அமெரிக்காவினால் எதிர்வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக தமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேசினின் கொலன்னே இது தொடர்பன மேலும் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் ஜனாதிபதி ஆகியோரின் திட்டத்தின் அடிப்படையில் ஐ.நா தொடர்பான விவகாரங்கள் அணுகப்படும் என்றார்.
வன்னி இனப்படுகொலைகள் நடைபெற்று ஆறு ஆண்டுகள் வரை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்க அரசு தமிழ்த் தலைமைகளையும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் பயன்படுத்தி விசாரணை நாடகம் ஒன்றை நடத்தியது.
அதனூடாக தமிழர்களை கொலைகார அமெரிக்காவின் ஆதரவாளரா உலகத்திற்குக் காட்டியது. தமிழர்களின் போராட்டத்தை முற்றுமுழுதாக உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்து அன்னியமாக்கி தனிமைப்படுத்தி சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மிக நீண்ட காலத்திற்குப் பிந்தள்ளியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாள் படைகளாகச் செயற்பட்ட ஏகாதிபத்திய ஒட்டுகுழுகள்களும் அவர்களின் பிரதிநிதிகளும் முள்ளிவாய்க்காலுக்குள் புலிகளையும் மக்களையும் முடக்கிவைத்து அழித்த பின்னர், கடந்த ஆறு வருடங்களாக நடத்திய சுத்திகரிப்பு நடவடிக்கையில் போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழித்துள்ளது.
பிரபாகரனின் பெயரையும் புலிகளின் அடையாளத்தையும் பயன்படுத்தி அழிப்பை ஏற்படுத்திய புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களை மக்கள் மத்தியிலிருந்து அகற்றி, எம்மைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு, உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை எடுத்துச் செல்வதே இன்று சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமை.