Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசாங்கத்தின் அழுத்தத்தினால் யாழில் பெயரின்றி இயங்கும் அம்மாச்சி உணவகம்!

வடமாகாணத்தைச்சேர்ந்த ஐந்து மாவட்டங்களிலும், தமிழர்களின் கலாச்சாரத்துடன் கூடிய உணவகமொன்று ‘அம்மாச்சி’ என்ற பெயருடன் வடமாகாண விவசாய அமைச்சினால் திறந்துவைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

குறித்த உணவகமானது, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயர் பலகையுடனேயே இயங்கி வருகின்றது. ஆனால், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் எந்தவொரு பெயருமின்றி இயங்கி வருகின்றது.

அம்மாச்சி உணவகத்தில்,, இயற்கையான முறையில் அதிக சுகாதாரத்துடன் தயாரிக்கப்படும் உணவுகளை மிகவும் மலிவாகப் பெற்றுக்கொள்ளமுடியும். இதன்காரணமாக அம்மாச்சி என்ற உணவகத்தின் பெயர் பட்டிதொட்டியெல்லாம் அடிபட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

அத்துடன், இவ்வுணவகம் அமைந்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்கள் குறைந்த தொகையினை வாடகையாகச் செலுத்திவிட்டு, இங்கு உணவுற்பத்தி செய்து தமது வருமானத்தைப் பெருக்கமுடியும்.

இதன்மூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய உணவுமுறைகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கமுடியும் என்பதும் இதன் சிறப்பம்சம்.

இவ்வாறு நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பொறுக்கமுடியாத அரசாங்கம், யாழில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்துக்கு ‘ஹெல போஜன’ எனப் பெயரிடுமாறும், அரசாங்கத்தின் நிதியுதவியில் இவ்வுணவகம் அமைக்கப்பட்டதால், இதனை விவசாய அமைச்சர் துமிந்த சில்வாவே திறந்துவைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், இதற்கு அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததனால் இதன் திறப்புவிழாவும் காலந்தாழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தது. பின் ஐங்கரநேசன் பதவி இழந்ததும், வடமாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவ்வுணவகத்துக்கு எந்தவொரு பெயர்ப்பலகையையும் நிறுவாது மக்கள் முன்னிலையில் திறந்துவைத்துள்ளார்.

ஹெல போஜன திட்டத்தில் இலங்கை பாரம்பரிய உணவுகள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் தமிழ் பாரம்பரிய உணவுகளிற்கு இடமில்லை. ஹெல போஜனின் பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யலாமென மத்திய அரசு கூறினாலும், அது தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமே?

Exit mobile version