாக இல்லாத காரணத்தால் ,தமது விருப்பத்திற்கு இசைந்த ஓர் இசையை உருவாக்க வேண்டிய நிலைக்கு மதபீடம் தள்ளப்பட்டது.அதற்க்கான இசையை அமைப்பதற்கு அங்கும் ,இங்கும் இசைவகைகளை தேடியது.கிறிஸ்த்தவ மதத்தின் வேர்களாக இருந்த யூத, மற்றும் சிரிய நாட்டு சர்ச் பாடல்களிலிருந்து சிலவற்றை எடுத்தாண்டனர்.துள்ளலான தாள அமைப்புகள் அற்றதும் ,வைத்திய இசையின் துனையற்றதும்,இனிமை நிறைந்த இசையை மறுப்பதும் ,துறவு நிலையை வெளிப்படுத்துவதும் ,கடவுள் மீதான பக்தியை உண்டாக்குவதுமான ஓர் வகையை வலிந்து உருவாக்கினர்.

முதலாம்,இரண்டாம் நூற்றாண்டுகளில் பயன்பட்ட பைபிளின் பழைய ஏற்ப்பாடு பாடல்களின் போதாமையால் கிரேக்க நாட்டு இசையையும் சேர்த்தனர்.இவ்விதம் கதம்பமாக சேர்க்கப்பட்ட இந்த வகை இசை கிரிகோரியன் இசை ( Gregorian Music ) என அழைக்கப்பட்டது.அந்நாளில் வாழ்ந்த புகழ் பெற்ற ” போப் ” பாக விளங்கிய கிரிகோர் ( Gregor – கி.பி.596 – 604 ) என்பவற்றின் பெயரில் அழைக்கப்பட்டது.இந்த இசையில் யூத இசையின் தாக்கம் இருந்ததற்கான காரணம் கிறிஸ்தவ மதத்தை முதலில் தழுவியவர்கள் யூதர்கள் என்பதும் முக்கியமான காரணமாகும்.கிரிகோரியன் இசைக் கலைஞர்கள் தமக்கு ஏற்ற விதத்தில் வெட்டியும் ,ஒட்டியும் பூஜைக்கான ஓர் இசையை உருவாக்கினார்கள் என்பர்.ஐந்து சுரங்களைக் கொண்ட இசையின் ( Pentatonic Scale ) செல்வாக்கு இந்த இசையில் ஓங்கி இருப்பதாக இசை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர் .கி.பி. 11 ம் நூற்றாண்டு வரையில் இவ்வகை இசை பயன் பாட்டில் இருந்தது.

3 .

கி.பி 11 ம் நூற்றாண்டில் அறிமுகமான பலகுரல் இசை ( Chorus Music ) கிரிகோரியன் இசையின் வீழ்ச்சியை அறிவித்தது.தேடலின் விளைவாய் உதித்த இந்த இசையில் பல புதிய உத்திகள் கையாளப்பட்டன. பாடல்களில் ஏற்ற இறக்கங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தக் கூடிய பாடகர்களும் ,இசை தொகுப்பாளர்களும் ( Conductors )உருவாயினர். பலகுரலிசையில் இசை நேர்த்தி முக்கியமானதொரு அம்சமாக கருத்தப்பட்டது.பாடலின் தொடக்கமும் ,முடிவும் சரியான இட்சத்தில் சேர வேண்டியதுடன் ஒத்திசைவின் ( Harmony )நேர்த்தியையும் வேண்டி நின்றன .இவ்வாறு ஒரு புதிய இசை வடிவம் உருப்பெற்ற போதும் ,அது யாரால் இசையமைக்கப்பட்டது போன்ற விபரக் குறிப்புகள் தெளிவாக இல்லை என்பர். பாடலைப் பாடியவர்கள் ,இசையமைத்தவர்கள் என்ற பேதம் வெளியே தெரிய சிறிது காலம் பிடிக்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்களே வரலாறு எழுதும் நியதியாயிருந்த காரணத்தால் போப் கிரிகொரின் பெயர் பதிவு செய்யபட அவர் பெற்றிருந்த செல்வாக்கே முக்கிய காரணமாகத் திகழ்ந்தது .இவருக்கு சற்று முன்பு வாழ்ந்த போப் அம்ரோசியஸ் (Ambrosius – கி.பி. 340 – 397 ) என்பவரது பூசைப் பாடலகள் ,மற்றும் 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிரியாரான நூத்கர் பால்புலஸ் ( Notker Balbulus ) இசையை உருவாகினார்கள் என கருதப் பட்டாலும் அவர்கள் அவற்றை உருவாக்கவில்லை என்பதே உண்மையாகும்.இதைப் போன்றதே தென்னிந்திய சங்கீத உலகில் புகழ் பெற்றிருந்த சுவாதித் திருநாள் என்ற மன்னன் கீர்த்தனைகள் இயற்றினார் என்று சொல்லப்படுவதும்.அவரது அரண்மனையில் இசைக் கலைஞர்களாக இருந்த தஞ்சையை சேர்ந்த இசைக் கலைஞர்களே அவற்றை இயற்றினார்கள் என்பதும் மறைக்கபட்ட உண்மையாகும் .

