Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடிப்படைவாதம் பற்றிய பிரச்னை : உம்பெட்டோ ஈக்கோ

பல றூற்றாண்டு காலமாக இரத்தம் சிந்தப்படுவதற்குக் காரணமாய் இருந்த மதப்போர்கள் அனைத்தும் நாங்கள் – அவர்கள்,நல்லது – கெட்டது,கறுப்பு – வெள்ளை என்கின்ற மாதிரியான அழுத்தமான உணர்வுகளினாலும் அர்த்தமற்ற எதிர்நிலைகளாலுமே ஏற்பட்டன. மேற்கத்திய கலாச்சாரமானது வளமானது எனக் காட்டப்படுகிறதென்றும் அதற்குக் காரணம், அது அறிவொளிக்காலத்துக்கும் முன்னரே தீமைதரத்தக்க எளிமைப்படுத்தல்களையெல்லாம் விசாரணை மூலமாகவும் விமர்சன மனப்பாங்காலும் கரைந்துவிட முயன்றமையாகும். நிச்சயமாக எல்லாக் காலத்திலும் அது இவ்வாறு செய்ததில்லை.புத்தகங்களை எல்லாம் எரித்த ஹிட்லர்’சீரழிந்த கலையைக்’ கண்டித்ததோடு கீழான இனத்தவர்களையும் கொன்றொழித்தார். நான் பாடசாலையில் படித்த காலங்களில் ‘ஆங்கிலேயர்களைக் கடவுள் சபி;ப்பாராக, ஏனெனில் அவர்கள் ஒரு நாளைக்கு ஐந்துவேளை சாப்பிடுகிறார்கள். பேராசை பிடித்தவர்கள், சிக்கனமான இத்தாலியர்களை விடத் தாழ்ந்தவர்கள்’ என ஒப்பிக்கும்படி பாஸிசம் எனக்குக் கற்பித்தது. இவையெல்லாம் மேற்கத்திய பண்பாட்டு வரலாற்றின் பகுதியாகும்.
சில வேளைகளில் நமது சொந்த வேர்களுடன் நம்மை அடையாளம் காண்பதற்கும் வேறு வேர்களையுடைய மக்களைப் புரிந்து கொள்வதற்கும் நல்லது கெட்டது எது என்று தீர்மானிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கிரகிப்பது சிரமமாக இருக்கின்றது. மொஸ்கோவில் வாழ்வதை விட லிமோகெஸில் வாழ்வதற்கு நான் முன்னுரிமை கொடுக்கவேண்டுமா, மொஸ்கோ நிச்சயமாக ஒரு அழகிய நகரம்.ஆனால் லிமோகெஸில் வழங்கும் மொழியைத் தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியும். தாம் வளர்ந்த கலாச்சாரத்தோடு தான் ஒவ்வொருவரும் தம்மை இனங்காண்கின்றனர். வேர் இடமாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவை சிறுபான்மையாகவே திகழ்கின்றன. அராபிய லோறன்ஸ் ஓர் அராபியன் போல் உடை உடுத்திக் கொண்ட போதிலும் தனது இறுதிக் காலத்தை தன் சொந்த நாடான இங்கிலாந்திலேயே கழித்தார்.

மேற்குலகு பெரிதும் தனது பொருளாதார வியாப்தியின் காரணமாகப் பிற நாகரீகங்கள் பற்றிய அக்கறை உடையதாயிருந்து வந்திருக்கின்றது. தமது மொழியைப் பேசாதவர்களைக் காட்டுமிராண்டிகள், கதைக்கவேமுடியாத திக்குவாயர்கள் என்றே கிரேக்கர்கள் கருதினர். ஆனால் காட்டுமிராண்டிகள் வேறு சொற்களைப் பயன்படுத்தினாலும் அதன் மூலம் அவர்கள் ஒரே சிந்தனையையே குறித்தனர் என ஸ்ரொயிக்ஸ் போன்ற சில முதிர்ந்த சிந்தனையாளர்கள் கருதினர்.
