Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை கைவிடப்படுமா? : இதயச்சந்​திரன்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரக் கூடியதாகவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புமளவிற்கு இறங்கி வந்துள்ளது இலங்கை அரசு.
ஐ.நா. சபை மற்றும் மேற்குலகின் மீது மிகவும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் மன நிலையில் இவ்வகையானதொரு அதிரடி மாற்றம் ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி எழாமலில்லை.
அதாவது, சட்ட சபைத் தேர்தலில் வென்றவுடன் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் செல்வி ஜெயலலிதா வெளியிட்ட இலங்கை குறித்தான செய்தி, இந்திய மத்திய அரசிற்கு பெரும் இராஜதந்திர நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.
ஆகவே, அம்மையாரின் தீவிரப் போக்கினை தணிப்பதற்கு இவ்வாறான சமாதான சமிக்ஞைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசிடம் இந்தியா கூறியிருக்க வேண்டும்.
தேநீர் விருந்திற்கு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அழைப்பு விடுத்த வேளையில்தான், வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் நல்லெண்ணத் தூதும் வாழ்த்துச் செய்தியூடாக வெளிவந்திருக்கிறது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவி செய்தது போன்று, நிபுணர் குழு அறிக்கையிலிருந்தும் இந்தியா தம்மைக் காப்பாற்றுமென முதலாளித்துவத் தோழர் (CAPITALIST COMRADE) வாசுதேவ நாணயக்கார போன்றோர் நம்பிக்கையோடு இருக்கையில், தமிழக முதல்வர் தெரிவிக்கும் கருத்துகள் புதுடில்லிக்குப் புதிய அழுத்தங்களைக் கொடுத்து விடலாமென்று கொழும்பு அச்சமடைகிறது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை மத்திய அரசிலிருந்து வரும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள ஈழப் பிரச்சினையைக் கையிலெடுக்கும் தந்திரோபாயத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்துவார் போல் தெரிகிறது.
இந்திய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர் சார்ந்த கட்சி எதிர்க்கட்சியாகவே தொழிற்படும்.
இந்நிலையில் அரசால் வெளியிடப்பட்ட நேரமறிந்த வாழ்த்துச் செய்தி, தமிழக முதல்வரின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை.
இவை தவிர, இந்தியத் தரப்பிலிருந்து பிறிதொரு நகர்வொன்று மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.
அதாவது, நீண்டகாலப் பிராந்திய நலன் குறித்து அக்கறை கொள்ளும் மேற்குலகம், நிபுணர் குழு அறிக்கையினூடாக இலங்கை அரசின் மீது செலுத்தும் தொடர் அழுத்தங்களை, எவ்வாறு தணிப்பது என்பது குறித்து இந்தியா ஆராய்வது போல் தெரிகிறது.
உலகத் தமிழர் பேரவை உடனான றொபேர்ட் ஓ பிளேக்கின் சந்திப்பும் அதனையடுத்து அவர் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் என்பனவற்றின் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் போன்றவை, மேற்குலகின் இறுக்கமான நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்துவதாக இந்தியா உணர்கிறது.
இலங்கையில் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்கிற அக்கறைக்கு அப்பால், தமது பிராந்திய நலனை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது என்பதில் தான் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கிடையே பனிப் போர் நிகழ்கின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினை குறித்தான பொதுத் தளத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்திருக்கின்றது என்கிற தோற்றப்பாடு நிலவினாலும் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசினை அணுகவில்லையென்பது தான் நிஜம்.
கடும் போக்காளர் போன்று காட்சியளிக்கும் அமெரிக்காவை அணுகுவதற்கு பின் கதவு இராஜதந்திர வழிமுறையொன்றினை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிகின்றன.
தமிழ் அரசியல் நீரோட்டத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் கட்சி ஒன்றின் ஊடாக மேற்குலகத்தாரிடம் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாம்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கை அரசானது தீர்வொன்றினை முன் வைத்தால் போர்க் குற்றவிசõரணைக்கான அழுத்தம் கைவிடப்படுமா என்கிற வகையில் அமைந்திருக்கிறது அந்த யோசனை.
18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இலைகள் உருவி எடுக்கப்பட்ட கறிவேப்பிலை காம்பு போல் காட்சியளிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம், வரவிருக்கும் 19 ஆவது திருத்தத்தோடு மூச்சிழந்து போகலாம். இந்த யோசனையின் அடிப்படையில் சர்வதேச சுயாதீன போர்க் குற்ற விசாரணை நகர்வினை, ஓரங்கட்ட முனையும் உறவுப் பால விற்பன்னர்கள், கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்களின் வரலாற்றுப் பதிவுகளை உள்வாங்காமல் அடிபணிவு அரசியலிற்குள் மூழ்கிப் போகும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
ஏற்கெனவே சர்வதேச சுயாதீன போர்க் குற்ற விசõரணையின் அவசியத்தை வலியுறுத்தாமல் உள்நாட்டுப் பொறிமுறையொன்றினை உருவாக்கி சுயாதீன விசாரணையை இலங்கை அரசே நடாத்த வேண்டுமென நழுவல் போக்கினைக் கடைப்பிடிக்கும் சர்வதேசத்திடம், அதனையும் கைவிடுமாறு, தமிழகத் தரப்பின் ஊடாக மேற்கொள்ளும் நகர்வுகளை நிரந்தரமான தீர்வொன்றினை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்காது.