பலகுரலிசையில் Guido Af Arezzo என்பவர் ஒரு இசையமைப்பாளராக முதன்மை நிலை பெற்றிருந்தாலும்,பல குரலிசையின் முதல் இசயமைப்பாலறார் என முக்கியம் பெறுபவர் ஹில்டே gard Von Bingen ( 1098 – 1179 ) என்ற பெயரை கொண்ட ஓர் பெண் இசையமைப்பாளரே ஆகும்.

தனது பெயரை குறிப்பிடாத ஒருவர் ” Anonymus IV ” என்ற பெயரில் 1275 களில் வெளியிட்ட தொகுப்பு ஒன்று ஆரம்ப கால இசையமைப்பாளர்களைப் பற்றிய குறிப்புகளை தருகின்றது. ” Anonymus IV ” என்பவர் ஒரு ஆங்கிலேய பாதிரி எனவும், அவர் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார் என்பதும் அவர் பற்றிய குறிப்புகள் ஆகும் .அவரது குறிப்புகளிலிருந்து முதன் முறையாக புகழ் பெற்ற இரு இசையமைப்பாளர்கள் என Leonin ( 11 ம் நூற்றாண்டு ) ,Perotin ( 12 ம் நூற்றாண்டு ) போன்றோரின் பெயர்கள் உறுதிப் படுத்தப் படுகின்றன.அவர்கள் இருவரும் Nortredam சர்ச்சில் பணிபுரிந்ததாகவும் பலகுரளிசைக்கு பல புதிய பாடல்களை உருவாகினார்கள் என பதிவு செய்திருக்கிறார்.மத்திய காலத்து ஓவியங்களிலும் பொதுப்படையானதாக இசைக் கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்டு இனம் காட்டும் வகையில் இல்லை. எனினும் பிற்காலங்களில் படிப்படியாக இசையமைப்பாளர்கள் ஓவியங்களில் காணக் கிடைக்கின்றனர்.

ஓவியம் , தத்துவம், கவிதை, கட்டிட கலைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மத்திய காலத்து மதபீடம் கலாச்சார மையமாகவும் திகழ்ந்தது .மதம் சார்ந்த இசையில் சில புதுமைகளை செய்து மாற்றங்களை உள்வாங்கினாலும் இசையை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கவில்லை. மதம் சாராத நாட்டுப்புற இசைக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கே அதற்க்கான காரணமாய் அமைந்தது என்பர், சர்ச் இசைக்குப் போட்டியாக இருந்த நாட்டுப்புற இசை கலைஞர்கள் மீதான வரியை அதிகரித்து அவர்களது இசையை முடக்கிய சர்ச் அவர்களது இசையையும் தடை செய்தது.அடித்தட்டு மக்களின் களியாட்டங்களில் அவர்களது இசை முழங்கிக் கொண்டிருந்தாலும் பொருளாதார நிலையில் பலம் குன்றிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் நிச்சயமற்ற எதிர் காலத்தை நோக்கியதால் பிரபுக்களின் உதவியை நாடத் தொடங்கினர்.

4 .

