அப்பிள் ஐ போன் 6 விற்பனைக்கு விடப்பட்டதைத் தொடர்ந்து அதனைப் பெற்றுக்க்கொள்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் வரிசைகளை லண்டன் மற்றும் பிரித்தானியாவின் நகரங்களில் காணக்கூடியதாகவிருந்தது. தொலைபேசிக் கருவியின் அதி உச்ச விலை 789 பவுண்ட்ஸ்கள். கருவியைப் பெற்றுக்கொள்வதற்காக பத்து நாட்களுக்கும் மேல் லண்டனின் மையப்பகுதியான கொவன்ட் கார்டனிலிருந்த அப்பிள் கடைக்கு முன்னால் முகாமிட்டு காத்திருந்திருக்கிறார்கள். 11 நாட்கள் முகாமிட்டிருந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஸோல்டன் என்பவர் அப்பிள் ஐ போன் 6 ஐ முதல் ஆளாகப் பெற்றுக்கொண்டு ஐபோன் கடையிலிருந்து மகிழ்ச்சி ததும்ப வெளியேறினார்.
ரீஜென்ட் தெருவில் அமைந்துள்ள இந்தக் கடையிலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் வீடற்றவர்களும், சமூகத்தில் நாளாந்த உணவிற்கு ஏங்கும் மனிதர்களும் மூன்று வருடங்களின் முன் முகாமிட்டுப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர். டெமோகிரசி விலேஜ் என்று அழைக்கப்பட்ட இந்தப் போராட்டதைத் தடை செய்த அரசு லண்டனை அசுத்தப்படுத்தியதாக போராட்டக்காரர்களிடம் தண்டப்பணம் கோரியது. சிலரது தண்டப்பணம் ஒரு மில்லியன் வரை சென்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாழ்நாளில் லண்டனை மையமாகக்கொண்டு எந்தச்செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு முடக்கப்பட்டுவிட்டார்கள். உரிமைக்காகப் போராடியவர்கள் துரோகிகள் ஆக்கப்பட அப்பிளின் கொள்ளைக்கு முகவரியிட்டவர் சாதனையாளராக ஊடகங்களில் உலாவருகிறார்.
ஐபோனை உற்பத்தி செய்வதற்கு அதன் இறுதி விலையிலிருந்து 1.1 வீதமே செலவாகிறது. ஒவ்வொரு ஐ போன் கருவியையும் விற்பனை செய்யும் போது 60 வீதமான பணத்தை இலாபமாக ஐ போன் நிறுவனம் பெற்றுகொள்கிறது.
உலகின் ஏனைய நிறுவனங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஐ போன் நிறுவனம் கொள்ளப்பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறது.
பழபழக்கும் தொலைபேசிக் கருவி சீனத் தொழிலாளர்களின் இரத்ததை உறிஞ்சியே தயாரிக்கப்படுகின்றது.
ஐ போன் சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றது, முன்னை நாள் சோசலிச நாடான சீனாவில் தொழிலாளர்கள் சிறைவைக்கப்பட்டு அந்தச் சிறையிலேயே ஐ போன் தயாரிக்கப்படுகின்றது. சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வரும் பாக்ஸ்கான் என்ற தாய்வான் நிறுவனம் பெரும்பகுதி உற்பத்தியை செய்கிறது.
அமெரிக்கப் பல்தேசிய நிறுவனத்திற்கு சீனா வழங்கும் மானியம், சட்ட இலகுபடுத்தல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிலாலர்கள் தொழிற்சாலையிலேயே தங்கவைக்கப்பட்டு ஐ போன் உற்பத்தி நடைபெறுகிறது. சீனப் பத்திரிகையான ஈவினின் போஸ்ட் இன் ஊடகவியலாளர் யங் வூ பத்து நாட்கள் ஐ போன் தொழிற்சாலையில் வாழ்ந்து அத் தொழிலாளர்கள் சுரண்டப்படும் முறை குறித்த அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார். எட்டு மணி நேர வேலை என்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்கு அங்கு இடம் கிடையாது. 2012 ஆம் ஆண்டின் இறுதியில் 20 ஆயிரம் புதிய தொழிலாளர்களை இணைந்துக்கொண்ட நிறுவனம் ஒவ்வொரு பத்து மணி நேர வேலைக்கும் 3000 புதிய ஐ போன்களை உற்பத்தி செய்தது. பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து செத்துப் போயுள்ளார்கள்.
பெரும்பாலானவர்கள் தொழிற்சாலையின் மேற் தளத்திலிருந்து கீழே குதித்துச் செத்துப்போகிறார்கள். 2010 ஆம் ஆண்டில் மட்டும் 18 பேர் தற்கொலைக்கு முயற்சித்து 14 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். 2013 ஆம் ஆண்டில் ஒரு ஆணு,ம் ஒரு பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்கள். வேலைப்பழுவும் சிறை வாழ்க்கையுமே தற்கொலைக்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
மிருகங்கள் போல நடத்தப்படும் தொழிலாலர்கள் களைத்துப்போய் சில நிமிடங்கள் ஓய்வெடுத்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. நிறுவனத்தின் தொழிலாளர்கள் வாரத்திற்கு 85 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகின்றனர்.
தொழிலாளர்கள் ஐ போன் தயாரிப்பு நிறுவனத்திலேயே தங்க வேண்டும். அவர்கள் ஒரு சிறிய அறைக்குள் 8 பேரும், பெரியவற்றினுள் 20 பேரும் தங்கவைக்கப்படுகின்றனர். அனைவரும் படுக்கைக்குப் போனால் அறைகளின் நடமாடுவதற்கு இடைவெளி கிடைக்காத அளவிற்கு நெருக்கமான அறைகள். உறங்கி எழுந்ததும் படுக்கையைப் பூட்டி வைப்பதற்கு சிறிய பெட்டிகள் வழங்கப்படுகின்றன. ஓய்வு நாளில் போதிய அளவிற்கு மதுபானம் வழங்கப்படும். வெளியில் செல்வதற்கோ வேறு வேலைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கோ தொழிலாளர்களுக்கு நேரம் கிடைக்காது.
பிரித்தானியாவிலுள்ள லைக்கா நிறுவனத்தில் கூட இதற்கு ஒப்பான வேலை வாங்கும் முறை கையாளப்படுவதாக அண்மைக்கால சாட்சிகள் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்களைத் தடுப்பதற்கான தன்னார்வ நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. வரிகட்டாமல் தப்பித்துக்கொள்வதற்காக ஏகாதிபத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள சட்டமான கோப்ரட் சமூகப் பொறுப்ப்ச்சட்டம் என்பதன் அடிப்படையில் அப்பிள் தன்னார்வ நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இதன் மறுபுறத்தில், அப்பிள் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளது. அப்பிள் பதுக்கிய பணம் முழு உலகத்தினதும் வறுமையை நிறுத்துவதற்கு போதுமானது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பதுக்கிய பணத்தின் தொலை 100 பில்லியன் டொலர்கள்.
பிரித்தானியாவின் பிரபல நகைச்சுவையாளர் ரஸல் பிரண்ட் அப்பிள் தொடர்பாக அவரது யூ ரியூப் சனலில் பதிந்துள்ள வீடியோ அப்பிளை கடித்துத் துப்புகிறது.