பராக் ஒபாமாவின் கறுப்பு நிறம் அவர் முதலாவதாகப் பதவியேற்ற வேளையில் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது. உலகம் முழுவதையும் சூறையாடும் கொடிய ஏகாதிபத்தியத்தின் நிர்வாகிகளில் ஒருவர் நிறம், மதம், பால் என்பவற்றைக் கடந்தவர் என்பதை அதிகாரத்தில் அமர்ந்த மறு கணத்திலிருந்தே ஒடுக்கப்படும் உலக மக்களுக்கு உணர்த்த ஆரம்பித்துவிட்டார்.
ஜோர்ஜ் புஷ் இன் நிர்வாகக் காலத்துடன் ஒப்பிடும் போது, ஒபாமாவின் காலத்திலேயே ஆப்கானிஸ்தானில் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் ஆளில்லா விமானக் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டனர். 2400 அப்பாவிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க சார்பு தன்னார்வ நிறுவனம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது. கொலைக் களங்களில் பள்ளிக் குழந்தைகள் ஏன் செத்துப்போகிறோம் எனத் தெரியாமலேயே மரணித்துப் போயினர்.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணித்துப்போக தனது குழந்தைகளையிட்டுப் பெருமைப்படுவதாக ஒபாமா ஆனத்தக் கண்ணீர் வடிக்கிறார். சோமாலியா. யெமென், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஒபாமா அனுமதி வழங்கிய ஆளில்லா விமானத் தாக்குதல்களின் எண்ணிக்கை 506. ஜோர்ஜ் புஷ் 50 தாக்குதல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தார். ஒபாமா பதவியேற்ற மூன்றாம் நாளில் பாகிஸ்தானின் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் ஒபாமாவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் குழந்தைகளையும் குறிவைக்கத் தவறவில்லை.
ஆப்கானிஸ்தானிய மக்கள் மீது ஒபாம தலைமையில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு ஏனைய உலக நாடுகள் வரை விரிவடைந்து சென்றது. மத்திய கிழக்கில் ஈரக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளில் ஒபாமா நிர்வாகம் நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தம், அந்த நாடுகளை மனித இரத்ததால் நிரப்பியது.
100 பில்லியன் டொலர்களுக்கும் மேல் பெறுமதிமிக்க ஆயுதங்களை சவூதி அரேபியாவிற்கு வழங்க அனுமதித்த ஒபாமா நிர்வாகம் யெமென் நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலுக்கும் அங்கீகாரம் வழங்கியது. கொத்துக்குண்டுகளால் நூற்றுக்கணக்கானவர்கள் யெமெனில் மாண்டு போயினர்.
யுத்த வெறிகொண்ட அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிரதிநியாகச் செயற்பட்ட ஒபாமா, உக்ரையின் நவ நாசிக் குழுக்களை ரஷ்யாவிற்கு எதிராகப் பலப்படுத்தியதன் பின்புலத்தில் புதிய பனிப் போர் ஒன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
உலகம் அப்பாவிகள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற ஒன்றல்ல என்பதை ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக வேரூன்றுவதற்கு ஒபாமா நிர்வாகம் தன்னாலான பங்களிப்பை வழங்கியது.
ஒபாமா நிர்வாகத்தில் ஆராயிரத்திற்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர் போலிஸ் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். கொலைகளைத் திட்டமிட்ட போலிஸ் படை பாதுகாக்கப்பட்டது. கறுப்பின மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக இதுவரை ஒபாமா மூச்சுகூட விட்டதில்லை.
ஒபாமாவின் ஆட்சிக்காலம் அவருக்கு முன்னைய ஜோர் புஷ் இன் உலகை ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு எந்த வகையிலும் குறைந்தததல்ல. ஆசியா பசிபிக் கொமாண்ட் படைகள் இந்து சமுத்திரத்தை அச்சுறுத்தின.
அமெரிக்கக் கப்பல் வரும் என்று நம்பிக்கை வழங்கி வன்னியில் மக்களைக்யும் விடுதலைப் புலிகளின் போராளிகளையும் கொன்றொழித்த புலம்பெயர் குழுக்கள் வன்னிப் படுகொலையில் அமெரிக்காவின் பங்கை இன்னும் முற்றாக நிராகரிக்கின்றனர்.
அமெரிக்காவின் இருதயத்தில் அமர்ந்துகொண்டு அந்த நாட்டின் நிதிக்கொடுப்பனவில் இயங்கும் மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமையை ஆக்கிரமிப்பிற்கான ஆயுதமாகப் பயன்படுத்த அமெரிக்க அதிகாரவர்க்கத்திற்குத் துணை செல்கின்றன. வன்னிப் படுகொலைகளின் பின்னர், இலங்கையை ஆக்கிரமிப்பதற்கான ஆயுதமாக மனித உரிமை பயன்பட்டது. புலம்பெயர் அமெரிக்க சார்பு தமிழ் நாசகாரக் குழுக்களின் துணையுடன் அமெரிக்கா நடத்திய மனித உரிமை நாடகத்தின் விளைபலனாக அமெரிக்க சார்பு மைத்திரி-ரனில் அரசு தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்க சீடர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியானது.
உலகின் சந்து பொந்துக்களிலெல்லாம் இரத்த ஆறை ஓடவிட்டு வேடிக்க பார்க்கும் அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் மற்றொரு பிரதிநிதியான ஒபாமா தனது பதவிக்காலத்தில் அனுபவித்த இன்பங்களுக்காக கண்ணீர்வடிக்கலாம், ஒபாமாவினால் கொல்லப்பட்ட ஒரு மனிதனுக்காவது அவர் கண்ணீர்வடிக்கப் போவதில்லை.