Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உள்நாட்டு விசாரணையா சர்வதேச விசாரணையா? :வாக்குப் பொறுக்கிகளின் நகைச்சுவை விவாதங்கள்

bikeandhouseசர்வதேசம் என்று குறிப்பிடப்படும் ஆதிக்க வலுவுள்ள உலக நாடுகள் இணைந்து இலங்கை அரசினூடாக நிகழ்த்திய வன்னி இனப்படுகொலையில் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஆறுவருடங்கள் பல தரப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அழிப்பின் பின்புலத்தில் செயற்பட்ட சர்வதேச நாடுகள் இணைந்து போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தும் என தமிழர் தரப்புக்கள் கூறிவந்தன. போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விசாரணை ஐ.நாவினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் ஏலவே நடத்தி முடிக்கபட்டுவிட்டது. அவர்களது விசாரணையின் அடிப்படையில் யாரைத் தண்டிப்பது எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அப்பரிந்துரையின் அடிப்படையில்,

1. இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி விசாரணைகளைத் தொடரும் என அறிவித்துள்ளது.

2. போர்க்குற்றங்களில் இரண்டுதரப்பும் ஈடுபட்டுள்ளதாகவும் இரு தரப்பும் விசாரணை நடத்டவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

3. புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலுமுள்ள தீவிரவாத சக்திகளை தந்திரோபாய அடிப்படையில் அணுகவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது..

ஐ.நா விசாரணையின் ஆவணம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களே இவை. இத்தகவல்கள் ஐ.நா விசாரணை தொடர்பான எதிர்வு கூறலுக்குப் ஓரளவு போதுமானவை.

இதற்கும் மேல் ஐ.நா விசரணை நடந்த பின்னான ‘சரவதேச சமூகத்தின்’ செயற்பாடுகள்:

1. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் தமிழ் அகதிகள் மீது போர்க்குற்றம் சுமத்தி விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது.

2. ‘சர்வதேச சமூகத்தை’ச் சேர்ந்த நாடுகளால் நிதி வழங்கப்படும் தன்னார்வ நிறுவனங்கள் தமிழர் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடுகின்றன. அவ்வாறான தலையீட்டிற்கு அமெரிக்க அரசு பெருந்தொகையான நிதியை வழங்கி வருகிறது.

3. இலங்கையில் மைத்திரிபால அரசால் ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்களுக்கு இனிமேல் தீர்வு கிட்டிவிடும் எனவும் ‘சர்வதேச நாடுகள்’ தீவிர பிரச்சாரம் ஒன்றை மேற்கொள்கின்றன.

சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரை மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலோ தேர்தலில் யார் வாக்குப் பெற்றார்கள் என்ற அடிப்படையிலோ செயற்படுவதில்லை. பலஸ்தீனத்தில் அமோக தேர்தல் வெற்றிபெற்ற ஹம்மாஸ் அமைப்பை பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய அணி தோல்வியடைந்த பலஸ்தீனியக் குழுக்களுடனேயே பேச்சுக்கள் நடத்துகின்றன.

இந்த நிலையில் சர்வதேச விசாரணை நடத்துவதே தமது நோக்கம் என கஜேந்திரகுமார் குழு கூறிவருகிறது. சுமந்திரன் குழு உள்ளக விசாரணையே போதும் என்கிறது.

1. அழித்தவர்களையே அழைத்துவந்து பேச்சு நடத்துவதை இரண்டு தரப்பும் சரி என்கிறது.

2. முள்ளிவாய்க்கால் அழிப்பின் பின்னர் சுத்திகரிப்பு நடடவடிக்கையை மேற்கொள்ளும் சர்வதேசம் இலங்கை அரசைவிடப் பலம் வாய்ந்த எதிரி என்று தெரிந்து கொண்டே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

3. புலிகள் குற்றவாளிகள் என ஏற்றுக்கொள்ளும் கஜேந்திரகுமார், இலங்கை அரசு புலி உறுப்பினர்களைத் தண்டித்துவிட்டது இனிமேல் விசாரணை தேவையில்லை என்கிறார். ஆக, தண்டிக்கப்படாது எஞ்சியுள்ளவர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோருகிறார்.

4. கஜேந்திரகுமார் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவருமே சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டவர்கள்.

சர்வதேசம் என்பது புலிகளைப் போர்குற்றவாளிகள் என்றும், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தீவிரவாதப் போக்குள்ள அமைப்புக்களையும் தண்டிக்க வேண்டும் எனக் கூறும் போது அதே சர்வதேசத்தை விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறும் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் மக்களுக்கு எதிரானவர்களே. ஒரே கருத்தை வெவ்வேறு வழிகளில் கூறும் இரண்டு வாக்குப் பொறுக்கிகள்.

இந்த அவல நிலைக்குக் காரணமானவர்கள் யார்?

1. சர்வதேச விசாரணை நடத்தப்போகிறோம் எனக் கூறி ஈழப் போராட்டத்தின் பின்னான சுத்திகரிப்பை நடத்துவதற்கு சரவதேச நாடுகளுக்கு நிபந்தனை எதுவுமின்றி உதவிய சுமந்திரனும் கஜேந்திரகுமாருமே.

2. உலக மக்களின் பொது அபிப்பிராயத்தை ஏனைய நாடுகளின் உரிமைப் போராட்டக் குழுக்களைப் போல மாற்றாமல் அதிகாரவர்க்கத்தோடு மட்டுமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட கஜேந்திரகுமாரும் சுமந்திரனும்.

இதை மாற்றுவது எப்படி:

1. உலக மக்கள் மத்தியில் இனவழிப்புத் தொடர்பான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.குறிப்பாக உலகின் போராட்டக் குழுக்களோடு இணைந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. சுய நிர்ணைய உரிமை என்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களை நீக்கி இணைவை ஏற்படுத்தும் என்று ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தெளிவாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.அவர்களின் இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகளில் எம்மையும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வேலைத்திட்டங்களை வாக்குப் பொறுக்கிகளாலும் வாக்குப் பொறுக்கும் அரசியலாலும் மேற்கொள்ள முடியாது. அதற்கு வெளியால் ஒரு புதிய அரசியல் இளைய சமூகத்தால் முன்வைக்கப்படவேண்டும். தேர்தலைப் புறக்கணித்து புதிய வழிமுறைகளைத் தேடும் முயற்ட்சியின் ஊடாகவே இது சாத்தியமாகும்.

Exit mobile version