Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அக்டோபர் புரட்சியின் பதினொன்றாம் நாள்- பாராளுமன்ற ஜனநாயகத்தில் இந்திய இடதுசாரிகள்- கேரளாவை முன்வைத்து:எச்.பீர்முஹம்மது

உலகம் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தை தேடிய இருபதாம் நூற்றாண்டில் ஏறத்தாழ முப்பத்தாறு புரட்சிகள் நடந்தேறியிருக்கின்றன. மகத்தான அக்டோபர் புரட்சி ஜெர்மன் விவசாய புரட்சி பிரஞ்சு மாணவர் புரட்சி, மற்றும் சீன புரட்சி முதலான எதிர் நடவடிக்கைகளாக இருபதாம் நூற்றாண்டு கடந்தேறியிருக்கிறது.புரட்சியின் அகோன்னத வடிவத்தில் 19 ம் நூற்றாண்டின் 1792 க்கும் 1871 க்குமான காலகட்ட ம் வரலாற்றில் மிக முக்கிய கவனத்தை அளிக்கிறது. 1792 ல் பிரான்சில் நடந்த புரட்சி உலக வரலாற்றில் அதிகார ஒடுக்குமுறை சமூகங்களுக்கு ஒரு மாற்று செயல் திட்டமாக அமைந்தது. அதன் பிறகான 1871 ன் பிரான்சு கம்யூன் சோசலிச சமூக வடிவத்திற்கு தொடக்கமிட்டது.

மார்சிக்ன் சிந்தனை செயல் வடிவம் இதனின் தொடர்ச்சியே. அதற்கான தத்துவ தொடக்கத்தை, தரிசனத்தை அவர் ஹெகலிடம் இருந்துபெற்றார். ஹெகலின் தத்துவத்தின் வரலாறு பற்றிய உரைகள் (Lectures on history of philosophy) என்ற நூல் வரலாறு மனித இயல்பை எவ்வாறு நெறிப்படுத்துகிறது என்பதைப் பற்றி குறிப்பிட்டது.

 வரலாறு ஓர் அறிவுபூர்வமான போக்கை கொண்டிருக்கிறது என்றும், அதை ஆராய்வதன் மூலம் நம்மையும் நம்மை சுற்றி இருக்கும் இன்றைய உலகையும் புரிந்து கொள்ள முடியும் என்பதாக இருந்தது ஹெகலின் நிலைபாடு.இதன் மூலம் வரலாற்றின் போக்கு பற்றிய கருத்துக்கு மார்க்ஸ் வந்தார். ஹெகலின் வரலாற்றின் தத்துவம் என்ற நூலின் புகழ்பெற்றவாக்கியமான ‘உலக வரலாறு என்பது சுதந்திரம் பற்றிய பிரக்ஞையின் வரலாறு என்பதை தவிர வேறில்லை.

(The history of world is none other than the progress of the consciousness of freedom). ). என்பது வரலாறு பற்றிய ஹெகலின் திசைவழியாகும்.இந்த நூலில் ஹெகல் இந்தியாஇ சீனாஇ ஈரான் போன்ற கீழை நாடுகளை உதாரணமாக காட்டுகிறார். இங்கெல்லாம் ஓர் அரசன் மற்றும் குடிமகன் என்ற அமைப்பு காணப்பட்டது. இதில் அரசன் மட்டுமே சுதந்திரமானவன்.அவனின் கீழிருந்தவர்கள் சுதந்திரமற்றவர்கள்இ எது சரிஇ எது தவறு என்பதை கூட ஆராய இயலாதநிலையில் இருந்தார்கள்.

