Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுய நிர்ணைய உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை :அமெரிக்கத் தீர்மானத்தின் அரசியல்

UN-2015அமெரிக்க அரசினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் வரைபை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தீர்மானம் திருத்தப்படுவதற்கு முன்னான வரைபு மட்டுமே இது. திருத்தப்பட்ட தீர்மானம் நாளை(22.09.2015) சமர்ப்பிக்கப்படும். இலங்கை அரசு மற்றும் அமெரிக்க அரசு ஆகிய இரண்டும் இணைந்த அடிப்படையிலேயே தீர்மானம் வெளியிடப்படும் என முன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்காவில் பயிற்றுவிக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் இலங்கை அரசு தீர்மானத்தை நிராகரிப்பது என்பது அப்பட்டமான நாடகம். இதை அரங்கேற்றுவதற்கான மேடை ஐ.நா மனித உரிமைப் பேரவை.

இப்போது உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்ற முடிவு தீர்மானகரமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்பை ஒடுக்கும் வகையில் உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பில் விவாதங்களைத் திசை திருப்புவதே இதன் பிரதான நோக்கம்.

இப்போது இலங்கை அரசை ஆதரிக்க முடியாத தமிழர்கள் அமெரிக்காவை ஆதரிக்க முன்வருவார்கள். அமெரிக்கா உள்ளக விசாரணையை ஆதரிக்கும், இலங்கை அரசின் ஆதரவு நிலையில் செயற்படும், அமெரிக்காவிற்கு ஆதரவாகத் தமிழர்கள் செயற்படுவார்கள். ஆக, இலங்கை அரசு, அமெரிக்கா, புலம்பெயர் தமிழர்கள் என்ற அனைத்துத் தரப்பும் சிறிய எதிர்ப்புக்களோடு ஒரே நேர்கோட்டில் பயணிப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கையே இது.

தவிர, அமெரிக்க ஆதரவாளர்களாக தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து பெணப்படும். இதன் ஊடாக உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளிடமிருந்து அவர்கள் அன்னியப்படுத்தப்படுவார்கள்.

அதற்கான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலே கடந்த ஆறு வருடங்களாக அமெரிக்காவாலும் அதன் நிர்வாக அலகுகளால் பயிற்றுவிக்கப்பட்ட தமிழர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்க அரசு முன்வைத்த முதலாவது தீர்மான வரைபு, இலங்கையில் அரசாங்கம் இனிமேல் எப்படி ஆட்சி நடத்தப்போகிறது என்பதற்கான முன்னுரை. தீர்மானம் போர்க்குற்றம் குறித்துப் பேசுவதைவிட இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்துப் பேசுகிறது. அதிலும் ஒருபடி மேலே சென்று இலங்கையில் வட – கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி போன்ற குறைந்தபட்ச சுயாதிக்கத் தீர்வைக்கூட வலிந்து நிராகரிக்கிறது. இலங்கை அரசைப் பாராட்டும் அமெரிக்க அரசு சர்வதேச நீதிபதிகள் குறித்துத் தொட்டுச் சென்றாலும், இனப்பிரச்சனையைத் தொடர்ந்த்து எப்படிக் கையாள்வது என்று குறிப்பிடும் பகுதியே அதன் அரசியல் இருதயப் பகுதியாகும். அதன் அடிப்படையில் இலங்கையில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறது.

சுய நிர்ணைய உரிமை தொடர்பாகப் பேசுவது இலங்கையின் இறைமையில் தலையிடுவது போன்றது எனக் கூறிவரும் அமெரிக்கா, இலங்கையில் அகிகாரப் பரவலாக்கம் மட்டுமே தீர்வு என்று சுய நிர்ணைய உரிமையை மறுப்பது, இறைமையில் தலையிடுவது மட்டுமல்ல அடிப்படை ஜனநாயகத்தையே நிராகரிப்பதாகும்.

அதிகாரப் பகிர்வு திட்டம் ஒன்றை இலங்கை அரசு முன்வைக்கவேண்டும், அதிகரப் பகிர்வின் ஊடாகவே நாட்டில் அனைத்துப் பிரிவினரும் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும்’ எனக் கூறும் அமெரிக்கத் தீர்மானம், அனைத்து மாகாணங்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்கிறது. ஆக, மாகாண சபைக்கு மேல் எந்தத் தன்னாட்சித் திட்டமும் கிடையாது எனக் கூறி தமிழர்களின் ஜனநாயக உரிமை மீது தாக்குதல் நடத்துகின்றது. அதுவும் வட-கிழக்கு இணைந்த மாகாண சபை இல்லை என்பதை மிகவும் வெளிப்படையாகவே கூறுகின்றது. ‘வடக்கு மாகாண சபை உட்பட அனைத்து மக்காண சபைகளுகும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிறது’ .

போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் நடத்தப்படும் அரசியல் நாடகத்தின் ஊடாக தமிழர்கள் மீது திட்டமிட்ட அரசியல் தீர்வு ஒன்று திணிக்கப்படுகிறது, அந்த அரசியல் தீர்வு தேசிய இனம் ஒன்றின் அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரானது.

Exit mobile version