வெகுநாட்களுக்குப் பிறகு வாழ்க்கை அனுபவங்களின் பிழிவாகச் சொட்டும் கவிதைத் தொகுதியொன்றினைப் பற்றிய எனது உணர்வுகளை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் நேரமும் மனநிலையும் எனக்குக் கிடைத்திருக்கிறது. கவிஞர் மனுஸ்யபுத்திரனின் ”இதற்கு முன்பும் இதற்கும் பிறகும்” கவிதைத் தொகுதியை வாசித்தபோது அவருக்கென ஒரு கவிதை மொழியிருப்பதையும் அம்மொழி கவிதைத்தாள்கள் நெடுகிலும் பரவி வருவதையும் உணரக் கூடியதாக இருந்ததும், அதன் பிறகு என் கைகளிற் கிடைத்த ”அதீதத்தின் ருசி” கவிதைத் தொகுதி எமது உலகத்தை எமக்கே அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் ருசியை மனப்பறவை உணர்த்தியது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அதிர்வுகளை இசையாக்கி இக்கவிதைகளின் பாடல் ஒலிக்கிறது. அப்பிய அரிதாரங்களோடு முகங்களை மூடியபடி திரியும் மனிதவர்க்கத்தின் முகமூடிகளை பிடுங்கியெறியும் கவிதைகள், ஒவ்வொரு முகத்தையும் நிர்வாணம் கொள்ளச் செய்கிறது.
ஒரு மனிதனுக்கு பிடித்துப்போகும் விடயங்கள் அனைத்தும் அந்த நிமிடத்தில் அவனிருக்கும் மனநிலையிருந்தே பிறக்கிறது. மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் இருந்து நான் எடுத்து வைத்திருக்கும் சிலவரிகளை ஏன் தேர்வு செய்தேன் என்பது எனது இன்றைய மனநிலையைப் பொறுத்ததே. சில கசப்பான காலங்களை நான் கடந்துக்கொண்டிருக்கும் போது இந்த புத்தகமும் என்னோடு சேர்ந்து என் கையோடு நடந்துகொண்டிருந்தது. பெருந்தோட்டத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டுவரப்பட்ட ஒரு தனித் செடியைப்போல, ஒரு அகதியின் ருசி குறைந்த வாழ்நிலையைப்போல, இங்கே நான் குறிப்பிடும் கவிதைகளின் ருசியை, அதன் வாசத்தை, நுண்ணிய உணர்வுகளை முழுமையாகத் என்னால் தரமுடியாது. ”அதீதத்தின் ருசி”யை நீங்கள் முழுமையாகப் படிப்பதன் மூலமே முழுமையான அதன் ருசியை நீங்கள் அடைய முடியும்.
சினேகிதிகளின் கணவர்கள்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்
.
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின் குறிப்பை இணைத்துவிடுகிறாள்
.
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை
எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள்
எவ்வளவு தூரத்தில்
அமையவேண்டும்
எந்தக் கணத்தில்
வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும்
பழகிக்கொண்டேன்
.
நான் குழப்பமடைவதெல்லாம்
சினேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பதென்று
.
ஒரு சிநேகிதியை
’சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று
இது கவிதைத் தொகுதியின் முதலாவது கவிதை. படித்தபின் எனக்கு சில நொடிப்பொழுதுகள் தேவைப்பட்டன. அவை எனது முகத்தை ஒருமுறை என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வைப்பு நாங்கள் எத்தனை பெரிய நடிகர்கள் என்பதை சொல்லிக்கொண்டே இருந்தது.
எம் கலாச்சாரத்தின் அபத்தங்களையும், உறவுகளின் கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் காட்டும் கவிதைகள் இங்கே ஏறாளமாக் கிடைக்கின்றன. ஆண் பெண் தொடர்பாக அனைத்தும் பாலியலோடு தொடர்புபடுத்தி பழகிவிட்டதொரு சமூகத்தின் கெட்டவாடை கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் அடித்துப்போடுகிறது. முகம்தெரியாத இந்தச் சினேகிதனின், சினேகிதியின் சிறுமைகள் நிரம்பிய உலகை நானும் எனது உலகத்தோடு ஒப்பிட்டு உணரமுடிகிறது. கலாச்சாரத் தொழிற்சாலையின் நிறநிறமான முகமுடிகளை நாம் ஒவ்வொருவரும் காவிக்கொண்டு உலாவரும் ஒரு வீதியைப் போலவே எமது வாழ்க்கை எல்லாத் திசைகளிலும் ஓடுகிறது.
கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபோது
கதவு தட்டியவர்களோடும்
நம் புறக்கணிப்புகளை
மன்னித்தவர்களோடும்
நமது துரோகங்களை
அறியாததுபோல் நடித்தவர்களோடும்
தம் தசையினைத்
தின்னக் கொடுத்தவர்களோடும்
கடைசியில் வருத்தமே மிஞ்சியது
உறவுகள் நட்புகள் என்பது ஒரு நிலைத்த தேடல், உறவை நட்பை இழந்தவர்களுக்கான நினைவுகள் மிகவும் பெரியன. அந்நிமிடங்களின் கனம் மிகமிகப் பாரமானவை. ஒரு மனிதனின் மனஎழுச்சியை, செய்கையை, நடவடிக்கைகளை புரிந்துணர்வது என்பது சாத்தியமானதல்ல. சுயவிமர்சனம் என்பதும் கடைசியில் இவைகளைப் ;போலவே வலி நிறைந்ததாகிவிடுகிறது. பெரும்பாலான உறவுகள், நட்புகள் வெறும் அரசியலாகத்தான் அல்லது சுயதேவைக்கான ஒரு வடிகாலாகத்தான் பார்க்கப்படுகிறதா? அப்படிப் இருப்பதனாற்தான் உறவுகள் மிக எளிதில் இழக்கப்படுகின்றனவா என்ற கேள்விகளை இக்கவிதை எம்முன் எறிந்துவிட்டு போகிறது. ஏதோவொன்றை இழந்துவிட்டதாகவே ஒவ்வொரு நாட்களும் கடந்து போகிறது. எம் வாழ்க்கையில் சில இழப்புகள் காலங்கள் கடந்தும் ஒரு நோயைப்போல அரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இழப்பும் எம்மைச் சுற்றியுள்ள வாழ்வின் பொய்யான சமூகத்தையே பிரதிபலிக்கிறது. இழப்பையும், சுயவிமர்சனத்தோடு பார்க்கும் பார்வை எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும், அதை இத்தனை சுவாரிசயத்தோடு பேசியிருப்பதை அருமை என ஒற்றைச் சொலிற்தான் சொல்லமுடியும்.
மறதி ஒரு தூக்கமாத்திரை
அது எங்கெங்கும்
இலவசமாக வழங்கப்படுகிறது
அது நமக்கு நடந்தவை எதுவும்
நமக்கு நடந்தவை அல்ல
என்று நம்ப வைக்கிறது
துரோகத்திற்கும்
அவமானத்திற்கும்
நம்மைப் பழக்கப்படுத்துகிறது
நினைவுகள் இனி
படிக்கப்பதற்கான கதைகளே என
அது நம்பத் தொடங்குகிறது
…
பிறகு அவை
இன்னும் ஒரு முறை
எதிர்காலம் என்ற
நம்பிக்கையைத் தருகின்றன
மிக நுண்ணிய வார்த்தை நரம்புகள் அனைத்தும் கடைசிவரியை நோக்கியே செருகப்பட்டிக்கும். கவிதைகளின் கடைசி வரிகள் ஆன்மாவின் ரூபத்தைக் ஒத்திருக்கின்றன. இந்தக் கவிதையின்; வாழியலை, அந்தக் கணத்தின் ருசியை, எதிர்பார்ப்பை, தனது ஒவ்வொரு வார்த்தையிலும் ஒளித்து வைத்திருக்கிறது. ஒரு கவிதையில் இருந்து விடுபட்டு அதன் ருசியின் அமிழ்ந்து கரைந்து, அதன் ஆதங்கத்தைப் பருகிச் செரித்து அடுத்த பக்கத்திற்க்குள் நாம் செல்வதற்கான கால அவகாசத்தைத் தரும் கவிதைகள், எமது பிறப்பின் விம்பத்தைக் காட்டும் கண்ணாடியைப் போலிருக்கின்றன. எந்த ஒரு துரோகத்திற்கும், அவமானத்திற்கும் பழக்கபடுத்த எம்மைத் தயார்படுத்தும் வரிகள், சோகத்தின் நிழலை ஒரு கதையாக்கி நம்பிக்கையை வெளிச்சத்தில் வைக்கிறது.
