இயக்குனரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து லட்சிய திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக தமிழக முதல்வர் ஜெயலலிதா துணிச்சலோடு குரல் கொடுத்துள்ளார். ஆனால் திமுக தலைவர் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடக்கிறது என்று கூறி சிறு சேமிப்பு துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது திமுக மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால் கருணாநிதி அவ்வாறு செய்யவில்லை.
இப்போது பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையிலும் திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டும். திட்டக்குழு ஒதுக்கீட்டிலும் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிறது. கடந்த ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புரிந்த திமுக ஆட்சிக்கு நிதி வழங்கியது. ஆனால் இப்போது வழங்கவில்லை.கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராக துணிச்சலோடு குரல் கொடுக்கிறார். மாநில நலன் பற்றி பேசுகிறார்.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக நிற்கிறது. ஆனால் திமுக தடுமாறி நிற்கிறது.
தமிழக நலன் காப்பதால் புதுக் கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தார்மீக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.