Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அம்பேத்கர் சமஸ்கிருதத்தை பொதுமொழியாக்க விரும்பினாரா- விவரிக்கிறார் புனிதப்பாண்டியன்!

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அண்ணல் அம்பேத்கர் இந்தியாவின் பொது மொழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வர திட்டம் தயாரித்தார் என்று கூறியிருந்தார். இது உண்மையா என்று தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனிடன் கேட்ட போது விரிவாகவே பேசினார். “இது போன்ற கருத்துக்கள் ஏன் வருகிறது என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்துக்களும் விரிவாக ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் தொகுக்கப்பட்டு மத்திய அரசாலும், மராட்டிய அரசாலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இது 22 தொகுதிகளாகவும் இதன் தமிழாக்கம் 37 தொகுதிகளாக தமிழிலும் வெளி வந்துள்ளது. அம்பேத்கர் சமஸ்கிருந்தத்தை இந்தியாவுக்கான பொது மொழியாக மாற்ற வேண்டும் என்று சொன்னார் என்று நீதிபதி சொல்வார் என்றால் அதற்கான உரிய ஆதாரங்களை இந்நூல்களில் இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டும். ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி அம்பேத்கரின் பெயரில் சொல்வதற்குரிய மேற்கோள்களைக் காட்ட வேண்டும். ஆனால் நீதிபதி பாப்டே சொல்வது போன் எதுவும் அம்பேத்கரின் நூல்களில் இல்லை. அவர் அப்படி எப்போதும் பேசியதோ எழுதியதோ இல்லை. சமஸ்கிருதத்தை பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் இந்தியாவில் வெறும் இரண்டு சதவிகிதம் பேர்தான். அது ஒரு செத்த மொழி என்பது சிறு குழந்தைகளுக்குக் கூட தெரியும். அப்படி செத்து போன மொழியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார் என்பது அம்பேத்கரின் விருப்பமா அல்லது சொன்னவர்களின் விருப்பமா என்பதை ஆராய வேண்டும்.

ஒரு நியூஸ் பேப்பர் கட்டிங்கை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் கடந்த பத்து ஆண்டுகளாக திட்டமிட்டு இதை பரப்பி வருகிறார்கள். மொழி வாரி மாநிலங்கள் குறித்த அம்பேத்கரின் ஆவணம் மிக முக்கியமானது. மொழி வாரி மாநிலங்கள் அமைக்கபப்ட்ட போது அதை அம்பேத்கர் ஆதரித்தார். ஆனால் அம்பேத்கர் இந்த சமூகத்தை எப்படி அணுகினார்? மொழி ரீதியாக, இன ரீதியாக இந்தியச் சமூகங்கள் பிளவு பட்டிருக்கிறது என்பதாக இன அரசியல் செய்வோர் சொல்வதையும், வர்க்க ரீதியாக பிளவு பட்டிருக்கிறது இந்தியா என்று இடதுசாரிகள் சொல்வதையும் அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய சமூகங்கள் சாதி ரீதியாக பிளவுண்டிருப்பதாகக் கருத்திய அம்பேத்கர் அதை தன் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவும் செய்தார். இரண்டாயிரம் ஆண்டுகளாக 6000 சாதிகளாக மேலும் கீழுமாக படி நிலைப்படுத்தப்பட்டு இந்திய சமூகங்கள் சாதியாக பிளவு பட்டி கிடக்கிறது என்றார்.

இந்த சாதிகளுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றார். தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தமிழர்கள் VS தெலுங்கள், தமிழர்கள் VS மலையாளிகள், தமிழர்கள் VS கன்னடர்கள் என்ற முரணை கூர்மையாக்கி அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தில் இந்த முரண் தான் முதன்மையாக உள்ளதா என்றால் இல்லை. சாதி முரண் தான் முதன்மையாக உள்ளது. இவைகள் உண்மையாகவே முரண் என்றால் தமிழர்களுக்குள் ஏன் இத்தனை முரண்பாடுகள். ஊரென்றும் சேரியென்றும் ஏன் தமிழகம் பிளவு பட்டுள்ளது.

