தமிழரசுக் கட்சி: தமிழ் பகுதிகளில் ஒரு பெயரும், தென்னிலங்கையில் வேறு ஒரு பெயரும் வைத்து மகிழ்ந்தோம்: ஏன் செய்தோம் இதை விட்டால்வேறு வழியில்லை.
அது தான் எங்கள் ஸ்டைல் :
உழைக்கும் மலையக மக்களை நாடற்றவராக்க இனவாதக் கட்சிக்கு நண்டுக்கு வளையானோம் : ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
தமிழக்கட்சிகள்: சுதந்திர கட்சியுடன் சேர்ந்து வேலை செய்ய மறுத்தோம்: ஏன் மறுத்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
சிங்கள சட்டத்தை எதிர்த்த இடதுசாரிகளை ஆதரிக்க மறுத்தோம்: எஜமான்களின் உத்தரவின் படி மறுத்தோம். ஏன் ஆதரிக்க மறுத்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
அமெரிக்க ,பிரிட்டிஷ் தூது வராலயங்களில் ஆலோசனைகள் நடாத்தினோம் : ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
இனவாத UNP இணைந்து இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் அழித்தோம்: ஏன் அழித்தோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
இடது சாரிகளுக்கு எதிராக அந்நிய தூதர்களின் ஆலோசனையில் ஆடினோம்; ஏன் செய்தோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
மாவிட்டபுரத்தில் “ஆலய நுழைவில் ” தமிழரின் ” ஒற்றுமை”யை காக்க போலீசுடன் சேர்ந்து ” சென்ட்ரி ” போட்டோம் : ஏன் போட்டோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
திடீரென ” சோஷலிச” தமிழீழம் கோசம் வைத்தோம்.இல்லையென்றால் யாழ்ப்பாணம் ” ஷங்காய் ” ஆகியிருக்கும்.!!! இல்லாவிட்டால் ” சிவப்பு நோய் ” பரவியிருக்கும் ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
இளைஞர்களை உசுப்பி எழுச்சி ஊட்டினோம்; அரசியல் எதிரிகளின் மீது ஏவி விட்டோம் , கொக்கரித்தோம்: ஏன் உசுப்பிவிட்டோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றினோம் ; அது தான் ” பெரும்பான்மை ” தமிழரின் விருப்பம்; ஏன் நிறைவேற்றினோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
UNP யையே தான் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் : ஏன் சொன்னோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
பாராளுமன்றம் போனோம்: UNP யுடன் விருந்துண்டோம் : UNP யுடன் கை கோர்த்தோம் : பதவிகள் பெற்றோம் ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
தமிழ் தலைமையை நம்பி நாம் UNP யை தான் ஆதரித்தோம்: ஏன் ஆதரித்தோம் இதை விட்டால் நமக்கும் வேறு வழியில்லை
கொழும்பில் வந்த அமெரிக்க போர் கப்பலை UNP தலைவர்களுடன் பார்த்து மகிழ்ந்தோம்: ஏன் செய்தோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
தமிழ் மக்களை UNP என்ற கசாப்புக் கடைக்கு கொண்டு போய் விட்டோம்: ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை
அதிஉத்தம ஜனாதிபதி JR இப்படி செய்து விட்டாரே என்று புலம்பினோம்: ஏன் இப்படி புலம்பினோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
உலகில் ஒரு எதிர்க்கட்சி அகதியாக இந்தியா ஓடியது: ஏன் இப்படி ஓடினோம் இதை விட்டால் வேறு வழியில்லை.
” முன்பு ஏவி விட்ட ” காளைகள் மார்பை குதறின: அவர்களுக்கும் இதை விட்டால் வேறு வழியில்லை துரோகத்தின் சம்பளம் என்றார்கள் ” வந்தவர்கள்”.
வந்தவர்கள் “தலைவர் ” காலத்தில் ” ஈழம் மலரும் ” என்றார்கள் ; அருகில் படுத்தவர்களை எல்லாம் சுட்டு தள்ளினார்கள்: சுட்டவர்கள் சொன்னதென்ன : ஏன் சுட்டோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
முப்பது வருடசமாக தமிழ் மக்கள் காணாத பயங்கரங்களை எல்லாம் ” படம் ” போல காட்டினார்கள். காட்டியவர்கள் சொன்னதென்ன : இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
பாராளுமன்ற தமிழ் தலைமைகள் ” புது ” ஹீரோவின் ” நல்ல படம் ” என்று சான்றிதழ்கள் கொடுத்தார்கள் :- இல்லை கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஏன் செய்தோம் . இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
புதிய , புதிய படத் தயாரிப்பாளர்கள் படமெடுக்க வேண்டும் என்றால் நமது புது ஹீரோவோடு தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்கள்: அப்போ தான் படம் ஓடும் என்றார்கள்:
ஏன் சொன்னோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
நவரசங்களும் கொப்பளிக்க படம் நன்றாய்த்தான் ஓடியது. வெளியே படம் ஓடிய தியேட்டரை யார் யாரோவெல்லாம் இடிப்பதை மறந்தும், மறுத்தும் படத்தை ஓட்ட நேர்ந்தது.
ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
” அமெரிக்க போர் கப்பலை UNP தலைவர்களுடன் பார்த்து மிகிழ்ந்த தலைமையின் “ மரபில் வந்தவர்களல்லவா முள்ளிவாய்க்காலில் ” கப்பல் ” வரப்போகிறது என்றார்கள்: ஏன் நம்பினோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
மக்கள் ஓலம் நமது காதுகளை அறுத்தது … இதுவும் ஒரு வாழ்வா என்று அலைகழிக்க வைத்தது… இன்னும் அதற்க்கு ஒரு முடிவில்லை:…
இந்தப் புண் ஆறவில்லை ..ஆற்றுவாரில்லை … அதற்குள் தேர்தல் வரப் போகிறது … தேர்தலால் ஏதாவது தீர்ந்திருக்கிறதா …?
இந்தியாவை விட்டால் வழியில்லை :அமெரிக்காவை விட்டால் வழியில்லை; தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டால் வழியில்லை : இப்போ விக்கியை விட்டால் வழியில்லை. ஏன் இதைச் சொன்னோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
வழியுண்டா …!?
வழியுண்டு…!!
மீண்டும் மீண்டும் தோற்றுப் போன வழி முறைகளையும் பல முறை தோற்றுப்போனவர்களையும் நிராகரித்தால்..!! வழியுண்டு…!!