புலம் பெயர்ந்த
என் ஈழத்து நண்பர்களை
இப்போது நான் சந்திப்பதில்லை
அவர்களது மின்னஞ்சல்களை
நான் திறப்பதில்லை
வரலாற்றில் இதற்கு முன்பும்
இது போல்தான் இருந்ததா
அழிவின் மௌனங்கள்?
..
கொலைகாரர்கள்
தன்னம்பிக்கையுடன்
இறுதி வெற்றியை நோக்கி
முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்
சாத்தான்கள்
மர்மப் புன்னகையுடன்
வேறெங்கோ பார்த்தபடி
பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்றன
வரலாற்றில்
இதற்கு முன்பும்
கொலைக்களங்களில் மனிதர்கள்
இப்படித்தான் கைவிடப்பட்டார்களா?
வரலாறு
இதற்குமுன்பும் இப்படித்தான்
ஒரு பைத்தியக்காரவிடுதியாக இருந்ததா?
எம் ஈழத்து மக்களின் துயரங்களை எந்த வார்த்தையிலும் முழுமையாகக் கொட்டிவிட முடியாது. தம் நிலத்தையும், தம் உரிமையையும், தான் சார்ந்த எதையும் இழந்தவர்களின் உயிரையிழப்புகளுக்கு காரணமானவர்கள் என்று நாம் எதிர்படையினரை குற்றஞ்சாட்டுவது, பலிகூறவது என்ற யதார்தத்தை மீறி நாமே, நமது சகோரதரர்களே நமது இழப்புகளுக்கும் காரணமாயிருந்திருக்கிறோம்; என்பதை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளவோ, இப்படியான சுயவிமர்சனங்களுக்கு இடமளிக்கவோ தயாராக இல்லை. நாம் தமிழர்கள், அவர்கள் சிங்களவர்கள், நாம் ஒடுக்கப்பட்டிருக்கினறோம், அவர்கள் எங்களை அழித்தொழிக்கிறார்கள், யுத்தசாவுகளுக்கு எதிரணியினர் மட்டுமே, காரணம் என்ற சராசரி மனித மனதின் இயலாமையையும் தாண்டி சில கசப்பான உண்மைகள் இருக்கவே செய்கின்றன.
அந்த உண்மைகள் யாருக்கும் பிடிப்பதில்லை. யாரும் அந்த அதிர்சிகளைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை. நம்பிக்கைத் துரோகங்கள் எல்லா மனிதர்களுக்கும் எல்லா இனங்களுக்கும் உண்டென்ற சுயவிமர்சனங்களுக்கும் குற்ற உணர்வுகளுக்கும் யாரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்பதே எமது அழிவின் முதல் நகர்வு. இந்தப் போக்கு பெரும்பான்மைத் தமிழர்களிடம் காணப்படுவது யதார்த்தமே, ஆனால் இப்படியான மேம்போக்கான உணர்வுகளே எழுத்தாளர்களிடமும், இலக்கியவாதிகளிடமும் காணப்படுவது வருத்தத்திற்குரியதே.
வெறும் இழப்புகளினதும் உணர்வுகளினதும் வீச்சுக்களே அனேக கவிஞர்களின் கருவாயிருக்கிறது என்பதில் ஈழத்துக் கவிஞர்களோ, தமிழகத்துக் கவிஞர்களோ விதிவிளக்கானவர்கள் இல்லை. ”வரலாற்றில் இதற்கு முன்பும் இது போல்தான் இருந்ததா அழிவின் மௌனங்கள்” என்ற மனுஷ்யபுத்திரனின் வரிகளுக்கிணங்க, மௌணங்களைக்கூட நாம் எல்லா வகையிலும் ஆராட்சிக்குள்ளாக்க வேண்டியிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதைக் குறிப்பதாகவே எண்ணத்தேன்றுகிறது.
கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின், எந்த ஒழிப்பும் இல்லை, யாரும் எளிதில் விளங்கிவிடக்கூடாது என்பது போன்ற கவித்துவம் காட்டப்படவில்லை, கவிதைமொழிக்காக அழகியற்சொற்களோ, அதற்கான தேவைகளோ இந்த கவிதைகளுக்கு தேவையில்லை என்று சொல்வதைப்போல எல்லாக் கவிதைகளும் இலகுவானதொரு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. இலக்கியவாதிகளுக்கும் கவிஞர்களுக்கும் மட்டுமாகப் படைக்கப்படாத இக்கவிதைகள். கவிதை ஆர்வமற்றவர்கள், கவிதைமொழியை புரிந்துகொள்ள சிரமம்படுபவர்களைக் கூட படிக்கத்துண்டும் ஆவலைக் கொடுக்கவல்லது. என்னை மிகவும் கவர்ந்த கவிதை வரிகளில் இன்னொன்று இப்படிச் சொல்கிறது.