சேரியில் இருப்பவரும் தமிழ்தான் பேசுகிறார் ஊரில் இருப்பவரும் தமிழ்தான் பேசுகிறார். இந்திய சமூகம் என்றாலும் தமிழ் சமூகம் என்றாலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாதி அடிப்படையில்தான் மக்கள் பிளவுபட்டிருக்கிறார்கள். இதுதான் அண்ணல் அம்பேத்கரின் பார்வை. சில நாட்கள் முன்னர் வரை அம்பேத்கார் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று சொன்னார் என்று தமிழார்வலர்கள் சொல்வார்கள். அம்பேத்கரின் தாய் மொழி தமிழ் அல்ல அவர் மராத்தி மொழியை தாய் மொழியாகக் கொண்டவர். அவர் நடத்திய அத்தனை பத்திரிகைகளும் மராத்தி மொழியில்தான் வெளியானது. தமது மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்க அவர் மராத்தி மொழியில்தான் எழுதினார்.

மொழிகள் பற்றிய அறிக்கையை வெளியிட்ட அம்பேத்கர் இந்தியாவுக்கு ஒரு மொழி தேவை என்றால் இந்தியை வைத்துக் கொள்ளலமா என்று பரிந்துறைத்தார். ஆனால் அவரே இந்தியை பொது மொழி ஆக்கினால் தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே ஆங்கிலம் பொது மொழியாக இருக்கும் என்றார். அம்பேத்கருக்கு மொழிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்கள் பேசிய மொழி தமிழ் என்றார்.இந்தியாவின் பூர்வகுடிகளான நாகர்கள் பேசிய மொழி தமிழ் மொழி, தமிழ் திரமிளமாகி திராவிடம் என்றானது என்று அம்பேத்கர் சொல்கிறார். தமிழ் மீது ஆந்த பற்று கொண்டவர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை உருவாகியவர் என்ற அடிப்படையில் நிர்வாக மொழியாக இந்தியை பயன்படுத்தலாமா என்று பரிந்துரைத்தார். ஆனால் தமிழுணர்வாளர்களில் ஒரு சிலர் தொடர்ந்து இது பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழுணர்வு இருப்பது தமிழா இன உணர்வு கொள் என்ற முழக்கம் அரசியல் முழக்கமாக மட்டுமே உள்ளது. ஈழத் தமிழர், காவிரி பிரச்சனை, இந்திக்கு எதிரான உணர்வு என அடிப்படையில் அரசியல் ஓர்மையாக உள்ளது. ஆனால் சமூக ஓர்மையாக மாறவில்லை.

மேடையில் தமிழ் தமிழ் என்று கொந்தளித்து விட்டு கூட்டம் முடிந்த பின்னர் முழங்கி விட்டு வீட்டிற்குப் போகும் போது ஒரு பகுதியிடன் வீட்டிற்கும் இன்னொரு பகுதியினர் செரிகளுக்கும் செல்கிறார்களே இது என்ன மாதிரியாப அரசியல் உண்டும். சமூக ஓர்மை என்றால் ஊரும் சேரியும் பிரிந்திருக்கிறது அதை இவர்களின் கண்ணுக்கு 8 லட்சம் கிராமங்கள் இந்தியாவில் இருக்கிறாது என்றால் 8 லட்சம் கிராமங்கள் இருக்கிறது என்று பொருள். சாதிகள் என்பது இங்கு இல்லையா? தமிழர்கள் இன உணர்வு கொள்ள வேண்டும் என்ற அரசியல் முழக்கம் வீடுகளிலோ, கோவில்களிலோ, பண்பாட்டு நிகழ்வுகளிலோ இல்லை. சுடுகாடுகள் இரட்டை டம்ளர் முறை உள்ளது. ஆணவக்கொலைகள் நடக்கிறது,. இன உணர்வு பண்பாட்டு ஓர்மையாகவோ, சமூக நினைவாகவோ இருந்தால்தான் அது வெற்றி பெற முடியும். ஆக ஊரும் சேரியும் தனித் தனியாக இருக்கும் வரை தமிழர்கள் ஓர்மை பெற்றுள்ளார்கள் என்பதே மேலோட்டமானது. இந்தியாவில் தலித் வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகம். என விரிவாக பல விஷயங்களையும் பேசுகிறார் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன்.

Exit mobile version