சமூக அடுக்கின் கிழ் இருந்த உழைக்கும் மக்கள், யூதர்கள் ,நாத்திகர்கள் சொத்து சேர்க்கும் ,நிலங்களை வைத்திருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர்.அந்த வரிசையில் மதம் சாரா தொழில்முறைப் பாடகர்களும் ,நடிகர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்வை கொண்டிருந்தனர்.உற்பத்தியில் ஏற்ப்படுகின்ற ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப அவர்கள் வாழ்வு அமைந்திருந்ததெனினும் ,உற்பத்தி அதிகமாகும் போது மத பீடமும் ,பிரபுக்களும் அவற்றை தமக்குள்ள பங்கு போடும் சுரண்டல் முறையை கடுமையாக நடாத்தினார்கள்.நோய் ,வறுமை ,பட்டினி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இசையில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.மக்கள் பெரும்பான்மையாக கூடும் இடங்களான சந்தை, சர்க்கஸ் போன்றவற்றில் வாத்திய இசையுடன் கூடிய பாடல்கள் பாடப்பட்டன.சர்ச்சில் பாடப்படும் ஒரு சில பாடல்கள் அங்கு இசைக்கப்பட்டாலும் மத உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத காதல், தாலாட்டு பாடல்களுடன் நடன பாடல்கள் என மக்களுக்கு நன்கு தெரிந்த பாடல்கள் இசைக்கப்பட்டன.

நாட்டுப்புற வாழ்வைப் போலவே அவர்களால் பயன்படுத்தப்பட்ட இசைக்க கருவிகளும் மிக எளிமையானவையாக இருந்தன.கி.பி. 13 ,14 ம் நூற்றாண்டுகளில் ஏற்ப்பட்ட விவசாய உற்பத்தியின் அதிகரிப்பு ஆடம்பர பொருட்களின் பாவனைக்கான வழியைத் திறந்து வைத்ததுடன் ஆடையலங்காரம் , கட்டிட கலை நிர்மாணம் ,அலங்கார வேலைப்பாடுகள் போன்றவற்றுடன் இசை ரசனையும் புதிதாக இணையத்துக் கொள்ளப்பட்டது.இசை ரசனை என்பது உயர்ந்ததாகவும் மாறத்தொடங்கியது.பிரபுக்களின் உதவியைப் பெற்ற இசைக் கலைஞர்கள் நடன, நாடக நிழ்ச்சிகளில் பின்னணிக் கலைஞர்களாகவும் ,ராணுவத்தில் இசைக் கலைஞர்களாகவும் மாறினார். சர்ச்சால் தாழ் நிலைக்கு தள்ள பட்ட இக் கலைஞர்கள் புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தொழில் நேர்த்தியை வளத்ததுடன் ,சர்ச் இசைக்குப் புறம்பான ஓர் இசையையும் வலத்தேடுதுக் கொண்டிருந்தனர்.மக்கள் கூடும் போது நிகழ்சிகளில் அவை பரீட்சித்து பார்க்கப்ப் பட்டதுடன் ,மக்கள் மத்தியில் அவை செல்வாக்கும் பெற தொடங்கியது.

மத்திய காலத்து நடுப்ப் பகுதியில் இசையைக் குறிப்புகளாக ( MUSIC NOTATIONS ) எழுதும் முறை GUIDO AREZZO என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது என்பது இசைத் துறையில் நிகழ்ந்த புரட்சி எனலாம்.அவருக்கு முன்பு இசைக் குறிப்புகளை எழுதும் முறை இருந்ததெனினும் முழுமையானதாக இருக்கவில்லை. ” நூறு வருடப் போர் ” என் அழைக்கப்பட்ட ,இங்கிலாந்துக்கும் ,பிரான்சிற்கும் இடையே நடை பெற்று வந்த போர் (1339 – 1453 ) முடிவடைத்ததும் ஐரோப்பாவில் நிரந்தர அமைதி ஏற்ப்பட்டது.அது பிரான்சில் ஒரு தேசிய அரசுக்கும் அடித்தளமிட்டுக் கொடுத்ததுடன் ஐரோப்பாவுக்கும் ,இங்கிலாத்துக்குமான தொடர்புகளையும் அதிகரிக்க செய்ததது.மதபீடத்தின் ஆதிக்கத்திற்குள் இருந்த இத்தாலியிலும் ,பிரான்சிலும் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த மதம் சாராத லௌகீக இசை அதிக செல்வாக்குப் பெற தொடங்கியது.மறுபுறம் ஆங்கிலேயரின் சிறப்பான நாடுப்புற இசையை ஐரோப்பிய மக்கள் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

