உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்கள் உலகின் பயங்கரவாத அரசுகளிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் தம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதைத் தமது திட்டங்களில் பிரதானமாக இணைத்துக்கொள்வார்கள்.
தமிழ்த் தலைமைகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் மூடர் கூட்டங்கள் மக்களை உலகின் பயங்கரவாத அமைப்புக்களின் பிடியில் ஒப்படைக்கும் பணியை மிக நீண்டகாலமாகவே மேற்கொண்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளால் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னரும் மேலும் அழிவை ஏற்படுத்தும் நோக்கத்தில் உளவு நிறுவனங்களதும் அழிக்கும் அரசுகளதும் பிடியில் மக்களின் உயிரை ஒப்படைக்கிறார்கள்.
அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமெரிக்காவில் உலக வங்கியுடன் இரகசியச் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். உலகத் தமிழர் பேரவை லண்டனில் நடத்திய சந்திப்பைப் போன்றே இச் சந்திப்பும் ஒன்று.
அரசியல் திட்டம் எதுவுமின்றி ‘காய் நகர்த்தல்கள்’ ஊடாக மகள் சக்தியில் நம்பிக்கையற்ற அரசியல் வாதிகளின் இறுதிப் புகலிடம் ஏகதிபத்தியப் பயங்கரவாதமே. மக்கள் அன்றாடன் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து இனவழிப்புப் பிரச்சனைகள் வரை பேச முடியாது தோல்வியடைந்த அரசியல் வாதிகள் தம்மைத் தீவிர தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்வது வழமை. விக்னேஸ்வரனின் மாகாண சபை ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையான சுன்னாகம் நீர்ப் பிரச்சனையில் மக்களின் எதிரியாகச் செயற்பட்ட விக்னேஸ்வரன் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
உதைபந்தாட்ட கிளப் கள் போன்று அடையாளங்களை வைத்துக்கொண்டு பணம் சேர்க்கும் புலம்பெயர் அமைப்புக்களைப் பொறுத்தவரை விக்னேஸ்வரன் போன்று போலித் தேசியவாதம் பேசும் உயர்தட்டு அரசியல்வாதிகள் பொன்முட்டை போடும் வாத்துக்கள்.
சுன்னாகம் பிரச்சனையில் மக்கள் விரோதியாக நடந்துகொண்டு இனப்படுகொலைக்குத் துணை சென்ற விக்னேஸ்வரன் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியதும் உற்சாகமடைந்த புலம்பெயர் அமைப்புக்கள் அவரோடு உடன்பாட்டிற்கு வந்தன.
இந்தப் பின்னணியில் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் அழைக்கப்பட்ட விக்னேஸ்வரன் அமெரிக்காவில் சமாதான முன்னெடுப்பிற்கான அமெரிக்கத் தமிழர்கள் என்ற அமைப்பின் தயவில் பயணத்தை மேற்கொண்டார். அங்கு விக்னேஸ்வரன் இலங்கை அரசை வழி நடத்துமாறு அமெரிக்காவை கேட்டுக்கொண்டார்.
மகிந்த அரசுடன் நல்லிணக்கத்தைப் பேணிய விக்னேஸ்வரன் மைத்திரி-ரனில் அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். மைத்திரி-ரனில் அரசை நல்வழிப்படுத்துமாறு அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துக் கேட்டுக்கொண்டார்.
தமது சொந்த ஏகாதிபத்திய நலன்களுக்காகவே செயற்படும் அமெரிக்க அரசு ரனில் அரசைத் தமது அடியாள் படையாகவே கருதுகின்றது. தமிழ் மூடர் கூட்டம் கருதுவதைப் போலன்றி, அமெரிக்காவிற்கு தெளிவான அரசியல் திட்டம் உண்டு. அதனை நடைமுறைப்படுத்த நிஷா பிஸ்வால் போன்ற நிர்வாகிகள் செயற்படுகின்றனர்.
விக்னேஸ்வரனைச் சந்தித்த பிஸ்வால் இனப்படுகொலை தொடர்பாக அடக்கி வாசிக்குமாறு அறிவுறுத்தியுள்ள அதே வேளை ரனில்-மைத்திரி அரசுடன் இணைந்து நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு வேலைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுகொண்டிர்ந்த போது குழந்தைகள் கூட இலங்கை அரசைப் பயங்கரவாத அரசாகவே கருதினர். உலக மக்களின் எதிரியாகவே இலங்கை அரசு கருதப்பட்டது. அரசியலில் தான் குழந்தை எனக் கூறும் விக்னேஸ்வரன் வன்னிப்படுகொலைக் காலத்தில் தாயின் கருவறைக்குள் இருந்ததாக அவரது ஆதரவளார்கள் படம்காட்டினாலும் காட்டுவார்கள்.
வன்னிப் படுகொலைகள் முடிந்ததும், ஜனநாயகம் பிறந்துவிடதாகக் கூறி அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் மகிந்த அரசின் காலத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசுடன் பேசிப் பிரச்சனைகளைத் திர்க்கலாம் என்றும் கூறி வந்தார். பாவம் குழந்தை!
மகிந்த ஆட்சியில்ருந்து அகன்றதும், கால்கள் முளைத்து அமெரிக்கா வரை சென்று அரசியல் பேசுகிறார்.
இதுவரை அழிவுகளுக்குக் காரணமாகவிருந்த புலம்பெயர் குழுக்களோடு விக்கி இணைந்துகொண்டதன் காரணம் மக்களுக்கானதல்ல என்பதை விக்கியின் கடந்த கால வரலாறு உணர்த்துகிறது. இனப்படுகொலை தொடர்பாகப் பேசிக் காலத்தைக் கடத்தாமல் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுமாறு அமெரிக்க விக்னேஸ்வரனை மிரட்டியதன் காரணமும் மக்களுக்கானதல்ல.
விக்னேஸ்வரன் உண்மையிலேயே தேசியவாதியானால் சுன்னாகத்தில் ஆரம்பித்து நீரையும் நிலத்தையும் அபகரித்தவர்களை மக்கள் முன் கொண்டுவரட்டும். அதன் பின்னணியில் செயற்பட்ட பல்தேசிய நிறுவனத்தை மக்களுக்கு நட்ட ஈடு வழங்கக் கோரட்டும். மகிந்த ஆட்சியில் மின் நிலையத்தை நடத்திய சம்பிக்க ரணவக்கவையும் மகிந்தவையும் தண்டிக்கக் கோரட்டும். இதற்காகப் போராடும் மக்களைத் தலைமையேற்று அழைத்துச் செல்லட்டும். இல்லையெனின் விக்னேஸ்வரனின் தீர்மானமும் திடீர் தேசியவாதமும் நாடகங்களே.