மிகக் குறைந்த தீர்வாக வடக்கிற்கு ஒரு மாகாண சபையையும் அதற்கொரு முதலமைச்சரையும் மட்டுமே பெயரளவில் முன் வைக்கும்.
கிராம, பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுகையில், செனற் சபை என்கிற மாயக் கண்ணாடி ஒன்றையும் காண்பிக்கிறார்கள்.
இந்நிலையில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேற்கொள்ளும் முன்னெடுப்புக்களும் குந்தகம் விளைவிக்கமாட்டோமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய கருத்தினை அவதானிக்க வேண்டும்.
அதேவேளை, தமிழ் மக்களுக்கு பூரண சுயõட்சி வழங்கப்பட வேண்டுமென இந்திய மத்திய அரசினை வலியுறுத்துமாறு புதிய தமிழக முதலமைச்சரிடம் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த வேண்டுகோளும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கெனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்க மாட்டேõமென இரா. சம்பந்தன் அவர்கள் முன்பு உறுதிப்படத் தெரிவித்த கருத்தினை நினைவிற் கொள்ள வேண்டும்.
சர்வதேசத்தின் நேரடித் தலையீடு இல்லாமல் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று உருவாகும் வாய்ப்பு இலங்கையில் தோன்றாது என்பதனைப் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனாலும், மேற்குலகைப் பொறுத்தவரை, ஆசியப் பிராந்தியத்தை விட மத்திய கிழக்கு விவகாரங்களிற்கே தற்போது அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குகின்றது என்பதனை கடந்த வியõழனன்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆற்றிய உரை வெளிப்படுத்துகிறது.
டுனீசியாவில் தீக்குளித்து மாண்டவர் பற்றிய புகழாரம், தனிமனித சுய நிர்ணய உரிமை, மக்கள் எழுச்சிக்கு ஆதரவான போக்கு என்பன ஒபாமாவின் பேச்சு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன.
அதிகாரம், சிறு குழுவின் கைகளில் இருப்பதாலேயே ஜனநாயகத்தை நிலை நாட்ட மக்கள் எழுச்சி உருவாகின்றது என்கிற வகையில் புரட்சிகர கருத்துகளை உதிர்க்கின்றார் ஒபாமா.
அதாவது ஜனநாயக ஏற்றுமதியாளர்கள் நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களே தன்னியல்பான எழுச்சியூடாக அரபுலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மாறுதல்களை தமது நலனிற்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்காகவே மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் குறித்தான புதிய அமெரிக்கப் பார்வை அவசரமாக முன் வைக்கப்படுகிறது.
வருகிற மாதம் நடைபெறவுள்ள ஜீ8 மாநாட்டில் டூனீசியாவிற்கும் எகிப்திற்கும் உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் ஊடாக பொருளாதார உதவிகளை வழங்க உத்தேசித்துள்ளது அமெரிக்கா.
மத்திய கிழக்கு விவகாரத்தில் ஒதுங்கியிருந்தால் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிகளின் கை ஓங்கி, அமெரிக்க எதிர்ப்பு அணிகள், ஜனநாயக வழிமுறையினூடாக பலமடைந்து விடுமென்கிற அச்சம் அமெரிக்காவிற்கு ஏற்படுகிறது.
ஆகவே, டூனிசியா, எகிப்து வாசல்களுக்கூடாக உள் நுழைந்து, ஏனைய நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்தும் மூலோபாயத்தை அமெரிக்கா வகுத்துள்ளதாகப் புரிந்து கொள்ளலாம்.
ஈரானைப் பலவீனப்படுத்தாமல் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வினை எட்ட அமெரிக்கா விரும்பாது என்பதனை ஒபாமாவின் 1967 இல் தீர்மானிக்கப்பட்ட எல்லைக்கோடு குறித்த கருத்து உணர்த்துகிறது. ஆனாலும், வருகிற செப்டெம்பர் மாதம் ஐ.நா. சபையில் முன்வைக்கப்படவுள்ள பாலஸ்தீன தனி நாட்டுத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கும்.
ஆனால், நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்து இலங்கை அரசைக் காப்பாற்ற முனையும் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சுதந்திர இறைமையுள்ள பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும்.
ஆகவே, பிராந்திய நிலைமைகளுக்கேற்ப, வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானித்துள்ள சர்வதேச நாடுகள், இலங்கை விவகாரத்தில் திடமான முடிவுகளை இன்னமும் எடுக்கவில்லை போல் தெரிகிறது.
அழிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்பதை இந்தியா உணர வேண்டும்.
தனி நபர்களுக்கு ஊடாக அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வது ஆபத்தாக முடியும்.
தற்போது தமிழினத்திற்கு தேவைப்படுவது இணைப்பாளர்களோ இடைத் தரகர்களோ அல்ல. அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாகவுள்ள தமிழ்த் தேசியத் தலைமையே இன்றைய தேவையாகும்.

Exit mobile version