Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் மோதல்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் என நான்கு அணிகளாக இப்போதைக்கு செயல்படுகிறார்கள்.

ஆனால், இந்த அணிகளில் ஒரு அணியினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் இன்னொரு அணியினர் சசிகலா தலைமையிலும் அணி திரண்டிருக்கும் நிலையில், கடந்த 2016 – ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இருந்த சூழலை விட இப்போது மோதல் போக்கு அதிகரிக்கும் என தெரிகிறது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அப்போதைய தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து ஆட்சியை தன் பக்கம் ஈர்க்க முயன்ற சசிகலா தன்னை முதல்வராக்கும் படி ஆளுநருக்கு கடிதம் எழுதினார். இதற்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார் பன்னீர்செல்வம்.  ஆளுநர் சசிகலாவை முதல்வராக்காமல் டெல்லி  சென்று விட்டார். பின்னர் வேறு வழியில்லாமல் சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு சிறை சென்றார்.  எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு துரோக்கம் செய்து விட்டு அதிமுகவின் ஒரு பகுதியை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.அதில் பெருவாரியானவர்கள்  அவரது சொந்த சாதியைச் சேர்ந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

பின்னர் பன்னீர்செல்வத்தை பாஜக எடப்பாடி பழனிசாமியோடு இணைத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது. இந்நிலையில் சிறையில் இருந்து வந்த சசிகலா அதிமுகவுக்கு உரிமை கோரி கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இன்று பேசிய பன்னீர்செல்வம் “யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். சசிகலாவை கட்சியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை கட்சியின் உயர்மட்டக் கமிட்டி முடிவு செய்யும்” என்றார்.

பன்னீர்செல்வத்தில் இக்கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பன்னீர்செல்வத்திற்கு பதில் சொல்லும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

“சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவரகள்தான். அம்மாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களைக் களையவும், சசிகலாவுக்கு எதிராகவும் அவர் போராடினார்.பின்னர்  கட்சியின் பொதுக்குழுவில் சசிகலா நீக்கப்பட்டார்.சூரியன் வேறு திசையில் உதித்தாலும் உதிக்கும் ஆனால் ஒரு போதும் சசிகலா கட்சிக்குள் சேர்க்க முடியாது என்றார்.

ஆனால், சசிகலாவுக்கு எதிராக கலகம் செய்து வெளியில் வந்த பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி டம்மியாக்கி விட்டதால் அதிருப்தி அடைந்திருக்கும் பன்னீர்செல்வம் சசிகலாவுடன் கைகோர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலா தரப்பும் தங்களோடு வந்தால்  அதிமுக ஆட்சியமைக்கும் போது முதல்வர் பதவியை பன்னீர்செல்வத்திற்கு விட்டுத் தருவதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version