அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைவர் அத்வானி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று மாலை சென்னை வருகிறது.
நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாயந்த் பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைவர் அத்வானி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. 32 எம்.பி.க்கள் உள்ள இந்த குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அணு மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தங்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அந்த குழு இன்று மாலை சென்னை வருகிறது. அவர்கள் நாளை கல்பாக்கம் அணு மின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், எண்ணூரில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சி.பி.சி.எல்.) ஆகியவற்றுக்கு சென்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
ஆய்வின்போது அங்குள்ள அதிகாரிகளிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள். இந்த குழுவினர் தங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு வரும் 15ம் தேதி டெல்லிக்கு புறப்படுகிறார்கள். இது போன்ற ஆய்வுகள் வழக்கமாக நடப்பது தான் என்று சி.பி.சி.எல். அதிகாரிகள் தெரிவித்தனர். அத்வானி தலைமையிலான குழு வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த குழு செல்லும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணு மின்நிலையங்கள் உலகம் முழுவதும் மூடப்பட்டு வரும் நிலையில் இந்தியவில் மட்டும் கண்துடைப்பான பாதுகாப்பு ஆய்வுகள்நடைபெறுகின்றன.