19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியிலிருந்து ஏற்பட்ட பண்பாட்டு மானிடவியலின் வளர்ச்சியானது மேற்குலகுமற்ற இனங்களுக்கு இழைத்த குற்றத்தை குறிப்பாக காட்டுமிராண்டிகள், வரலாறு எதுவுமற்ற சமூகங்கள், ஆதிவாசிகள் என்றெல்லாம் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவர்களுக்கு இழைத்த குற்றத்தைத் தணிப்பதற்கு எடுத்த முயற்சியாகவே அமைந்தது. மேற்கின் நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசப்பட்டவற்றை எடுத்துக் காட்டுவதே பண்பாட்டு மானிடவியலாளர்களின் பணியாக இருந்தது. இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி சர்ச்சைக்குரிய விதத்தில் கூறியது போல ஒரு கலாச்சாரம் இன்னொரு கலாச்சாரத்தை விட மேன்மையானதா என்பதை அறிய இதற்கென அளவுகோல்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இந்த மக்கள் இம்மாதிரித்தான் நடந்து கொள்கின்றார்கள் என்ற வகையில் ஒரு கலாச்சாரத்தை புறநிலையாக விபரிக்க முடியும். உதாரணமாக இவர்கள் ஆவிகளை நம்புகின்றார்கள் அல்லது இயற்கை அனைத்திற்கும் ஒரே தெய்வம் உள்ளோடி இருப்பதாக இவர்கள் நம்புகின்றார்கள். இந்த விதிகளுக்கேற்பவே இவர்கள் குடும்ப இனக்குழுமங்களைச் சந்திக்கின்றார்கள். தங்களுடைய மூக்குகளைத் துளைத்து வளையிடுதல் அழகாய் இருப்பதாய் இவர்கள் நினைக்கின்றார்கள். (இது மேற்கத்திய இளைஞர் கலாச்சாரம் பற்றிய விபரணமாக இருக்கலாம்): பன்றி இறைச்சியை இவர்கள் அசுத்தமாக நினைக்கின்றார்கள். தங்களது பால் உறுப்புக்களை இவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்கின்றார்கள். அல்லது பிரெஞ்சுக்காரர் தவளை சாப்பிடுவதாக அமெரிக்கரும் ஆங்கிலேயரும் இன்னும் சொல்வது போன்றவை.

பல காரணிகளால் புறநிலைத் தன்மை வரையறைக்குட்படுகின்றது என்பதை மானிடவியலாளர் நன்கறிவர். தீர்வின் பிரமாணங்கள் எமது சொந்தவேர்கள், விருப்புக்கள், பழக்கவழக்கங்கள், உணர்வு நிலைகள், எமது விழுமிய முறைமை (System of value) ஆகியவற்றில் தங்கிருக்கின்றன. உதாரணமாக நாம் நமது சராசரி ஆயுளை 40 வயதிலிருந்து 80 வயதுக்கு நீடிப்பது பிரயோசனமானது எனக் கருதுகின்றோமா? நான் தனிப்பட்ட முறையில் அப்படித் தான் நம்புகின்றேன். ஆனால் 80 வயது வரை வாழும் ஒரு சாப்பாட்டு ராமனை விட 23 வயதுவரை வாழ்ந்த ஞானி லுய்ஜி கொன்சகா (Saint Luigi Gonzaga) பூரண வாழ்வு வாழ்ந்தார் என ஒருமறை ஞானி சொல்லலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சி, வியாபார விஸ்தரிப்பு, அதிவிரைவான போக்குவரத்து என்பன பெறுமதி வாய்ந்தவை என நாம் நம்புகின்றோமா, பலர் அவ்வாறே நம்புகின்றனர். நமது தொழிநுட்ப நாகரீகத்தை மேலானதாகக் கருதுகின்றனர். ஆனால் அதேநேரத்தில் மேற்குலகுக்குள்ளேயே சீரழிவுக்குள்ளாகாத இயற்கைச் சூழலில் இணைந்து வாழ்வதையே பிரதானமாகக் கருதுவோர் உள்ளனர். அவர்கள் விமானப் பயணம் , கார்,குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றைக் கைவிட்டு ஓசோன் வெளியில் துவாரம் ஏற்படாதவரை கூடைகளை இழைத்து ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு நடந்து போவது விரும்பற்பாலது என்றும் கருதுகி;ன்றனர்.