ஒரு புறம் பல குரல் இசை ,மறுபுறம் இங்கிலாந்து நாட்டுப்புற இசை இவற்றோடு இணைந்த மதம் சாராத ஐரோப்பிய நாடுப் புற இசை என பல்வேறு இசைவகைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன.இந்த இசைகள் ஒன்று கலந்து ஐரோப்பாவில் புதுவகை இசையாக மலர ஆரம்பித்தது.பிரஞ்சு போப் ஜோஹன்னஷ் ( JOHANNES VII ) என்பவர் இந்த புதுவகை இசையை கடுமையாக தாக்கினார்.ஆயினும் “அழகிய எழுத்துக் கலை ” ( CALLIGRAPHY ) என அழைக்கப்படும் புதிய கலை வடிவத்துடன் ,அழகிய எழுத்துக்களால் அமைக்கப் பட்ட இசைக்குறிப்புக்கள் வெளி வந்து புகழ் பெறத் தொடங்கின.

இவ்விதம் இனிமையான இசைகளின் தொகுப்பாக ஒரு புதிய இசையை நேதேர்லாண்டுகள் ( NETHERLANDS ) என அழைக்கப்பட்ட ( இன்றைய நெதர்லாந்த், லக்ஸ்சம்பர்க், பெல்ஜியம் போன்ற நாட்களை சேர்ந்த ) கலைஞர்கள் படைத்து புகழ் பெறத் தொடங்கினார்கள்.

5 .

இத்தாலிய ,ஆங்கிலேய ,பிரெஞ்சு மற்றும் பலகுரலிசை போன்றவற்றின் சிறப்பம்சங்கள் எல்லாம் ஒன்றிணைந்த சிறப்பான இசையாக நெதேர்லாண்டுகளின் இசை மலர்ந்தது.ஐரோப்பா முழுவதிலும் உள்ள பிரபுக்களின் மாளிகைகளில் அவர்களது இசை முழங்கியது.15 பாடகர்கள் ,25 வாத்தியக் கலைஞர்களைக் கொண்டிருந்த இக் குழுவினர் Philip Dristiges ( 1363 – 1404 ) என்ற பிரபுவின் மாளிகையில் அதிகமான சலுகைகளைப் பெற்றனர்.பிற்க்காலத்தில் கலைத்துவம் மிக்க இசையை உருவாக்கிய இசை மேதைகளின் முன்னோடியாக இவர்களே விளங்கினர். இசையில் நீண்ட ஓட்டத்தை பாடல்களுக்கேற்ப அமைத்து ,பல குரலிசையில் குரல்களை எதிரும் ,புதிருமாக அமைத்து புதுமை செய்ததுடன் முழுமையான இசை வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.இந்த வகை இசையே 17 ம் நூற்றாண்டில் உருவான சிம்போனி ( Symphony ) இசையின் முன்னோடி என வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர்.

இப்புதிய இசையின் தாக்கம் சர்ச் இசையிலும் ஏனைய இசைகளிலும் செல்வாக்கு செலுத்தியதுடன் J .S .Bach , Hayden , Handel , Mozart போன்றோர் காலம் வரையும் நீடித்தது என்பர்.

கி.பி 1430 இல் Johannes Guttenberg ( 1398 – 1468) என்பவர் கண்டு பிடித்த அச்சுக்கலை ( Printing Technology ) செய்தித்துறையின் புரட்சி ( Media Revolution ) என புகழ் பெற்றது. கி.பி 1455 இல் Guttenberg முதன் முதலில் பைபிளை அச்சிட்டார்.அச்சுக்களியின் வளர்ச்சி இசைக் குறிப்புகளை அச்சு வடிவில் கொணர்ந்து சாதனை நிகழ்த்தியது. கி.பி 1500 களில் இசைக்குறிப்புகள் ( Music Notations ) அச்சிடப்படும் வசதி ஏற்ப்பட்டதும் அவை விற்ப்பனைப் பொருளாகவும் மாறத்த் தொடங்கியதுடன் இசையைமைப்பாளர்கள் அதன் உரிமையாளர்களாகவும் மாறத்தொடங்கினார்.

