Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்படவேண்டும்.

omanthaiவவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பாக வாதங்கள், பிரதி வாதங்கள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் வவுனியாவில் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்களின் எதிர்காலம், பிரதேச பொருளாதார கட்டமைப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முதலியவற்றை கருத்தில் கொண்டு அமைவிடம் தொடர்பான முடிவை முன்வைக்க வேண்டுமென சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்ட செயலாளர் சு.டொன்பொஸ்கோ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வடமாகாண முதலமைச்சர் முன்மொழியும் ஓமந்தையா அல்லது மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் கூறும் தாண்டிக்குளமா உகந்தது என சீர்தூக்கிப் பார்க்கும்போது ஒமந்தையே சிறப்பானது என எமது அமைப்பு கருதுகின்றது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு

பாலமோட்டை, கனகராயன்குளம், மாமடு, நெடுங்கேணி, நட்டாங்கண்டல் போன்ற வவுனியா மாவட்ட விவசாய பிரதேசங்களின் போக்குவரத்து வலையமைப்பின் மத்திய நிலையமாக ஓமந்தையே காணப்படுகின்றது. யுத்த காலத்தின் முன் உப நகரமாக வளர்ச்சியுற்று வந்த இந்நகரை மீளக்கட்டியெழுப்பவும், வவுனியா நகரின் சன நெருக்கடியைக் குறைக்கவும், நகர விஸ்தரிப்பிற்கான வசதியை பெருமளவில் கொண்டிருக்கின்ற இவ்விடம், மத்திய கல்லூரி, வங்கிச் சேவை, மருத்துவ நிலையம், புகையிரத நிலையம், ஏ9 போக்குவரத்துப் பாதை என்பவற்றை ஏற்கனவே கொண்டிருக்கின்றது. மக்கள் செறிவு குறைவாகவும், இடவசதி அதிகமாகவும் ஓமந்தை காணப்படுவதால் கழிவகற்றலை இலகுவாக செய்யவும், வாகன நெரிசல், ஓசை எழுப்புதல் போன்ற சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பராமரிப்பது என்பன இலகுவாகின்றது. மேலும் தாண்டிக்குளத்தில் இந்நிலையம் அமையுமானால் பின்வரும் பாதிப்புக்கள் ஏற்படும். திட்டமிடப்படாத வகையில் வவுனியா நகரம் உருவாகியுள்ளதால், போக்குவரத்து நெருக்கடியும், சனச்செரிவு அதிகமாகவும் காணப்படுகின்றது. நிலையம் இங்கு அமையுமானால் மேலும் நெருக்கடி ஏற்படும். சூழல் மாசடைதலும், கழிவகற்றலில் இடர்பாடுகளும் ஏற்படும்.

வடமாகாணத்தில் தமிழ்மொழி மூலமான விவசாயக் கல்லூரிச் செயற்பாடுகளிலும், அபிவிருத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு விவசாய விதை உற்பத்தி ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே இவ்விடயம் மாகாண சபைக்குரியதாக இருப்பதால் மாகாணசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து நாட்டின் அபிவிருத்தி, மக்களின் நலன், சூழல் பாதிப்பு முதலியவற்றை கருத்தில்கொண்டு ஒருமித்த முடிவைக் காணவேண்டும் என்பதுடன் இவ்விடயத்தில் வட-கிழக்கில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராபட்சமாக இருப்பதன் மூலம் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த வரலாற்றுத் தவறினை விட்டுவிட வேண்டாம் என்பதையும் எமது அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது என அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

Exit mobile version