Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் தீர்வு இன்றி அபிவிருத்தி சாத்தியம் இல்லை:சண்முகம்

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன்றைய நிலை மிகமிக மோசமானதாகும். கடந்த முப்பது வருடப் போரினால் உயிர் உடைமைகள் மட்டுமன்றிச், சகல வளங்களும் தேவைகளும் அழிவுற்ற நிலையிலேயே இருந்து வருகின்றன. இன்றுங்கூட வன்னிப் போரும் அதன் மூலமான பேரவலங்களும் இடம் பெற்ற வண்ணமே உள்ளன. ஏற்கெனவே குடாநாடும் கிழக்கு மாகாணமும் வன்னியிற் பெரும் பகுதிகளும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றன. அங்கெல்லாம் மக்களின் ஜனநாயக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. வடக்கு கிழக்கில் ராணுவ-சிவில் நிர்வாக இரட்டை நடைமுறைகளே இருந்த போதிலும் ராணுவ நிர்வாகமே யாவற்றையும் தீர்மானித்து வருகிறது. அங்கு ஜனநாயகம், சமாதானம், இயல்பு வாழ்க்கை எதுவும் இல்லை. சுருங்கக் கூறின், ராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் எவ்வாறு மக்கள் நடத்தப்படுகிறார்களோ அவ்வாறான நிலை நீடிப்பதையே காணமுடிகிறது. இது பேரினவாத ஒடுக்கு முறையின் உயர்ந்த கட்டச் செயற்பாடு என்பதில் ஐயமில்லை. 

இந் நிலையில் மகிந்த சிந்தனை அரசு வடக்கு கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப் படும் என்றும் அபிவிருத்தி துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும் உரத்துக் கூறி வருகிறது. ஜனநாயகம் என்பதின் பொருள் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடாத்துவதும் அவற்றில் தமக்கு இணங்கக் கூடியவர்களைப் பதவிகளுக்கு கொண்டு வருவதுமாகும். இதன் பாதையிலேயே ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி மாகாண சபைத் தேர்தல்கள் இடம் பெற்றன. அத் தேர்தல்களில் ஜனநாயகமும் வாக்களிக்கும் சுதந்திரமும் நடைமுறைப்படுத்தப் பட்ட விதம் உலகறிந்த ஏமாற்றாகும். ஏற்கனவே இவ்வகையின் பாராளுமன்ற ஜனநாயகமும் தேர்தல் நடைமுறைகளும் ஊழல்கள் மோசடிகள் வன்முறைகளால் நாற்றமெடுத்து நிற்கின்றன. இதன் மத்தியில் தான் கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையே யுத்தம் முடிந்ததும் வடக்கில் நிலை நாட்டப்போவதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் அமைச்சர்களும் முன்னுதாரணப்படுத்திக் கூறி வருகிறார்கள். இவற்றுக்கு மகிந்த சிந்தனை அரசாங்கம் சூட்டியுள்ள மகுடங்கள் ‘கிழக்கின் உதயம்” ‘வடக்கின் வசந்தம்” என்பனவாகும். 

இதன் மூலம் நாம் இன்றைய மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பேரினவாத நிலைப்பாட்டின் நோக்கையும் போக்கையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களை அந்தந்த மாகாணங்களில் பிரித்து முடக்கி வைத்திருப்பதும் அதிகாரப் பகிர்வு எதுவுமற்ற வெறும் மாகாண சபை நிர்வாகங்களை நடாத்துவதுமாகும். அத்தகைய நிர்வாகப் பதவிகளில் கூட தமக்கு விசுவாசம் மிக்கவர்களைத் தமது கட்சிகளின் மூலம் தேர்ந்தெடுக்கச் செய்து பிடிகயிற்றைத் தமது கரங்களில் வைத்திருப்பதும் அதனூடாக அபிவிருத்தி என்ற பெயரில் கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் என்பவற்றை உருவாக்குவதுமாகும். 

நாம் சற்று ஆழமாக நோக்குவோமாகில் ஜனநாயகம் அபிவிருத்தி ஆகிய இரண்டும் முப்பது வருட அழிவுகரமான போருக்குப் பின் அதி அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க முடியாது. ஆனால் அவற்றை ஒரு ராணுவ நிர்வாகத்தின் கீழ் பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிடலின் மூலம் நிறைவேற்ற முடியுமா என்பதே பிரதான கேள்வியாகிறது. அரசியல் தீர்வு ஒன்று தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் முஸ்லீம் மக்களின் இணக்கப்பாட்டுடனும் நடைமுறைக்கு கொண்டுவரப்படாது எவ்வாறு வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தை சமாதானத்தை இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்க முடியும்? அவ்வாறான சூழலில் அபிவிருத்தி என்பதை முன்னெடுக்க முடியுமா? 