ஆகவே ஒரு கலாச்சாரம் பிறிதொரு கலாச்சாரத்தை விட மேலானதா எனத் தீர்மானிக்க மானிடவியலாளர் கூறுவது போல் விபரிப்பது மட்டும் போதுமானதல்ல. ஆனால், எம்மால் கைவிடமுடியும் என்று உணரமுடியாத விழுமிய முறையைப் பேணுவதற்கான நியாயப்பாட்டைத் தேடிக்கொள்வதே புத்திசாலித்தனமானது. இந்தக் கட்டத்தில் நாம் நமது கலாச்சாரம் நமக்குச் சிறந்தது என்று மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

எந்த அளவுக்கு தொழிநுட்ப அபிவிருத்தி அளவுகோல் இறுதியானது? நாங்கள் இஸ்லாமிய உலகுக்கு மதிப்பளிக்கின்றோம். காரணம் அவிசென்னா (இவர் ஆப்கானிஸ்தானுக்கு அண்மையிலுள்ள புக்காராவிலேயே பிறந்தார்) அவெறோஸ், அல்கிந்தி, அவென்பேஸ், அவிஸ்புரன், இப்னுதுபைல், சமூகவிஞ்ஞானங்களின் தந்தையாக மேற்குலகு கருதும் 14 ஆம் நூற்றாண்டின் மாபெரும் வரலாற்றாசிரியரான இப்னு சுல்தூன் ஆகியவர்களை இஸ்லாமிய உலகே நமக்குத் தந்தது. கிறிஸ்தவ உலகம் புவியியல், வானியல், கணிதம்,மருத்துவம் ஆகியவற்றில் பின் தங்கிக்கிடந்த காலத்தில் ஸ்பெயினில் இருந்த அராபியரே இவற்றை வளர்த்து வளப்படுத்தினர். நாம் சேரிகள் பெருக வழிவகுத்த அதேவேளை ஸ்பானிய அராபியர் கிறீஸ்தவர்களையும் யூதர்களையும் அதிக சகிப்புத்தன்மையோடு நடத்தினர் என்பதை நாம் நினைவு கூரலாம். மேலும் கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்தை மீளக் கைப்பற்றிய போது அங்கு வாழ்ந்து கிறிஸ்தவர்களுக்கு அதிக கருணை காட்டவே செய்தான். இவையெல்லாம் உண்மையே. ஆயினும் இன்று இஸ்லாமிய உலகில் உள்ள அடிப்படை வாதத்தையும் மத ஆட்சியாளர்களையும் கிறிஸ்தவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பின் லேடனும் நியூயோர்க் நகருக்குக் கருணை காட்டவில்லை. தலிபான்கள் பெரும் புத்தர் சிலைகளைப் பீரங்கிகளால் அழித்தனர். அவ்வாறே புனித பாத்தலோமா தினப்படுகொலைகளைப் பிரெஞ்சுக்காரர் செய்தனர். ஆனால் இன்று அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லும் உரிமையை இது யாருக்கும் வழங்காது.
