Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அலைக் கற்றை ஊழலில் பிரதமர், சிதம்பரம் தொடர்பு ? : ஆ.ராசா நீதி மன்றத்தில்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைசர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரிந்தே நடைபெற்றதாக நீதிமன்றத்தில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா பரபரப்பாக வாதிட்டார்.

கொள்கையில் தே.ஜ கூட்டணியின் தொலைத்தொடர்பு கொள்கையைத்தான் தாம் பின்பற்றியதாகவும், எனவே தான் பின்பற்றிய கொள்கை தவறு என்றால் 1993 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு முன்பு பணியாற்றிய அனைத்து தொலைத்தொடர்பு அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.

2ஜி வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்வது தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருகிறது.

இதில் தானே வாதாட உள்ளதாக, இவ்வழக்கில் கைதாகி சிறையி அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:

நான் தவறு எதுவும் செய்யவில்லை.2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே நானும் தொடர்ந்து பின்பற்றினேன்.

நான் பின்பற்றிய கொள்கை தவறு என்றால் 1993 லிருந்து எனக்கு முன்பு பணியாற்றிய அனைத்து தொலைத்தொடர்பு அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது பிரதமருக்கும் தெரியும்.மேலும் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதுதான் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அன்னிய முதலீடை பெறுவதற்கு அலைக்கற்றை பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்க வேண்டும் என்று பிரதமர் முன்னிலையிலேயே அப்போதையை நிதியமைச்சரான ப.சிதம்பரம் கூறினார்.

இவ்வாறு அவர் தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.

2ஜி ஒதுக்கீட்டில் பிரதமருக்கு தெரிந்தே அனைத்து நடைபெற்றதாக ஆரம்பத்திலிருந்தே கூறி வரும் ராசா, எதிர்பார்த்தது போன்றே இன்றைய வழக்கு விசாரணையில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் ராசா இழுத்துவிட்டுவிட்டார்.

இது தொடர்பாக நீதிமன்றம் பிரதர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை விளக்கம் அளிக்க கோரும் பட்சத்தில், அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் புள்ளிகளும் நீதிமன்றத்தின் விசாரணை வளையத்திற்குள் வரக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆக,  ஊழல்  மத்தியில்  பலருக்கு  வெளிப்படையாகத் தெரிந்தே நடைபெற்றுள்ளது.  பிரதமர்,  நிதி அமைச்சர் மற்றும்  பல அதிகார மட்டங்களில் இதன்  வேர்கள் காண்ப்பட  ஆ.ராசா  உடன்  ஏனையோரும் தண்டிக்கப்பட  வேண்டும் என கருத்து நிலவுகிறது.

Exit mobile version