Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் – இரத்தக் கறைபடிந்த வரலாறு

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வாக்குப் பொறுக்குவதற்காக பயன்படுத்தும் சின்னம்
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வாக்குப் பொறுக்குவதற்காக பயன்படுத்தும் சின்னம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வடக்குக் கிழக்கில் ஒரு தேசம் இரு நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து வாக்குக் கேட்கிறது. ஒற்றையாட்சி முறைக்குள் உள்ள சிங்கள பௌத்த பேரினவாதிகளின் பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச உரிமைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஒரு நாடு இரு தேசம் என்ற சுலோகம் வெறும் வாக்கு வேட்டைக்காகவே முன்வைக்கப்படுகிறது.

அந்த சுலோகம் வாக்குச் சேகரிக்க்ப் பயன்படுகிறது என்று மட்டும் அனுமானித்துக்கொள்ள முடியாது. மலையகத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவர்களை அரசின் பக்கம் சேர்க்கும் சதி இதன் பின்புலத்தில் உளடங்கியிருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

ஜீ.ஜீ.பொன்னம்பலம்

மலையக மக்களுக்கு எதிராகவும் தொழிலாளர் வர்க்க அரசியலுக்கு எதிராகவும் அதிகாரவர்க்கத்தோடு இணைந்து செயற்பட்ட கறைபடிந்த வரலாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் ஆரம்பம் முதலே காணப்படுகின்றது. தமது அதிகாரவர்க்க நலன் என்று வந்துவிட்டால் தமிழ் சிங்களம் என்ற வேறுபாடுகளை மறந்துவிடுவது இந்தக் கட்சியின் அத்திவாரத்திலேயே காணக்கிடக்கும் அருவருப்பான உண்மை.

1941 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராகப் பதவிவகித்க டீ.எஸ்.சேனாநாயக்க, சேர்.டி.எஸ்.பஜ்பே மற்றும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் நடத்திய பேச்சுக்களின் பின்னர் மலையத்தை பொன்விளையும் பூமியாக மாற்றிய மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இலங்கையின் குடிமக்களாக்குவதை ஏற்றுக்கொண்டிருந்தார்.

1946 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறக்கு வந்தது. அவ்வேளயில் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய ஒரே கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், கண்டியச் சிங்களவர்களை ஆதாரமாகக்கொண்டு சிங்கள தேசியவாதத்தை தூண்டிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆகியோருடன் புதிய அரசியல் யாப்பின் அடிப்படையில் மந்திரிசபை ஒன்றை உருவாக்கும் நோக்கில் சேனாநாயக்க பேச்சுக்களில் ஈடுபட்டார்.

அதற்கு அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் மலையகத்திலிருந்து ஆறு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர் அதே வேளை மலையகத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் தீவிரடமடைந்தன. ஒக்ரோபர் மாதம் 1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செங்கொடிச் சங்கம் என்ற தொழிற்சங்கம் மலையகம் முழுவதும் வேர்விட ஆரம்பித்தது.

இலங்கையில் முன்னேறிய தொழிலாளர்களாகத் திகழ்ந்த மலையக மக்கள் மத்தியில் சண்முகதாசனின் வழி நடத்தலில் தோன்றிய செங்கொடிச் சங்கத்தைத் தவிர, சமசமாஜக் கட்சியின் செல்வாக்கும் மற்றொரு புறத்தில் வளர்ச்சிபெறத் தொடங்கியது.

மலையக் மக்கள் தமிழர்கள் என்பதை விட அவர்கள் கம்யூனிசத்தின் பக்கமும் தொழிலாளர்களின் பக்கமும் சாய்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் டீ.எஸ்.சேனாநாயக்கவின் குடியுரிமை தொடர்பான கருத்துக்களை மாற்றியது. மலையகத்திலிருந்து தோன்றிய கம்யூனிச ஆபத்த எதிர்கொள்ள மலையக மக்களின் குடியுரிமையைப் பறிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தார். கம்யூனிசத்திற்கு எதிராக சேனாநாயக்கவும் பொன்னம்பலமும் இணைந்து மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தனர்.

டீ.எஸ்.சேனாநாயக்க

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு 1948 ஆம் ஆண்டு இலங்கையில் குடியுரிமைத் திருத்தச்சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் திருமணமானவர்கள் பத்து வருடங்களின் பின்னரும் திருமணமாகாதவர்கள் ஏழு வருடங்களின் பின்னரும் இலங்கைக் குடியுரிமை பெற்றவர்களாகத் தகுதியுடையவர்களக் கருதப்படுவர். சட்டம் நிறைவேற்றப்பட்ட திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் இலங்கையில் பிறந்த தந்தை என்ற தகுதியை மட்டும் கொண்டவராகக் கருதப்படுவார்.

சொந்த நாட்டில் மலையகத் தமிழர்களின் இரத்தைத்தை உறிஞ்சிக் கொழுத்த இலங்கை அதிகாரவர்க்கம் ஒரே இரவில் அவர்களை நாடற்றவர்களாக்கி புதிய நிபந்தனைகளை விதித்தது. இச்சட்டத்திற்கு ஆதரவளித்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் டீ.எஸ்.சேனாநாயக்கவின் அமைச்சரவையில் இணைந்துகொண்டார்.

இடதுசாரி அணியினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைத் துரோகி என அழைத்தனர்.

வரலாறு மீள் சுளற்சியடைந்து இன்று தொடங்கிய புள்ளியில் வந்து நிற்கிறது. இப்போது தமிழர்கள் கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார். தனது பாட்டனின் சொத்தான அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் அதே கருத்தை 67 வருடங்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிரொலித்தார்.

அதே வேளை ஒரு நாடு இரு தேசம் எனக் கூறி மலையக மக்களின் சுயநிர்ணைய உரிமையைக் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ‘சுத்தமானது’ என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மக்களைக் சாரிசாரியாக அழிக்க உதவிய அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளைப் பிடித்துவந்து சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை செய்வோம் என கடந்த ஆறுவருடங்களக மக்களை ஏமாற்றிவரும் பொன்னம்பலம் குழுவினர் இலங்கை அதிகாரவர்க்கத்தின் தமிழ் அடியாட்களே தவிர வேறில்லை.

சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவாதமாக்கி அழிப்பதற்கும் கம்யூனிச அபாயத்தை எதிர்கொள்ளவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை குழிதோண்டிப் புதைப்பதற்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இன்னும் அதிகாரவர்க்கத்திற்குத் தேவைப்படுகிறது.

துணை நூல்கள்:

Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970
By A. Jeyaratnam Wilson
The Labour Movement in the Global South: Trade Unions in Sri Lanka – By S. Janaka Biyanwila

தொடர்புடைய பதிவுகள்:

கஜேந்திரகுமாரின் சொத்துக்கள் பேசும் அதிகாரவர்க்க அரசியல்
பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது
Exit mobile version