இனவழிப்பின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க அரசையே சர்வதேச விசாரணை நடத்துங்கள் என அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்து காலத்தைக் கடத்திய பின்னர், இப்போதும் அமெரிக்காவையே சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோருகிறார்கள்.
நமது ஆய்வாளர் பெருந்தகைகள் பொறி பறக்கும் விவாதம் நடத்துகிறர்கள். போர் முடிந்த காலங்களில் அமெரிக்கா தண்டிக்கும் என பக்கம் பக்கமாக எழுதியவர்கள் இப்போது அமெரிக்கா துரோகம் செய்துவிட்டது என அங்கலாய்க்கிறார்கள்.
இதுவரை தமிழ்ப் பேசும் மக்களை ஏமாற்றிய அதே தலைமைகள் இனவழிப்பு முடிந்து ஆறு வருடங்களின் பின்னரும் குறைந்த பட்சக் கூச்ச உணர்வுகளுமின்றி இன்னும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று சாத்தியமில்லாதவற்றைக் கோருகின்றார்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கையெழுத்து வேட்டை நடக்கிறது. ஏதோ அமெரிக்க அரசு மனிதாபிமானம் படைத்த இரட்சகர்கள் என்ற கணக்கில் கையெழுத்து வைத்துவிட்டால் மனமிரங்கி சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தும் என நம்பக் கோருகிறார்கள்.
இன்று தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதியை மட்டுமல்ல, இலங்கை முழுவதையும் அமெரிக்காவின் கைகளில் ஒப்படைத்துள்ளமைக்கு புலம்பெயர் தலைமைகள் பிரதான பாத்திரம் வகிக்கின்றன.
போர்க்குற்றம், இனப்படுகொலை போன்றன இலங்கையில் நடத்தப்பட்டமைக்கு எதிரான உலக மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தலைமைகள் அழித்த அமெரிக்காவிடமே விசாரணையை ஒப்படைத்தனர்.
இதற்காக மக்களிடம் அவர்கள் வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும். ஆயிரக்கணக்கில் புலம்பெயர் நாடுகளில் குடிகொண்டிருக்கும் தமிழர் தலைமைகள் இலங்கை அரசிற்கும் பேரினவாதத்திற்கும் எதிரான உலக மக்களை வென்றெடுப்பதிலேயே கொலையாளிகளைத் தண்டிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.