வரலாறு என்பது இரண்டு பக்கமும் கூருடைய வாள் போன்றது. துருக்கியர் எதிரிகளைக் கழுவிலேற்றிக் கொன்றனர். (இது கெட்ட செயலே).ஆனால் பழமைவாதிகளான பைசாந்தியர் தமக்கு ஆபத்தான உறவினர்களின் கண்களைத் தோண்டி எடு;த்தனர். கத்தோலிக்கர்கள் ஜியார்டானோ புறுனோவை(புழைசனயழெ டீசரழெ)எரித்தனர்.சரசானிய கடற்கொள்ளைக்காரர் பல தீய வேலைகளைச் செய்தனர். ஆனால் பிரித்தானிய மன்னரின் கடற்கொள்ளைக்காரர் கரிபியன் தீவுகளிலிருந்து ஸ்பானிய காலனிகளுக்குத் தீ வைத்தனர். பின் லேடனும் சதாம் உசேனும் மேற்கத்திய நாகரீகத்தின் பரம எதிரிகள். ஆனால் அதே நாகரீகத்துக்குள் தான் ஹிட்லரும் ஸ்டாலினும் இருந்தனர்.
இல்லை: அளவுகோல் பற்றிய பிரச்னை வரலாற்றுக்குள் இருந்து எழுவதல்ல. அது எங்கள் காலத்துக்குரியது. மேற்கத்திய கலாச்சாரத்தின் பாராட்டுக்குரிய அம்சங்களி;ல் ஒன்று. (சுதந்திரம், பன்மைத்துவம் இத்தகைய விழுமியங்களே எம்மால் அடிப்படையானவையாகவும் அவசியமானவையாகவும் கொள்ளப்படுகின்றன) என்னவெனில் ஒரே நபர வௌ;வேறு விஷயங்களில் ஒன்றோடொன்று முரண்படும் வௌ;வேறு அளவுகோல்களைப் பயன்படுத்தலாம் என்னும் கருத்து நீண்டகாலமாக நிலவி வருவதாகும். உதாரணமாக ஆயுளை நீடிப்பது நல்லதாகவும் சூழலை மாசுபடுத்துவது தீயதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் ஆயுளை நீடிப்பதற்கான ஆய்வுகள் பெரிய ஆய்வு கூடங்களில் நடைபெற அங்கே பாவிக்கப்படும் மின்சக்தி இயக்கமுறைகள் சூழலை மாசுபடுத்துவனவாக இருக்கலாம்.

மேற்கத்திய கலாச்சாரம் தன் சொந்த முரண்பாடுகளையே சுதந்திரமாக அம்பலப்படுத்துவதற்குரிய திறனை வளர்த்திருக்கின்றது. இம்முரண்பாடுகள் தீர்க்கப்படாதவையாக இருக்கலாம்.எனினும் இவற்றை எல்லாம் அறிந்திருக்கின்றார்கள். ஒப்புக்கொள்கிறார்கள். சாதகமான பூகோளமயமாக்கலை மேற்கொள்ளும் அதேவேளை எவ்வாறு அதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களையும் அநியாயங்களையும் நாம் தவிர்க்கலாம்? எயிட்ஸ் நோயினாலும் பசியினாலும் மக்கள் சாகவும் மாசடைந்த உணவை நாம் சாப்பிடவும் காரணமாயுள்ள பூகோளமயப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்ளாமலே (எங்களுடைய வாழ்நாளை நீடித்துக் கொண்டே) எவ்வாறு எயிட்ஸினால் செத்துக் கொண்டிருக்கும் லட்சோபலட்சம் ஆபிரிக்கர்களின் வாழ்நாளை நீடிக்கலாம்?