இதில் சுதந்திரம் என்பது குடிமகனின் பிரக்ஞைக்கு வெளியில் இருந்தது. சுதந்திரம் பற்றிய இந்த பார்வையில் ஹெகல் தாராளவாத சிந்தனையாளரான ஜான் ஸ்டூவர்ட் மில்லின் கருத்தோடு வேறுபடுகிறார்.ஸ்டூவர்ட் மில் சுதந்திரம் என்பதை தனி மனிதனின் தேர்வு என்றார். நான் தனித்து விடப்பட வேண்டும் என்னை யாரும் தொந்தரவு செய்ய கூடாது. இன்னொரு வகையில் பொருளாதார நிபுணர்கள் சுதந்திரம் என்ற சொல்லை நுகர்வோர் மீதான பொருளின் தேர்வாக மாற்றினார்கள். இந்த பொருளை தேர்வு செய்ய எனக்கு தடையேதுமில்லை. நான் இதை வாங்கி கொள்வேன். ஹெகல் இதை மிகவும் மேம்போக்கான

பார்வையாக கருதினார். பொருளாதார நிபுணர்கள் இதற்கு கீழே சென்று நுகர்வோர் ஏன் இத்தகைய தேர்வை மேற்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பதில்லை. மாறாக நுகர்வோரின் இத்தகைய தேவையானது அவர்களை கட்டுப்படுத்தும் புற சக்திகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்றார். மேலும் சொகுசுகளின் தேவைகள் நமக்குள் எழாமல் எப்படி அந்த தேவைகளை உருவாக்கி லாபம் ஈட்டுவோரால் பரப்பப்படுகிறது என்பதை ஹெகல் கண்டறிந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஹெகல் வரலாற்றை நம்விருப்பங்களையும் இயற்கை சூழலையும் வடிவமைக்கும் இயங்கு முறையாக கண்டார்.

இதற்கான தேடலுக்கு நம்மை கட்டுப்படுத்தும் வரலாற்று ரீதியான சக்திகளை அனுமதியாமல் அவைகளை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை குறித்து ஆராய வேண்டும் என்றார். ஹெகலின் இந்த கருதுகோள்கள் இளமைக்கால மார்க்ஸ் மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. ஹெகலில் வரலாற்று ரீதியான சக்திகள் என்பதிலிருந்து தான் மார்க்ஸ் தன் வரலாற்று பார்வையைதொடங்கினார்.

அவர் ஹெகலின் வரலாற்றின் தத்துவம்இ தத்துவத்தின் வரலாறுஇ சரியான வழியின் தத்துவம் போன்ற நூல்களால் அதிகம் தாக்கமுற்றார். மார்க்…¢ன் பொருளாதார தத்துவ கையேடுஇ ஜெர்மானிய கருத்தியல் போன்ற நூல்கள் இதனின் பாதிப்பினால் எழுந்தவையே.

இன்னொரு வகையில் ஜெர்மனியில் அன்று நடந்த விவசாய போராட்டங்கள் மார்க்சின் சிந்தனை வடிவமைப்பிற்கு தூண்டு கோலாக அமைந்தது. அதன் விளைவாக தான் அவரின் பொருளாதார பார்வை முழு வடிவத்தை அடைந்தது. சமூத்தின் அலகுகளாக அவர் உற்பத்தி சக்திகள்இ உற்பத்தி சாதனங்கள் மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை கண்டார்.

 

உழைப்பு என்ற நடவடிக்கையிலிருந்து தொடங்கும் இவை மீண்டும் அதே நிலைக்கு வந்தடைகின்றன.

சமூகத்தின் இந்த இயக்கவியலை ஹெகல் தலைகீழாக பார்த்தார். நான் அதை நேராக்கினேன் என்றார். தேவைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்ற ஹெகலில் பார்வை தான் மார்க்சுக்கு சுரண்டல் பற்றிய கருத்துருவத்திற்கு வழிவகுத்தது. ஹெகலின் சுதந்திரம் பற்றிய பார்வையில் மன்னர்-குடிமகன் என்ற ஒப்பீடு மார்க்ஸ்  மிகவும் கவர்ந்தது. சுதந்திரத்தை உற்பத்தி சக்திகளே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் அதை கட்டுப்படுத்தும் சக்திகள் அல்ல என்பதாக அவரின் கருதுகோள்தொடக்கம் பெற்றது. ஹெகலின் இத்தகைய நூல்களை மார்க்ஸ் பல முறை படித்திருக்கிறார்

