‘முப்படைகளையும் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளே தோற்கடிக்கப்பட்டமையால் இனிமேல் ஏதாவது ஏகாதிபத்திய நாடுகளை வால் பிடித்துத் தான் விடுதலை பெற முடியும் என்றும், போராட்டம் சர்வதேச மயப்படுகிறது என்றும்’ இக் குழுக்கள் மக்களையும் எஞ்சியிருந்த போராளிகளை நம்பவைத்தன.
அமெரிக்கா, பிரித்தானியா இந்தியா போன்ற அழிப்பில் ஈடுபட்ட அதிகாரவர்க்கங்களையே நம்புமாறு கடந்த 9 வருடங்களாக மக்கள் மீண்டும் அமைப்பாக உருவாவதை சிதறடித்தன.
‘கடந்த காலப் போராட்டத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு நம்பிக்கையோடு முன் செல்வோம்’ என குர்திஸ்தான் போராட்டம் மீழ் எழுந்த வேளையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டன. கடந்த காலப் போராட்டம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்றும், புதிதாக எதுவுமில்லை என்றும் இனிமேல் ஏகாதிபத்திய நாடுகளைக் குறுக்கு வழிகளில் சார்ந்திருப்பதே சரியானது என்றும் மக்களை நம்பவைத்தன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இந்த அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட நாடுகள் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளன.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென இத் தீர்மானம் முன்வைப்படவுள்ளது,
அதற்கு இலங்கை அனுசரணை வழங்கவுள்ளது.
புலம் பெயர் அமைப்புக்களும், தமிழ் வாக்குப் பொறுக்கிகளும் வலம் வந்த ஐ.நாவும் அதனை நடத்தும் ஏகபோக நாடுகளும் வன்னி இனப்படுகொலையின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களைக் கூட விசாரணைக்கு உட்படுத்தத் தயார் நிலையில் இல்லை.
மக்கள் இக் கால இடைவெளிக்குள் அமைப்புகளாக அணிதிரட்டபடவில்லை. புதிய போராட்ட அரசியல் முன்வைக்க்ப்படவில்லை. போராளிகளும் அவர்களின் எஞ்சியிருந்த போர்குணமும் அழிக்கப்பட்டுவிட்டன.
இன்னும் இரண்டு வருட கால அவகாசம் ஈழப் போராட்டத்தின் கடந்த காலத்தையே சுவடுகளே இல்லாமல் சிதைத்துவிடும்.
இவற்றிற்கெல்லாம், தமிழ்த் தலைமைகள், குறிப்பாக புலம்பெயர் தலைமைகள் நாளைய சந்ததிக்குப் பொறுப்புக்கூறவேண்டும்.