ஆனால் மேற்குலகு ஊக்கப்படுத்துகின்ற பின்பற்றுகின்ற அளவுகோல் பற்றிய இந்த விமர்சனப் பார்வை தான் நாம் மேற்கொள்ளும் விஷயம் எவ்வளவு சிக்கல்தன்மை உடையது என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றது. வங்கியின் இரகசியங்கபை; பாதுகாப்பதென்பது நியாயமானதும் சரியானதுமா? அப்படித் தான் பலர் நினைக்கின்றார்கள். ஆனால் இந்த இரகசியம் போலவே லண்டன் நகரில் பயங்கரவாதிகளுக்கும் தம் பெயரில் வங்கிக்கணக்குகளைத் திறக்க வழி வகுக்கின்றது. அப்படியென்றால் இந்த இரகசியம் பேணலைப் பாதுகாப்பதென்பது சாதகமான ஒரு விழுமியமா? அல்லது ஐயத்துக்குரியதா? நாம் எப்போதும் நமது அளவுகோல்களைக் கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம். இன்றைய மேற்குலகு இதனைச் செய்கின்ற அளவில் தனது சொந்தப் பிரஜைகள் தொழிநுட்ப வளர்ச்சி அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பௌத்தர்களாக மாற அல்லது டயர் பயன்பாட்டில் இல்லாத அல்லது குதிரை வண்டிகள் கூட இல்லாத தேசத்தில் போய் வாழ அனுமதிக்கின்றது.மேற்குலகு மற்றைய சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் பற்றிக் கற்பதற்குப் பணத்தையும் உழைப்பையும் செலவிடத் தீர்மானித்திருக்கின்றது. ஆனால் எவருமே மற்றைய மக்கள் மேற்கின் சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் கற்பதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதில்லை. தம்முடைய நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்த வெள்ளையர்களால் நடத்தப்படும் பாடசாலைகளில் அல்லது ஒக்ஸ்போர்ட் அல்லது பாரிஸ் முதலிய இடங்களில் வேறு கலாச்சாரத்தைச் சேர்;ந்த வசதி படைத்தவர்கள் படிப்பது ஒரு புறநடையாகும். இந்த நிலையில் இவ்வாறு கல்வி கற்றவர்கள் தம் நாடு திரும்பியதும் அங்கே அடிப்படைவாத இயக்கங்களை அமைக்க முற்படுகின்றனர். தாம் பெற்ற கல்வியைப் பெற வாய்ப்பற்ற தம் சக நாட்டவர்கள் மீது அவர்கள் ஒரு பற்றை உணர்வதே இதற்குக் காரணமாகும்.

‘நாடு கடந்த பண்பாடு’ (வுசயளெஉரடவரசய) என்னும் ஒரு சர்வதே அமைப்பு சில ஆண்டுகள் ‘மாற்று மானிடவியல்’ ஒன்றின் தேவைக்காகப் பிரசாரம் செய்து வந்தது. மேற்குலகுக்கு ஒருபோதும் போயிராத ஆபிரிக்க ஆய்வாளர்களை அழைத்து வந்து பிரான்சின் மாகாணப் பகுதியையும் பொலங்காவில் (டீழடழபெய) இருக்கும் சமூகத்தையும் விபரிக்குமாறு கேட்டது. இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்க்கத் தொடங்கினர். அத்துடன் சுவாரஸ்யமான கலந்துரையாடலும் இடம்பெற்றது.தற்போது மூன்று சீனர்கள்- ஒரு மெய்யியலாளர், ஒரு மானிடவியலாளர், ஒரு கலைஞர்- மார்க்கோபோலோவின் பயணத்தைப் பின்னிருந்து முடிக்கவுள்ளனர். இது நவம்பரில் பிரசல்ஸில்(டீசரளளநடள )நடைபெறும் மாநாட்டில் முடிவடையும். முஸ்லிம் அடிப்படைவாதிகள் கிறிஸ்தவ அடிப்படைவாதம் பற்றி ஆய்வு செய்ய அழைக்கப்படுவதாகக் கற்பனை செய்து பாருங்கள். (இம்முறை கத்தோலிக்கர் அல்ல: அமெரிக்கப் புரட்டஸ்தாந்து பிரிவினரே சேர்க்கப்பட வேண்டும்.. இவர்கள் அயாத்துல்லாக்களை விட மதப்பித்தர்கள். டார்வினைப் பற்றிய எல்லாக் குறிப்புக்களையும் பாடசாலைப் புத்தகங்களிலிருந்து அகற்றவேண்டும் என்று முயற்சிப்பவர்கள்) எனது அபிப்பிராயத்தில் மற்றவர்களின் அடிப்படைவாதம் பற்றிய மானிடவியல் ரீதியான ஆய்வு நமது சொந்த அடிப்படைவாதத்தை விளங்கிக் கொள்ள நன்கு உதவும். புனிதப்போர் பற்றிய நமது எண்ணக் கருவை அவர்கள் வந்து படிக்கட்டும். மிக அண்மைக்காலத்தவை உட்பட நான் அவர்களுக்கு மிக சுவாரஸ்யமான பிரதிகள் பற்றிக் கூறுவேன். அவர்கள் புனிதப்போர் பற்றிய கடுமையான விமர்சனப் பார்வையுடன் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடும்.