. வெறும் கோட்பாட்டு வடிவமாக நாம் கையாளும் இவற்றை ஏன் நடைமுறை செயல்பாடாக மாற்றக் கூடாது? மார்க்சின் இந்த சிந்தனை தான் அவரின் புகழ்பெற்ற வாக்கியமாக உருவம் பெற்றது. தத்துவவாதிகள் உலகை விளக்கி விட்டு சென்று விடுகிறார்கள். இங்கு பிரச்சினையே உலகை எவ்வாறு மாற்றுவது என்பது தான்(All philosophers are interpreting the world, however the question is how to change the world ). இதை அடைவதற்கே அவர் தொழிலாளர்கள் கழகம் மற்றும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகியவற்றை உருவாக்கினார். உலகின் பெருமதங்கள் தவிர எந்த லெளகீக தத்துவங்களுமே இதுவரையிலும் உலகை விளக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கின்றன. மார்க்சியம் மட்டுமே உலகின் மாற்று செயல் திட்டத்திற்கு வழிவகுத்தது.

மார்சிக்ன் மேற்கண்ட செயல்பாட்டின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1917 ல் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான போல்ஸ்விக்குகளின் புரட்சி முதன் முதலாக உலகிற்கு ஒடுக்கு முறை சமூகத்திற்கு மாற்றான செயல்திட்டத்திற்கு தொடக்கம் குறித்தது. ரஷ்ய புரட்சியை பொறுத்தவரை மாற்று செயல் வடிவமான சோசலிச கருதுகோள்கள் பற்றிய கனவுகளோடு மட்டுமே ஆளுகைக்கு வந்தது. அது முதல் உலகப்போர் முடிந்த காலகட்டம். உலகம் ஏகாதிபத்தியங்களால் காலனிய வகைக்கு உட்பட்டிருந்தது. சாரியத்தின்கொடுங்கோன்மையால் அழிவின் விளிம்பு பகுதியை தொட்டிருந்த ரஷ்யாவை சீரமைப்பதற்கான அவசியம் அன்று போல்ஸ்விக்குகளின் முன் நிர்பந்தமாக நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவை பின் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் புரட்சி ஏற்பட்டு அதிகார மாற்றம் நடைபெற்றது. லெனின் ஒரு தேர்ந்த சிந்தனையாளராக நின்று கொண்டு மார்க்சின் சிந்தனையை வளர்த்தெடுத்தார். அன்றைய காலகட்டங்களில் காலனிய நாடுகள் பலவற்றில் விடுதலை போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தன. ரஷ்ய புரட்சியை பற்றி குறிப்பிடும் பின் மார்க்சியரான எர்னஸ்ட் மண்டேல் அதைஏகாதிபத்தியத்திற்கு எதிரான மாற்று நடவடிக்கை என்றார்.

ரஷ்ய புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதிலுமான தத்துவ வாதிகள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. நம்மை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு இருக்கிறது. நம்மின் இருப்பை எது தீர்மானிக்கிறது போன்ற கேள்விகள் இவர்களிடத்தில் எழ தொடங்கின. இந்திய துணைக்கண்டமானது அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்தது. அப்போது இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அன்று காங்கிரஸ் சுதந்திரத்தை அடைவதற்கு தான் மட்டுமே அதிகார பூர்வ நபர் என்ற சிந்தனையோடு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்திய விடுதலை போராட்ட ஆளுமைகளில் பலர் உயர்கல்வியை லண்டனில் முடித்தனர். இவர்களில் அன்றைய ரஷ்ய புரட்சியால் தாக்கமுற்ற சிலர் இந்தியாவிலும் அதற்கான தேவையை உணர்ந்தனர். அப்போது ரஷ்யாவின் கண் இந்திய சுதந்திர போராட்ட நடவடிக்கைகள் மீதும் இருந்தது. 1920 ல் தாஷ்கண்டில் இதற்கான கூட்டம் எம்.என் ராய் தலைமையில் நடந்தது.
பகுதி2 – இன்னும் வரும்….

Exit mobile version