சாத்தானோடு வாழ்வதற்கு
சில எளிய பயிற்சிகள்
முதலில் சாத்தானை
எதிர்த்துப் போராடுவதை நிறுத்துங்கள்
அது எண்ணற்ற சாத்தான்களையே
உற்பத்தி செய்கிறது
ஒரு சாத்தானை
நீங்கள் திருத்த முயலாதீர்கள்
அதற்கு மனிதத் தன்மையை
கற்றுக்கொடுக்க விரும்பாதீர்கள்
அதற்கு தத்துவப் பயற்சி அளிக்காதீர்கள்
அதற்கு புரட்சி செய்ய
கற்றுக் கொடுக்காதீர்கள்
பிறகு அது உங்களிடம் வரும்போது
உங்களால் அடையாளம்
கண்டுகொள்ள முடியாமல் போய்விடும்
எல்லாவற்றையும்விட
ஓரு சாத்தானோடு வாழும்போது
அதை சாத்தான் என்று அழைக்காதீர்கள்
கடவுள்
என்றே அழையுங்கள்
ஒரே வீட்டின் சாரளத்தினுடாகவும் கதவுகளுடாகவும் நாம்; சந்திக்கும் பொய்யான உலகத்தை, பொய்யான நட்புகளை, பொய்யான உறவுகளை அழகாக, அனுபவ முதிர்ச்சியோடு சொல்லியிருக்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். ஒரு குழந்தைக்கு வசீகரமானதொரு கதையைச் சொல்வது போல இன்னும் என் கபாலக்கூட்டின் ஒரு ஓரத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறது சாத்தானோடு வாழுதல் பற்றிய கவிதை.
எனது தனிப்பட்ட பிரபஞ்சவெளியில் நின்று கத்த விரும்பும் எனது குரலை இந்த வரிகளின் முலம் கேட்டு நான் திருப்தி கொண்டேன்.
அமைதியிழப்பவர்களை
இந்த இழவெல்லாம்
இன்னும் எவ்வளவு நேரத்திற்கு
என்று எரிச்சலடைபவர்களை
மந்தைகளோடு சேர மறுப்பவர்களை
இவ்வளவுக்கும் பிறகு
நீதி சாத்தியம் என்று நம்புகிறவர்களை
நீங்கள் பார்க்க விரும்பவில்லை
நீங்கள் எப்போதும்
நிலைக்கண்ணாடியில்
உங்களையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்
…
உங்கள் விதியின் புத்தகத்தில்
எழுதப்பட்ட வரிகளை
உங்கள் திட்டங்களுக்கு எதிராக
தீட்டப்பட்டிருக்கும் திட்டங்களை
உங்கள் முடிவுகளுக்கு எதிரான
முடிவுகளை
உங்கள் புத்திசாலித்தனத்தை
வெல்லப்போகும்
வாழ்வின் முட்டாள்தனத்தை
நீங்கள் பார்க்க விரும்பவில்லை
உள்ளங்கையிற் பார்க்கும் தன் முகத்தோடும், சொற்களிடையே கரைந்துபோன சில இரவுகளோடும், கனம் கொண்ட நொடிகளைக் கடந்துபோன சில அந்திகளோடும் துணையாயிருந்தது அதீதத்தின் ருசி.
காலம்காலமாகப் எமக்குப் பரிட்சயப்படாத பார்வைகளால் வேறுபட்டதாயும், சுவார்சியம்மிக்கதாயும், படைக்கப்பட்ட கவிதைகள், எமக்கு ஊட்டிவிடப்பட்ட உணர்வுகளை, அவை எத்தனை முக்கியமானவை என்று கற்பிக்கப்பட்டவைகளை, இந்த பயிற்றுவிப்புகளின் மூலம் சிறந்த நடிகர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை, உடைத்துப்போடுகிறது. “அதீதத்தின் ருசி” மனநிலத்தில் உள்ள எம் வெற்றிடங்களை நிரப்பத்தூண்டும் நடனமாகிறது.