இப்போதும் புலி சார் அமைப்புக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற ஏனைய அமைப்புக்களும் அமரிக்காவின் ஐந்தாம் படைகளைப் போன்றே செயற்படுகின்றன. இது வரைக்கும் அமரிக்காவின் தலைமையில் உலகம் முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அரச பயங்கரவாதம், இலங்கையிலும் அதன் தலைமையலேயே இனப்படுகொலையை நடத்தி முடித்தது. இலங்கை அரசிற்கு பயங்கரவாதத்தை அழிக்கும் நோக்கில் உள்நாடு பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், போன்றவற்றுடன் சிறிலங்கா தனது கடல்சார் எல்லை பாதுகாப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாத் தெரிவித்துள்ளது.
அமரிக்காவினதும் ஏனைய அதிகார அமைப்புக்களதும் நேரடி அல்லது மறைமுக உளவுப்படைகள் போன்று செயற்படும் புலிசார் அமைப்புக்கள் மேலும் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் அழிக்கப்படுவது குறித்துத் துயரடைவதில்லை. அமரிக்காவும் ஏனைய நாடுகளும் தங்கள் சொல்லைக் கேட்பதாக மக்களை மந்தைகளாக்கும் இந்தக் கும்பல்கள் இன அழிப்பிற்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் துணைபோகின்றன. இலங்கை அரசால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ள கருத்தியல் பிரச்சாரங்கள், அதன் உளவுப்படைகளின் பிரசன்னம் என்பன குறித்து இவர்கள் கண்டுகொள்வதில்லை.
தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம், ஒருங்கிணைப்புக் குழு என்ற பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் அமைப்புக்கள் ஈழத் தமிழரின் அலவத்தை அடகுவைத்து தமது பிழைப்புவாத அரசியலை நடத்துகின்றனர்.
இலங்கையிலிருந்து கே.பி, டக்ளஸ் தேவானாந்தா, கருணா, பிள்ளையான், இடதுசாரி சாயம் பூசிய அமைப்புக்கள் போன்றனவும் அவற்றின் உப அமைப்புக்களும் புலம் பெயர் நாடுகளில் தமது தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றன. பெரும்தொகையான ஏகாதிபத்திய நிதி வழங்கலைக் கொண்டுள்ள இந்த அமைப்புக்களை புலி சார் அமைப்புக்கள் கண்டுகொள்வதில்லை. தமது அடையாளம், பிரபாகரனின் புகழ் பாடல், மாவீரர் அஞ்சலி, நினைவு நிகழ்வுகள், முன்னைய வீரம் போன்றவற்றுள் தம்மை முடக்கிக்கொண்டு அவற்றினூடாக தமது வியாபாரத்தை செவ்வனே நடத்தும் புலி சார் அமைப்புக்களுக்கு இலங்கை அரச உளவுப்படைகளின் தீவிர செயற்பாடுகள் பொருட்டே அல்ல.
இந்த நிலையில் புலிகளின் நிதிச் செயற்பாடுகள் ஐரோப்பாவிலும் வட அமரிக்க நாடுகளிலும் இன்னும் இயங்கிவருவதாக அமரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது அறிக்கையில் ‘கவலை’ தெரிவித்துள்ளது. இலங்கை அரசும் இது குறித்து கவலை கொண்டுள்ளதாக போகிற போக்கில் கூறிவைத்திருக்கிறது.
இலங்கை அரசிற்கு எதிராகவும், அமரிக்க ஏகாதிபத்தியத்தின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் கருத்தை ஏற்படுத்த முனையும் சிறுபான்மையினருக்கு எதிராக புலி எதிர்ப்புக் கும்பல்களும், அரச ஆதரவாளர்களும் அருவருப்பான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பொதுவாக சமூக வலைத் தளங்கள், இணையங்கள் என்பவற்றினூடாக இத் தாக்குதல்கள் முடுக்கிவிட்ப்பட்டுள்ளது.
புலியெதிர்ப்பு கும்பல்களில் பெரும்பாலனவர்கள் அவ்வப்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு, தலித்தியம், இனவாத எதிர்ப்பு என்பவற்றைத் தமது ஜனநாயக முகமூடியாகப் பாவனை செய்துகொள்கின்றனர்.
புலிசார் அமைப்புக்கள் குறித்து இவர்களோ அன்றி இவர்கள் குறித்து புலிசார் அமைப்புக்களோ கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு சமூகவிரோதக் குழுக்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க அமரிக்க, இந்திய இலங்கை அரசுகள் தமது இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றித் தொடர்கின்றன.