தமிழ், முஸ்லீம் மக்கள் வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இரண்டு தேசிய இனங்கள். அவர்களது பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டு அடிப்படைகள் தனித்துவமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்குரிய சுயாட்சித் திட்டம் அரசியல் தீர்வாகவும் அரசியலமைப்பின் ஊடாகவும் உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். இவ்வாறான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தாலேயே ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் அதிகாரப் பகிர்வைச் சாத்தியமாக்க முடியும். 

இலங்கையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகப் புரையோடிப் போன இனப் பிரச்சினையின் அடிப்படை பேரினவாத ஒடுக்குமுறை என்பதை நியாய சிந்தை படைத்த எவரும் மறுக்க மாட்டார். கடந்த முப்பது ஆண்டுகளில் கொடிய போராக மாற்றப்பட்டு சுமார் இரண்டு லட்சம் மக்களைக் கொன்றொழிக்கவும் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்படவும் சுமார் 15 லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கும் புலப்பெயர்வுக்கும் ஆட்படவும் இன ஒடுக்கு முறையே அடிப்படைக் காரணமாகியது. எனவே அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படாமல் அபிவிருத்தி எனக் கூறுவது அர்த்தமற்ற ஒன்றாகும். 

உலகில் எங்கெனினும் மக்களுக்கும் நாட்டிற்குமுரிய உண்மையான அபிவிருத்தி என்பது அரசியலில் உறுதிப்பாடான நிலையும் குறைந்த பட்ச ஜனநாயகமேனும்; நிலவும் சூழலில், இயல்பு வாழ்க்கையின் மத்தியிலேயே முன்னெடுக்க முடியும். எனவே ஜனநாயக அரசியல் ஸ்திரத்தன்மையும் அதன் கீழான அபிவிருத்தி என்பதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவையாகும். இத்தகை ஒரு சூழலை துப்பாக்கிகளின் பலம் கொண்டு ராணுவக் கண்ணோட்டத்தில் சாதிக்க முடியாது. இதனை ஆயுதப் போராட்டம் நடாத்தும் ஒரு இயக்கத்தால் செய்யவும் முடியாது. அதே போன்று ஆயுத பலத்தால் நிர்வாகம் நடாத்தும் ராணுவத்தாலும் சாத்தியமாக்க முடியாது. 

எனவே மகிந்த சிந்தனை அரசாங்கங்கள் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழான நிர்வாகத்தின் மூலமோ அன்றி அதன் இரும்புச் சப்பாத்தின் கீழான மாகாண சபை, உள்ளுராட்சி நிர்வாகங்களை ஜனநாயகம் எனக் கூறி முன்னெடுப்பதாலோ சாத்தியமாக்க முடியாது. அவற்றையும் மீறி வலுக் கட்டாயத்தின் பேரில் முன்னெடுக்கப் படும் அபிவிருத்தி எதுவும் மக்களுக்குரியதாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு உரியதாக இருக்க மாட்டாது. அரசாங்கம் ஊர் உலகுக்கு காட்ட எடுக்கப்படும் ஒரு கண்துடைப்பாக மட்டுமே இருக்க முடியும். 

எனவே இன்றைய சூழலில் தேசிய இனப் பிரச்சினை என்ற பாரத்துடன் நிற்கும் வண்டிக்கு முன்பக்கத்தில் அதற்குரிய அரசியல் தீர்வு என்ற பலம் மிக்க மாடுகள் கட்டப்பட வேண்டும். அதை விடுத்து அரசியல் தீர்வற்ற பலவீனமான மாடுகளை வண்டியின் பின்னே கட்டுவதால் பயணம் ஒரு அங்குலம் தானும் நகரப் போவதில்லை. ஆதலால் இன்று அவசியம் தேவைப்படுவது உறுதியான, நேர்மையான, தமிழ் முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாகும். அதன் நடைமுறைப்படுத்தலின் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். அல்லாதவைகள் யாவும் பேரினவாதத் திணிப்பாகவும் ராணுவ முனைப்பாகவுமே இருக்க முடியும். 

Exit mobile version