பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் வெற்றிபெற்றிருந்தாலும் அந்த அமைப்பை திரை மறைவில் வழி நடத்தியவர் அன்ரன் பாலசிங்கமே என்பதை வன்னி ஊடகவியலாளர் மாநாடே வெளிப்படுத்தியது.
விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் நிலையிலிருந்த பாலசிங்கம் பிரித்தானிய அரசு சார்பாக விடுதலைப் புலிகளை அதன் அழிவு நாட்கள் வரை கையாண்டவர் என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்புக்களால் முன்வைக்கப்பட்டன.
புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் வெளிப்படையாக அந்த அமைப்பின் அரசியலைத் தீர்மானித்த பாலசிங்கம் அங்கு எந்தத் தடையுமின்றி வாழ அனுமதிக்கப்பட்டிருந்தார். நோர்வே நாட்டின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களை வழி நடத்திய பாலசிங்கம் அதன் செல் நெறியைத் தீர்மானிப்பவராகவிருந்தார். ‘பாலசிங்கம் புலிகளின் தனி ஈழக் கோரிக்கையைத் திசை மாற்றியவர்’ என பிரித்தானிய ஊடகம் ஒன்று அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஈழப் போராட்டத்தின் இறுதி நியயமும் ஏகாதிபத்தியங்களின் துணையோடு சிங்கள பௌத்த பேரினவாதிகளால் வன்னியில் அழிக்கப்பட்டு ஏழு வருடங்களின் பின்னரும் தமிழ்ப் பேசும் மக்களின் உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை மறுக்கப்படுகின்றது. உண்மைகள் அழித்தவர்களுக்கும், அதன் பின்புலத்தில் செயற்பட்ட ஏகபோக அரசுகளின் உளவு நிறுவனங்களுக்கும் மட்டுமே தெரிந்தவை. புலிகளை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம் தமக்குத்தாமே கூறும் சுய காரணங்களுக்காக உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்க, அவற்றைப் போராட்டத்தின் நியாயத்தை அழிக்கும் கருவிகளாக பேரினவாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
பனிப் போர் காலத்தில் உச்சமடைந்த விடுதலைப் புலிகளின் இராணுவரீதியான வளர்ச்சியினதும், அரசியல்ரீதியான பின்னடைவினதும் பின்னணியில் பிரித்தனிய அரசு நேரடியாகச் செயற்பட்டிருக்கிறது என்பதற்குப் பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் போராட்டங்களை அழிப்பதில் நீண்ட அனுபவம்மிக்க பிரித்தானிய அரசின் சார்பில் புலிகளின் அரசியலைத் தீர்மனிக்கும் முகவராக பாலசிங்கம் செயற்பட்டாரா என்ற கேள்விகள் இன்னும், பல ஆண்டுகளுக்கு வெளிவராத மர்மமாகவே தொடரும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.
தேசியப் பொருளாதாரத்திற்கு எதிரான விதேசிய- நவதாராளவாத, திறந்த பொருளாதாரமே பொருளாதாரக் கொள்கை என வன்னியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் அன்ரன் பாலசிங்கம் முன்னிலையில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
அன்ரன் பாலசிங்கம் இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் தமிழ் ஆங்கில மொழிபெயர்பாளராக வேலைபார்த்தவர். பிரித்தானிய அரசிற்கு எதிராக தமிழ் ஊடகங்களில் வெளிவரும் செய்திகளையும் ஆக்கங்களையும் மொழிபெயர்ப்பதே அன்ரன் பாலசிங்கத்தின் தொழில்.
பின்னதாக பிரித்தானியாவில் குடியேறிய பாலசிங்கம் 70 களின் இறுதியில் தமிழ் நாட்டிற்குச் சென்று புலிகள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.
80 களின் ஆரம்பத்தில் ஒபரோய் தேவனின் ரெலா அமைப்புடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கும் பாலசிங்கம் சில மாதங்களுக்கு உள்ளாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் அந்த அமைப்பின் அரசியலைத் தீர்மானிப்பவராகவும் செயற்படுகிறார். பிரித்தானியாவிற்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பயணங்களை மேற்கொண்ட அன்ரன் பாலசிங்கம் சமாதான ஒப்பந்தம் உட்பட பல சந்தர்ப்பங்களில் புலிகளின் பிரதிநிதியாகச் செயற்பட்டார்.
அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் ஆன் பாலசிங்கம் புலிகளின் முக்கிய உறுப்பினரானார். இவர்ஈழப் போராட்டம் குறித்த பல நூல்களின் ஆசிரியர்.
2006 ஆம் ஆண்டி டிசெம்பர் மாதம் பாலசிங்கத்தின் மறைவின் பின்னர் அடேல் பாலசிங்கம் அரசியலில் காணாமல் போனார். உலகைக் குலுக்கிய 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் தொடர்பாகக்கூட எந்தக்கருத்தும் கூறாத அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவில் சரே பகுதியில் வசித்துவருகிறார்.
பிரித்தானிய அரசு ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கும் தவறான வழிகளில் திசைதிருப்புவதற்கும் ஆரம்பத்திலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பிரித்தானிய அரசுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு தொடர்பான கேள்விகள் எழுகின்றன.
இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகமாகக் காணப்படுகிறது. தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் இயக்கத்தை வடிவமைப்பது இன்று அவசியமானதாகும்.
மேலும்:
https://www.tamilnet.com/art.html?catid=13&artid=20616
ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானியா 80 களிலிருந்தே உதவுகிறது:புதிய ஆவணங்கள் வெளியாகின