கொலைசெய்யப்படுவதற்கு 8 நாட்களின் முன்னரே மைக்கல் பிரவுன் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். அவரது பள்ளி ஆசிரியர்களின் கருத்துபடி அமைதியான மாணவனாகக் கருதப்பட்டார்.
அமெரிக்க சார்பு கோப்ரட் ஊடகங்கள் மைக்கல் பிரவுன் என்ற சிறுவனின் புகைப்படத்தை கோரமாக வெளியிடுவதிலிருந்து பல்வேறு புனைவுகளை வெளியிட்டு கொலைகளை நியாயப்படுத்தின.
மைக்கலின் கொலையைத் தொடர்ந்து பெர்குசன் மக்கள் மட்டுமன்றி அமெரிக்கா முழுவதும் வாழும் மனிதாபிமானிகளும் ஜனநாயகவாதிகளும் ஒரணியில் இணைந்துகொண்டனர். பேர்குசன் மக்கள் போராட ஆரம்பித்தனர். மக்களைக் கொள்ளையிடும் பெரும் வணிக நிறுவனங்கள் உட்பட அரச கட்டடங்கள் கோபம் கொண்ட மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.
ஆர்மட் வாகனஙகளும் போர்க்கால ஆயுதங்களும் மக்களின் அமைதிவழிப் போராட்டங்கள ஒடுக்குவதற்கு வரிசையாக நிறுத்தப்பட்டன.
மக்கள் அடிபணியவில்லை போராட்டம் தொடர்கிறது. உலகம் முழுவதும் போராட்டத்திற்கான ஆதரவு பெருகிவருகிறது. மறுபுறத்தில் இராணுவத் தாங்களும் கவச வாகனங்களும் பேர்குசன் நகரத்தை ஆக்கிரமித்துள்ளன. கொலைகார நிறவெறிப் போலிசிற்கு ஆதரவாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
வழமை போல உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சார்பு அரச ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய்யான தகவல்களைப் பரவவிட்டன. மக்களின் போராட்டம் என்பது கறுப்பின மக்களின் கொள்ளையாகச் சித்தரிக்கப்பட்டது.
தனது நாட்டிலுள்ள பணம்படைத்த அதிகாரவர்க்கத்திற்காக உலகம் முழுவதும் கொத்துக்கொத்தாகக் கொலைகளை நடத்திவரும் அமெரிக்க அரசு தனது எல்லைக்குள்ளேயே மக்களை இராணுவச் சிறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கிறது. பேர்குசன் என்ற சிறிய நகரத்தில் 21 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். 6.2 சதுர மைல் சுற்றளவைக் கொண்ட இந்த நகரத்தில் போலிஸ் துறைக்கு வழங்கப்படும் வருடாந்தத் தொகை 5.2 மில்லியன் டோடலர்கள். மூன்றில் இரண்டு பகுதி கறுப்பின மக்கள் வசிக்கும் இந்த நகரத்தைப் போன்றே ஏழைகள் வசிக்கும் பல்வேறு நகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக பெரும் தொகைப் பணம் செலவிடப்படுகின்றது. பாதுகாப்பு ஒளிப்படக் கருவிகள், ஆர்மட் வாகனங்கள். போர்க்காலத்திற்குத் தேவையான இராணுவக் கொலைக் கருவிகள் போன்ற அனைத்து வசதிகளுடனும் போலிஸ் இந்த நகரங்களின் நிலைகொண்டுள்ளது என்பதைப் பேர்குசன் போலிஸ் பயங்கரவாதம் உறுதிப்படுத்தியது.
உலகத்தின் 85 பெரும் பணக்காரர்கள் உலகத்தின் அரைவாசிப் பகுதியின் வருமானத்திற்கும் அதிகமான பணத்தை கையகப்படுத்தி வைத்துள்ளார்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். உலகம் முழுவதும் இவர்களின் சொந்த நலன்களுக்காகவே இராணுவ மயமாக்கப்படுகின்றது. குழந்தைகளும் முதியவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் இவர்களுக்காகவே மடிந்து போகிறார்கள்.
உலகின் மூலை முடுக்கெல்லாம் வளங்களையும் மனித் உழைப்பையும் சுரண்டும் இவர்கள் ‘தயவில்’ அமெரிக்கா உலகத்தின் மிகப்பெரும் கடனாளி நாடாக மாறியுள்ளது. இக்கடனை மீள் செலுத்துவதற்கு அமெரிக்காவின் அப்பாவி மக்களை கொள்ளையிடுகின்றன.
இக்கொள்ளையிலிருந்து மீள்வதற்கான போராட்டங்கள் சமூக மாற்றத்திற்கான வர்க்கப்போராட்டங்களாக மாற்றமடையும் சூழல் காணப்படுகின்றது. அதனை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா முழுவதும் இராணுவமயப்படுத்தப்படிகின்றது.
90 களிலிருந்தே அமெரிக்கப் போலிஸ் இராணுவமயப்படுத்தப்படுவது தொடர்பாக பல அரசியல் ஆய்வாளர்களால் எச்சரிக்கப்பட்டது. காப்பேலர் மற்றும் கிராஸ்கா ஆகிய ஆய்வாளர்களின் கட்டுரை ஆதாரங்களுடன் இவற்றை வெளிப்படுத்தியது.
பேர்குசன் நகரத்தில் ஆரம்பித்து அமெரிக்கா முழுவதும் நடைபெறும் அரை இராணுவ ஆட்சிதான் கோப்ரட் ஜனநாயகம்.
இதற்கு எதிராக மக்களின் ஜனநாயகத்திற்கான போராட்டம் தவிர்க்க முடியாத வெற்றியடையும் என்பதை பேர்குசன் மக்கள் உலகத்திற்குச் சொல்கின்றனர்.