வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார்.
இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’. அதற்கு அந்தக் காவலாளி ‘இல்லைப்பிள்ளை, எனக்குத் தெரியாது. நீ யாரம்மா? என வினவியுள்ளார்.
அதற்கு அனந்தி இவ்வாறான இடங்களில் வேலைசெய்யும் நீங்கள் பத்திரிகைகள் வாசித்து உங்களதுபொது அறிவினை வளர்த்துக்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துவிட்டு அலுவலகத்திற்குள்ளே சென்றுவிட்டார்.
குறித்த காவலாளி தொடர்பாக அனந்தி பிரதம செயலாளரிடம் முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அனந்தி கருத்துத் தெரிவிக்கையில், குறித்த காவலாளி மரியாதையில்லாமல் என்னுடன் நீயெனக் கதைத்தார் . ஆகையால் நான் குறித்த பிரச்சனை தொடர்பாக பிரதம செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுசென்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு இன்னொருவர் மரியாதை செலுத்துவது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. அனந்தி அமைச்சர் என்ற காரணத்திற்காக காவலாளி எழுந்துநின்று மரியாதை செலுத்தவேண்டுமென்ற தேவையெதுவுமில்லை. அனந்திக்காக காவலாளியை வேலையை விட்டு நீக்கியது பிரதம செயலாளரின் தவறே.