அரிசியிலிருந்து மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையால் தற்போது 100 ரூபாவிற்கு விற்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவிற்கு விற்கும் நிலை உருவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 9ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அரிசி, சோளம் மற்றும் பழ வகைகளிலிருந்து மதுபானம் தயாரிப்பதற்கு மதுவரிச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவில் சிறிலங்காவிலேயே அதிகளவு மதுபானம் உற்பத்தி செய்யக்கூடிய மிகப் பெரிய மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவே இவ்வுற்பத்தி நிலையம் கட்டப்படுவதாக அரசியல்வாதிகளால் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்ததும், தற்போது 100 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி 200 ரூபாவாக உயரும் வாய்ப்புள்ளது. இதனால் நாட்டில் சோற்றுக்குப் பதிலாக மதுபானமே முன்னிலை வகிக்கவுள்ளது.
ஏற்கனவே, மாவட்டமொன்றில் இருக்கவேண்டிய மதுபான நிலையங்களின் எண்ணிக்கையை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான நிலையங்களின் எண்ணிக்கை அதிகமென்பதுடன், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் மட்டக்களப்புமாவட்டத்திலேயே அதிகமென அரசாங்க புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மது அருந்துபவர்கள் அனைவரும், வறுமைக்கோட்டக்குட்பட்ட மக்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, கல்குடாவில் பாரிய மதுபான உற்பத்தி நிலையம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த மதுபான உற்பத்தி நிலையத்தைக் கட்டும் வர்த்தகரின் மனைவியும், மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்ட அர்ஜூன் மகேந்திரனின் மனைவியும் சகோதரிகள் என்பதும்குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மதுவை ஒழிப்போம் எனும் வேலைத்திட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதும் வேடிக்கையான விடயம்.
ஒருபுறம் அரசாங்கத்திலிருக்கும் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதுடன், மறுபுறம் மக்களைச் சீரழித்து, போதை, மது வகைகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையை அரசாங்கமே மேற்கொண்டுவருகின்றமை கண்கூடு.