அக்டோபர் வானம்
புதியதாக ஒரு கல்லறை
ஒரே ஒரு வெண்ணிறக்கொடி
வேதனையில் ஓலமிடும்
உனக்குப் பிடித்திருந்தால் அதனை
நிலா என்றழை
எமக்கென்றொரு சினேகிதன் இருக்கிறான்
பற்களால் சிரித்திடும்
விழிகளால் கதைத்திடும்
அக்டோபர் மாதத்தில் உயிர்த்தெழுந்து
மீள மரித்துப் போகும்படியான
துப்பாக்கி ரவைக்கும் இருக்கிறது
நிமிட நேர வாழ்க்கை
நண்பனுக்கென இருப்பது
அக்டோபரின் நாளொன்று மட்டுமா
கண்ணீருக்கும் இருக்கிறது
உஷ்ணத்தாலோ குளிராலோ ஆன ஒரு இருப்பிடம்
தாய்நிலமற்ற தோழனுக்கென இருப்பது
இருப்பிடம் கூட அற்ற மரணம் மாத்திரமா
அந்த நண்பனுக்குத்தான்
அக்டோபரில் உயிர் வருவதுவும்
அதே நண்பன்தான்
திரும்பத் திரும்ப மரித்துப் போவதும்
– மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
# மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
கவிஞர் பற்றிய குறிப்பு –
# மஞ்சுள வெடிவர்தன : இலங்கையைச் சேர்ந்த இவர் கவிஞர், ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், நாடகாசிரியர், ஊடகச் செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணம் கொண்டவர். தமிழ் மக்களுடைய பிரச்சினையைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதில் பெரும் பணியாற்றுபவர். இவருடைய சிறுகதைத் தொகுதி ஒன்று இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ள இவரது சிங்களக் கவிதைகளை, தமிழ்க் கவிஞர்கள் ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகியோர் தமிழில் மொழிபெயர்த்து, ‘தலைப்பற்ற தாய்நிலம்’ எனும் முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்..