Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது : ஷஸிகா அமாலி முணசிங்க

கவிஞர் பற்றிய குறிப்பு – கவிதாயினி ஷஸிகா அமாலி முணசிங்க

கவிஞர் ஷஸிகா அமாலி முணசிங்க, ஒரு சட்டத்தரணியாவார். அத்தோடு கவிஞர், விமர்சகர், சமூக ஆர்வலர், கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். சிங்கள மொழியில் வாழ்வின் அனுபவங்களைக் கவிதைகளாக எழுதும் இவரது கவிதைகள் பல காத்திரமான இதழ்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். மற்றுமொரு தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே

அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்

தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி
வசந்தங்களைக் கேட்டபோதும்
உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும்
எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது
உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே

ஷஸிகா அமாலி முணசிங்க
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

Exit mobile version