பாவனையின் பெறுமதி மட்டுமல்ல ,பெறுமதிமிக்க மாற்றீடாகவும் அவை கருதப்பட்டன .இசைப் பிரதிகள் கற்கவும் ,பிரதிகள் எடுக்கவும் ,அதனூடே ஒரு பாரம்பரியம் உருவாகவும் , இசை என்பது வெறும் கைவினை என்ற நிலையிலிருந்து கலை வடிவமாகவும் மாற்றமடைய உதவியது.
மறுமலர்ச்சி காலத்தில் ஏற்ப்பட்ட வேகமான வளர்ச்சி ஐரோப்பாவில் சகல மட்டத்திலும் மாற்றங்களை ஏற்ப்படுத்தியது.அவை மதத்திலும் எதிரொலித்தது.கத்தோலிக்க எதிராக லூதர் மேற்கொண்ட கிளர்ச்சி வேதாந்த தத்துவப் பார்வையிலும் மட்டுமல்ல இசையிலும் சமூக ரீதியிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தது.லூதரியச் சிந்தனை குறிப்பாக இசையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. கத்தோலிக்க மதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்த Martin Luther ( 1483 – 1546 )அதன் இசையை முற்று முழுதாக வெருத்தாரில்லை.மதம் சார்பான வழிபாட்டு முறைகளில் கத்தோலிக்க கணிசமான அளவு பயன்படுத்தினார்.கத்தோலிக்கப் பாடல் வரிகளை மாற்றி அதற்குப் பதிலாக தனது பாடல் வரிகளை வைத்து ,பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை முழுமையாக இணைக்கும் ஒரு வழியாக வழிபாட்டை உருவாக்கினார்.மத பூஜைகளில் இசை பயன் படக் கூடாது என்று தீவிரம் காட்டிய மத குருக்களை மறுத்து தனது பூஜைகளில் இசையை மிக நுட்ப்பத்துடன் கையாண்டார். இசையை எவ்வித சலனமுமின்றி லூதர் பயன் படுத்தினார் என்றால் மிகையல்ல என்பர்.

லூதரியச் சிந்தனை இசையில் மாற்றங்களை ஏற்ப்படுத்தியதுடன் புதிய பரம்பரை இசையமைப்பாளர்களையும் உருவாக்கியது.அதன் முதல் முக்கியமானவர்களாக
1 . Heirich Shutz ( 1585 – 1672 )

2 . Johannes Sebastian Bach ( 1685 – 1750 )
3 . Georg Fredrich Handel ( 1685 – 1759 ) போன்றோரை குறிப்பிடலாம். எனினும் 16 ம் நூற்றாண்டின் அர்த்த புஷ்டியுள்ள இசையை வழங்கியவர்களில் கத்தோலிக்க இசையமைப்பாளர்களே முதன்மையாக திகழ்ந்தனர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.அவர்களில்
1 .John travener ( 1490 – 1550 )
2 . William Bryd ( 1543 – 1623 )
3 .Thomas Tallis ( 1505 – 1585 )
போன்றோர் முக்கியமானவர்கள் என கணிக்கப்பட்டாலும் ,அவர்கள் எல்லோரையும் விட
Claudio monteverdi ( 1567 – 1663 ) என்பாரே முதன்மையானவராக விளங்கினார்.

6 .

இவரது இசையே மேற் கூறிய லூதரிய இசையமைப்பாளர்கள் மீது அதிகம் செல்வாக்கு செலுத்தியது.வாத்திய இசைக் கருவிகளை தெரிவு செய்வதிலும் ,ஒழுங்கமைப்பதிலும் முன் மாதிரியான வழிகளை கையாண்டவர் இவரே. பின் வந்த Johann Sebastian Bach இன் காலத்தில் இவை மென் மேலும் வளர்ந்து சிறப்பெய்தின என்பர்.படைப்பாற்றல் திறனில் Bach இன்றும் அதி உன்னத இசைக் கலைஞராக போற்றப்படுகிறார்.

இரு மதங்களின் ( கத்தோலிக்க – புரட்டஸ்தாந் )உள்ளடக்கம் வெவேறு சமூக நோக்குகளின் அடிப்படியாக அமைந்திருந்தது.ஒன்று நிலப்பிரபுத்துவத்தையும் ,மற்றது முதலாளித்துவத்தையும் பிரதிபலித்தன.லூதரின் இயக்கம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புதிய மனிதர்களை உருவாக்கும் போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டதுடன் முதலாளித்துவ உற்பத்தி முறைமையையும் ஏற்றது.லூதர் ரஷ்ய பற்றிஎழுத்தாளர் மாக்சிம் கோர்கி பின்வருமாறு எழுதினார் .” அவர் (லூதர் ) ஒரு மதத் தலைவர் போலால்லாமல் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி போலவே நடந்து கொண்டார்.” என்று.
இப்போராட்டங்கள் வன்முறை மிக்கதாகவும் ,சில சமயங்களில் சாத்வீகமானதாகவும் இருந்ததுடன் இசையிலும் அவை வெளிப்பட்டன.கத்தோலிக்க இசையின் தாக்கத்திலிருந்து முற்றாக விடுபட முடியாமல் இருந்தாலும் லத்தீன் மொழிக்குப் பதிலாக ஜேர்மன் மொழியில் பாடல்கள் பாடப்பட்டதுடன் ஜேர்மன் மொழி சொற்ப் பொழிவுகளுக்கும் கொடுக்கப்பட்டது. தாய் மொழிகளில் பூஜைகள் முக்கியத்துவம் பெற்றன . 1525 ம் ஆண்டு முதன் முதலாக ஜேர்மன் மொழியில் Wittenburg சர்ச்சில் பிரார்த்தனை நடைபெற்றது.அது 1526 ம் வருடம் அச்சிலும் வெளிவந்தது.ஜேர்மன் மொழியில் பாடல்களை எழுதியவர் லூதரே ஆவார்.லூதர் அடிப்படையில் ஓர் இசைக்க கலைஞராகவும் விளங்கினர். அவரது இசைத் திறமை மிக இளம் பிராயத்திலேயே இனம் காணப்பட்டதாகவும் ,அவரது இனிய குரலில் மயங்கிய ஓர் வயோதிபப் பெண்மணி அவருக்கு உணவும், உறைவிடமும் கொடுத்து அவரது கல்விக்கும் உதவினார் என அவர் பற்றிய வரலாறு கூறுகிறது.பாடல்கள் பாடுவதிலும் , Lute மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார் லூதர். வட ஐரோப்பாவில் ஏற்ப்பட்ட சமூக மாற்றங்களில் இசையும் ஓர் ஆயுதமாகப் பயன்பட லூதேரின் இந்த இசைப்பின்னனியே காரணம் எனலாம்.1538 இல் வெளி வந்த இசை நூல் ஒன்றின் முன்னுரையில் ” எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் வார்த்தைக்கு அடுத்த படியாக உயர்ந்த இசைக் கலையே இந்த உலகின் மிகப் பெரிய செல்வம். அது இதயத்தையும் ,சிந்தனையையும் ,ஆத்மாவையும் கட்டுப்படுத்துகிறது …” என்று எழுதினார்.

லூதரிய இயக்கம் வட ஐரோப்பாவில் சமூகத்தில் போராட்டங்களை ஏற்ப்படுத்தியதுடன் முன்பிருந்த சமூக இறுக்கத்தையும் தளர்த்தி முதலாளித்துவ சமூகத்தை நோக்கியும் தள்ளியது.இதன் வளர்ச்சி இசையில் திருச்சபை இசை ,அதற்க்கு அப்பாற்ப்ப்பட்ட இசை என இரு பிரிவை உண்டாக்கியது.இந்த தவிர்க்க முடியாத தர்க்க ரீதியான பிளவு 1800 களில்முடிவுக்கு வருகிறது.

மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கிய அமெரிக்க புரட்சி ( 1775 – 1783 ) அதைத் தொடர்ந்த பிரஞ்சுப் புரட்சி (1789 – 1792 )பிரபுக்களையும் ,மதபீடத்தையும் கதி கலங்க வைத்தது.குறிப்பாக பிரஞ்சுப் புரட்சி ஐரோப்பாவெங்கும் சுதந்திரத்திற்க்கான புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தியது.மத பீடத்தின் ஆதரவுக்கும் ,பிரபுக்களின் ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருந்த கலைஞர்கள் விடுதலை பெற்றார்கள்.மறுமலர்ச்சி காலத்தின் தொடர்ச்சியாக மொசார்ட் ( Wolgang Amedeus Mozart – 1756 – 1791 ) வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

7

இந்த மாற்றங்கள் இசையை திருச்சபையின் அதிகாரத்திலிருந்து பிரித்தெடுக்க உதவியதுடன், பூஜை இசையையையும் பின் தள்ளியது.இசையமைப்பாளர்கள் உயர்ந்த இசையைவழங்கக்கூடியவர்களாகவும் ,ரசிகர்களுக்கு இசைவிருந்து அளிக்ககூடிய சிறந்த கலைஞர்களாகவும் உருவாகினர்.திருச்சபையின் கை வினைஞர்கள் என்பதிலிருந்து மாறி உயர்ந்த , கலைத்தரமிக்க இசையமைப்பாளர்களாகவும் மாறினார். மதத் தலைமைக்கும் ,பிரபுக்களுக்கும் எதிராக அமைந்த இந்த காலம் இசையின் வளர்ச்சிக்கு அடிப்படையானதாக அமைந்தது.

18 ம் நூற்றாண்டில் இசை மதத்திலிருந்து மிகத் தீவிரமாக பிரிந்து சென்றது.இதன் நாயகர்களாக மொசார்ட் ( Wolfgang Amadeus மொசார்ட் – 1756 – 1791 ) ,மற்றும் பீத்தோவன் ( Ludwig van Beethoven – 1770 – 1827 ) என்ற மாபெரும் கலைஞர்களை குறிப்பிடுவர்.மனிதத்திற்கான சுதந்திர உணர்வு வேகமாகப் பரவத் தொடங்கிய இக் காலத்தில் பிறர்புக்களிடமிருந்து கலைஞர்கள் தம்மை விடுவித்துக் கொண்டார்கள்.அந்த வகையில் மொசார்ட் சல்ச்பெர்க் ( salzburg ) பிரபுவின் தொடர்பை முறித்துக் கொண்டார். மத பீடத்தால் தடை செய்யப்பட்ட நாடகங்களுக்கு இசை மொசார்ட் புதிய இசை வடிவங்ககளை உருவாக்கினார். The Magic Flute என்ற ஒரு இசை வடிவம் எழுதி முடித்த சில மாதங்களில் தனது 35 வது வயதில் மொசார்ட் மரணமடைந்தார்.
ஆனால் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதவராக விளங்கிய பீத்தோவன் தன்னை மனிதத்துவத்திர்க்கான இசைக்கலைஞன் என பிரகடனம் செய்தார்.பிரஞ்சு புரட்சியை தொடர்ந்து பிரபுக்களை எதிர்த்து ஆட்சிக்கு வந்த நெப்போலியனை வாழ்த்தி மூன்றாவது சிம்போனியை அமைத்த பீத்தோவன் ,பின் நெப்போலியன் பிரபுக்களை ஆதரித்து மாமன்னனாக வர முயன்ற போது தனது மூன்றாவது சிம்போனியை கிழித்தெறிந்தார்.அதற்க்கு பதிலாக தொழிலாளர் எழுச்சியை முன்னறிவிக்கும் விதமாக தனது புகழ் பெற்ற “தொழிலாளர் படையே வருக ” என்ற ஒன்பதாவது சிம்போனியை அமைத்தார்.
மொசார்ட் , பீத்தோவன் அக் காலத்தில் படைத்த இன்று Master Peices என்று இன்று வரை கொண்டாடப்படுகின்றது.இவ்விரு இசை மேதைகளாலேயே ஐரோப்பிய செவ்வியல் இசை ( Classical Music ) உச்சம் பெற்றது. அது மட்டுமல்ல பின் வந்த பல இசை மேதைகளின் இசையில் பெரும் செல்வாக்கு செலுத்தியது என்பது அவர்களது படைப்பாற்றல் திறமைக்கு எடுத்துக் காட்டாகும்.இதை அவர்களுக்கு கடவுள் அருளவில்லை.

முற்றும்.

Exit mobile version