Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடிப்படை ஜனநாயகத்தைக் கருவறுக்கும் பிரித்தானிய அரச சர்வாதிகாரம்

பிரித்தானிய அரசின் உள்துறைச் செயலாளர் பிரீதி பட்டேல் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிராக கொண்டுவந்த சட்டத்தின் முதலாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. முன்னை நாள் உள்துறைச் செயலாளரும் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்தவருமான தெரேசா மே இச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற விவாதத்தின் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின் முதலாவது பகுதி, அரசிற்கும் பொலீஸ் துறைக்கும் அளவுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. கடந்த காலத்தில் பெரும் அளவிலான மக்கள் திரள்கள் கலந்துகொள்ளும் போராட்டங்களிலேயே பொலிஸ் தலையீடும் உள் நுளைவும் காணப்படும். இப்போது சிறு குழுக்கள் மற்றும் தனி நபர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் கூட போலிஸ் தலையிட்டு கைது செய்யலாம் என்கிறது. இரண்டாவதாக ஒரு போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் சமூகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று போலிஸ் கருதினால் போராட்டத்தைத் தடை செய்யலாம். முன்னதாக ஒரு போராட்டம் நாளாந்த நடைமுறை வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் மட்டுமே போலிஸ் அதனைத் தடை செய்யலாம். புதிய சட்டத்தின் அடிப்படையில் ஒரு ஆர்ப்பாட்டம் அரசியல்ரீதியான கொள்கை அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் கூட அதனைத் தடை செய்வதற்கான அதிகாரம் போலிசிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவதக தடைசெய்யப்படக்கூடியது எனக் கருதப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்களை சட்டவிரோத நடவடிக்கை என்ற அடிப்படையில் போலிஸ் கைது செய்து சிறையிலடைக்கலாம். இதில் முக்கியமாக ஒரு அனுமானத்தின் அடிப்படையிலேயே ஒருவர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்படலாம்.
அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அதிக சத்தமிடப்படுவதாகப் போலிஸ் கருதினால், ஆர்ப்பாட்டங்களில் போலிஸ் இடை நிறுத்தி கைதுகளை மேற்கொள்ளலாம் என்பது நான்காவது முக்கியமான பகுதி. இந்த அடிப்படையில் அரசு தனக்கு எதிரான எந்த ஆர்பட்டத்தையும் போராட்டங்களையும் எந்த அடிப்படை ஜனநாயக முகாந்திரமும் இல்லாமல் தடை செய்யலாம்.

மேற்குறித்த அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்படும் ஒருவர் பத்து வருடங்கள் வரை கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படலாம்.
தவிர, புதிய சட்டம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்தல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், சிலைகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்றவற்றிற்கு தண்டனை வழங்குதல் தொடர்பான விதிகளையும் வரையறுக்கிறது. முன்னதாக ஒரு சிலை அல்லது நினைவுச் சின்னத்தைச் சேதப்படுத்தினால் 3 மாதச் சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் பவுண்ஸ் வரையான அபராதம் என்பது இப்போது 10 வருடச் சிறைத் தண்டனை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக் கால கறுப்பின மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் நிறவாதியான முன்னை நாள் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் எட்வார்ட் கொல்ஸ்டன் ஆகியோரின் சிலைகள் சேதப்படுத்தபட்டன. எட்வார்ட் கொல்ஸ்டன், அடிமைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்பது 18 ம் நூற்றாண்டில் கொன்சர்வேட்டீவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்படத்தக்கது.
அடிமை வியாபாரத்தில் குரூரமான வகையில் ஈடுபட்ட இவரின் சில கடந்த வருடம் ஜூன் மாதத்தில் பிரித்தானிய அரசால் மறுசீரமைக்கப்பட்டு மீள நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை பிரித்தானியாவில் அதிகரித்து வரும் நிலையில், உயர்தர போலிஸ் அதிகாரி ஒருவரால் சாரா எட்வார்ட் என்ற பெண்ணை கடத்தி, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்தமை கடந்த வாரம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை பிரித்தானியா முழுவதும் ஏற்படுத்தியிருந்தது. மத்திய லண்டன் நகரில் இரவு 9 மணியளவில் கடத்தப்பட்ட சாரா, போலிஸ் காரில் கென்ட் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொலைசெய்யப்பட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் போலிசாரால் தடை செய்யப்பட்டது. போராட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் கலந்துகொண்டனர். போராட்டத்த்தின் மீது வெறித்தனமாக தாக்குதல்களை நடத்திய போலிஸ் சிலரைக் கைதுசெய்து சிறைப்படுத்தியது.

சாராவின் கொலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை தடைசெய்யுமாறு போலிசை உள்துறை அமைச்சர் பிரிதி பட்டேல் நேரடியாகக் கேட்டுக்கொண்ட சில தினங்களின் உள்ளாகவே பாராளுமன்றத்தில் புதிய

சர்வாதிகாரச் சட்டத்தின் முதலாவது வாசிப்பு அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் மட்டுமன்றி ஜனநாயகம் செழித்தோங்குவதாக பூச்சாண்டிகாட்டும் மேற்கு நாடுகளே சாமனிய மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற பிரதேசங்களாக இன்றை ஆளும்வர்க்கம் மாற்றி வருகிறது. பிரான்சில் கடமையிலிருக்கும் போலிஸைப் படம்பிடித்தால் கிரிமினல் குற்றம் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவற்றை எல்லாம் மீறி, புலம்பெயர் வாழ் தமிழ் சமூகம் பிரித்தானிய அரசின் தலைமையில் ராஜபக்ச அரசு தண்டிக்கப்படும் என மக்களை நம்பச் சொல்கிறார்கள்.

Exit mobile version