தேசிய இனங்கள் தொடர்பான தெளிவான வரைமுறையையும் அதன் வரலாற்று வழிவந்த தோற்றத்தையும் ஸ்டாலின் முன்வைத்தார். சோவியத் ஒன்றியமே முதன் முதலாக அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமையை வழங்கியது. ஒன்றியத்திலிருந்த பின் தங்கிய சில தேசிய இனங்கள் தனியரசாக வளர்வதற்கு சிறப்புரிமைகள் வழங்கப்பட்டிருந்தன.
சீனாவில் சோசலிச ஆட்சி நிறுவப்பட்ட போது அங்கிருந்த அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணைய உரிமை வழங்கப்பட்டது.
ஸ்டாலினின் மறைவிற்குப் பின்னர் உலகில் ஏற்பட்ட மாற்றங்களால் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் கூட தம்மை இடதுசாரிக் கட்சிகள் என அழைத்துக்கொண்டன. இப் போலி இடதுசாரிக் கும்பல்களில் அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் ரொஸ்கியத் திரிபு வாதக் கட்சிகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன.
இலங்கையில் வழங்கப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் அங்கு சமூகத்தின் உழைக்கும் மக்களில் பெரும்பாலானவர்களும் கல்வியைப் பெற்றுக்கொண்டனர். இதனாலும் வேறு புறக்காரணங்களாலும் தொழிலாளர் எழுச்சிகள் ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதி வரையும் ஏகாதிபத்தியங்களை அச்சம் கொள்ளச் செய்தது.
அதன் பின்னர், பாராளுமன்ற அரசியலில் களமிறக்கப்பட்ட போலி இடது சாரிகளுள், என்.எம்.பெரேரா, லெஸ்லி குணவர்தன, கொல்வின் ஆர்.டி.சில்வா, காராளசிங்கம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். லங்கா சமசமாஜக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களான இவர்களின் இன்றைய தொடர்ச்சிகளில் ஒருவரே வாசுதேவ நாணயக்கார. தவிர, இதன் வழிவந்த மற்றொரு ரொஸ்கியவாதி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன நவ சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் அதிகாரத்திலிருந்த காலத்தில் அவர்களின் பிரச்சாரப் பீரங்கியாகச் செயற்பட்ட விக்ரமபாகு புலம்பெயர் அமைப்புக்களோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
இன்று அமெரிக்க அடியாள் ரனில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் விக்ரமபாகுவின் செயற்பாடு எதிர்பார்த்த ஒன்றே.
தவிர, இலங்கை இனப்படுகொலை இராணுவத்தை நாட்டைப் பாதுகாத்த வீரர்கள் என்றும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப் பொறுக்கும் திரிபுவாதிகளுக்கு எதிராகவும், ரொஸ்கிய வாதப் போலிகளுக்கு எதிராகவும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக முன்வைக்கப்படும் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களைக்கூடக் கேள்விப்பட்டிராத தமிழ் முகநூல் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் இன்று விக்கிரமபாகுவை முன்வைத்து இடதுசாரிகள் மீதான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.