Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள்ளிவாய்காலிற்கு வராத அமெரிக்கக் கப்பல் கொழும்பில் நிலை கொண்டுள்ளது!

Blue-Ridge-Approachஇலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர், அதன் எச்ச சொச்சங்கள் உலக அழிவு சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகின் மக்கள் விரோத அரசுகளதும், அதன் கூறுகளில் ஒன்றான ஐக்கிய நாடுகள் சபையிடமும் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அழிவுகளையும், போர்க்குற்றத்திற்கான விசாரணையையும், இனப்படுகொலைக்கான நீதிகோரலையும் சர்வதேச மக்கள் மயப்படுத்துவதற்குப் பதிலாக போராட்டத்தை அழித்தவர்களின் கரங்களிலேயே ஒப்படைத்த ‘பெருமை’ புலம்பெயர் அமைப்புக்களையே சாரும்.

அவ்வாறு அழித்தவர்களின் கரங்களிலேயே போராட்டத்தை ஒப்படைத்துவிட்டு இன்னும் போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்திவிட்டதாக மக்களை ஏமாற்றும் இந்த அமைப்புக்கள் மேலும் அழிவுகளைத் திட்டமிடுகின்றன. ஆயுதப் போராட்டம்முடிந்துவிட்டது இனிமேல் அரசியல் போராட்டம் என்று கூறியபடியே அமெரிக்க ஏகபோக அரசின் தலைமையில் மக்களதும் போராளிகளதும் தியாகத்தை ஒப்படைத்தவர்கள் இன்று தெற்காசியாவை அமெரிக்கா இராணுவ மயப்படுத்துவதற்குத் துணை போயிருக்கின்றனர்.

அமெரிக்க இந்திய அரசுகளின் தலைமையில் புலிகளும் மக்களும் அழிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் அரசியலை தனது ஆக்கிரமிப்பு நலன்களுக்கு ஏற்ற வகையில் அமெரிக்கா வழி நடத்தி வருகின்றது. மத்திய கிழக்கிற்குப் அடுத்ததாக தெற்காசியாவை இராணுவ மயப்படுத்துவதில் அமெரிக்க அரசின் நெருங்கிய நண்பனாக இலங்கைப் பேரினவாத அரசு செயற்பட்டுவருகிறது.

கூகிள் நிறுவனம் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் தனது வரைபடத்தினுள் உட்கொண்டுள்ளது. கூகிள் பலூன் சேவை இலங்கையின் விண்ணில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு இலங்கையின் முழுத் தகவல்களையும் தனது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திய அமெரிக்க அரசு அதன் அடுத்த நடவடிக்கையாக தனது பாதுகாப்புப் படைகளை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது.

மார்ச் 24, 2016: மார்ச் மாதம் 26ஆம் திகதி அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக்கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் -Blue Ridge–class command ships -கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பலில் 900த்திற்கும் மேற்பட்ட அமெரிக்கக் கடற்படையினர் வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு, தொலைத்தொடர்பு, கட்டுப்பாடு, கட்டளை ஆகியவற்றைக் கொண்டுள்ள இப் போர்க்கப்பலின் இலங்கை வருகை தெற்காசியப் பிராந்தியத்திற்கான அபாய அறிவிப்பு.

அமெரிக்கக் கடற்படையின் முக்கியத்துவம் வாய்ந்த இக்கப்பலில் கடற்படை இசைக்குழுவும் பயணிக்கிறது. இலங்கைக் கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பு விகாரமாகா தேவி பூங்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. இலங்கையில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான சிங்கள மக்களின் அங்கீகாரத்தைக் கோரும் நிகழ்வாக இது கருதப்படுகின்றது.

புலி அடையாளத்திற்கும் புலி எதிர்ப்பு அடையாளத்திற்கும் இடையே நகர்த்தப்படும் புலம்பெயர் நாடுகளை மையமாகக்கொண்டு நடத்தப்படும் அரசியல் புதிய மக்கள் சார்ந்த அரசியலின் தொடக்கத்திற்குத் தடைச் சுவராக அமைந்திருக்க இலங்கை முழுவதும் இன்னொரு மத்திய கிழக்காக மாறும் அபாயம் தோன்றியுள்ளது.

அமெரிக்கக் கப்பல் வந்து காப்பற்றும் என்று முள்ளிவாய்க்காலில் மக்களையும் போராளிகளையும் குந்தியிருந்து வேடிக்கைப்பார்க்கச்சொன்ன புலம்பெயர் பினாமிகளின் அரசியல் இன்று அமெரிக்கக் கப்பலை கொழும்பின் இருதயத்தில் நங்கூரமிடச் செய்துள்ளது.

Exit mobile version