நாம் பன்மைத்துவ நாகரீகம் உடையவர்கள். அதனாலேயே நமது நாட்டில் பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கு அனுமதித்திருக்கின்றோம். கிறிஸ்தவ பாதிரியார் காபூலில் சிறைகளில் தள்ளப்பட்டதற்காக நாம் இதை நிறுத்தப்போவதில்லை. அப்படி நாங்கள் செய்தால் நாங்களும் தலிபான்களாகவே மாறுவோம். வேறுபாட்டைச் சகித்துக் கொள்ளும் அளவுகோலே மிகவும் வலிமையானது. மிகக் குறைவாக விவாதிக்கப்பட்டதும் அது தான். நாம் நமது கலாச்சாரத்தை முதிர்ச்சியுடையதாகக் கருதுகி;ன்றோம். ஏனெனில் அது வேறுபாட்டைச் சகித்துக் கொள்ளத்தக்கது. நமது பண்பாட்டுக்குள் இருந்து கொண்டே அதேவேளை வேறுபாட்டை நிராகரிப்பவர்கள் நாகரீகமற்றவர்களாகவே இருக்க வேண்டும். நாங்கள் நமது நாட்டின் பள்ளிவாசல்களை அனுமதித்தால் ஒரு நாள் கிறிஸ்தவ கோவில்கள் அவர்களுடைய நாட்டில் தோன்றலாம். அல்லது குறைந்தபட்சம் புத்தர் சிலைகளாவது அங்கு சிதறடிக்கப்படாமல் இருக்கும் என்று நாம் நம்புவோம். எமது அளவுகோல்கள் சரியாக இருக்கவேண்டும் என்று நாம் நம்பினால் சரி.
ஆனால் இங்கே பெரிய அளவிலான குழப்பம் இருக்கின்றது. வேடிக்கையான விடயங்கள் இக்காலத்தில் நடைபெறுகின்றன. மேற்கத்திய விழுமியங்களுக்கு ஆதரவளிப்பது வலதுசாரிகளின் சிறப்புரிமையாகவும் இடதுசாரிகள் இஸ்லாத்தின் ஆதரவாளர்களாகவும் கருதப்படுவதாகத் தோன்றுகின்றது. இப்போது மூன்றாம் உலக ஆதரவு சக்திகளுக்குப் புறம்பாக சில வலதுசாரி மற்றும் கத்தோலிக்க செயற்பட்டாளர்கள் வட்டத்தின் அராபிய ஆதரவு நிலைப்பாடும் காணப்படுகின்றது. நாம் எல்லாரும் பார்க்கக்கூடியதாக உள்ள ஒரு வரலாற்று நிலைமையை இது புறக்கணிக்கின்றது.
விஞ்ஞான விழுமியங்கள், தொழிநுட்ப அபிவிருத்தி, பொதுவாக நவீன மேற்குலக கலாச்சாரம் என்பவற்றுக்கு ஆதரவு வழங்குதல் எப்போதும் மதச்சார்பற்ற முற்போக்கு வட்டாரங்களின் பண்பாக இருந்து வந்திருக்கின்றது. பொதுவுடமை ஆட்சியாளர்கள் ஒரு தொழிநுட்ப விஞ்ஞான முன்னேற்றக் கருத்து நிலையிலேயே நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். பூர்ஷ்வாக்களின் வியாபகம் பற்றிய பக்கச்சார்பற்ற பாராட்டுதலோடயே 1848 ஆம் ஆண்டின் கம்யூனிஸ்ட் அறிக்கை ஆரம்பிக்கின்றது. திசையை மாற்றி ஆசிய உற்பத்திமுறைக்குப் போவது அவசியம் என்று மார்க்ஸ் கூறவில்லை. தொழிலாளர்கள் இந்த விழுமியங்களையும் சாதனைகளையும் கற்றுத் தேறவேண்டும் என்றே அவர் சொல்கிறார்.

இதற்கு மறுதலையில் முன்னேற்றம் பற்றிய மதச்சார்பற்ற கருத்து நிலைக்கு எதிரானதும் மரபு ரீதியான விழுமியங்களுக்கு திரும்பிச் செல்வதை முன் வைத்த பிரஞ்சுப் புரட்சியை நிராகரித்ததில் இருந்து தொடங்குவது எப்போதும் (அதன் உண்மையான அர்த்தத்தில்) பிற்போக்குச் சிந்தனையாகவே இருந்து வந்திருக்கின்றது. ஒரு சில நவநாசிக் குழுவினரே மேற்கைப் பற்றிய ஐதீக எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரோன்ஹெஞ்சில் (ளுவழநொநபெந) உள்ள முஸ்லிம்களின் குரல்வளையை வெட்டுவதற்கும் தயாராய் உள்ளனர். மிகக் கூர்மையான மரபுவழிச் சிந்தனையாளர்கள் ஆதிவாசிகளின் சடங்குகள்,ஐதீகங்கள், பௌத்த போதனைகள் என்பவற்றுடன் இஸ்லாத்தை எப்போதும் ஒரு மாற்று ஆத்மீக நெறியின் ஊற்றுமூலமாகவே பார்த்து வந்திருக்கின்றனர். நாங்கள் மேலானவர்கள் அல்ல என்றும் முன்னேற்றம் பற்றிய எமது கருத்து நிலையால் வறுமைப்பட்டவர்கள் என்றும் உண்மையை நாங்கள் முஸ்லிம் சூபி ஞானிகளிடம் இருந்தோ, அல்லது இஸ்லாமியத் துறவிகளிடமிருந்தோ தேடவேண்டும் என்றும் எமக்கு நினைவூட்டுவதை அவர்கள் எப்போதும் கருத்திற் கொண்டிருந்திருக்கின்றனர். புதுமையான இரட்டைத்தன்மை இப்போது இல்லாது வலது பக்கம் திறக்கின்றது. ஆனால் இது இப்போது உள்ளது போன்ற பெருந்தடு மாற்றத்தின் போது ஏற்படும் ஒரு அடையாளம் மட்டுமாக இருக்கலாம். தாங்கள் எங்கு நிற்கிறோம் என்பது யாருக்குமே தெரியவில்லை.
ஆனால் இத்தகைய தடுமாற்ற காலங்களில் தான் நம்முடையதும் பிறரதும் மூட நம்பிக்கைகளின் மீது பிரயோகிப்பதற்குரிய ஆயுதமாக பகுப்பாய்வும் விமர்சனமும் தாமாகவே வந்து நமக்கு கைகொடுக்கின்றன.

உம்பெட்டோ ஈக்கோ இத்தாலி நாட்டைச் சேர்ந்த மெய்யியலாளர், நாவலாசிரியர்.

மொழிபெயர்ப்பு : மு.பொன்னம்பலம்

Exit mobile version