இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்டுத்த வேண்டும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி க்கும் இடையில் இன்று கொழும்பில் நடந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனதில் நிறுத்த வேண்டும் எனக் கூறியதுடன் அதன் அடிப்படையில் விரைவில் பல அரசியல் ரீதியான மாற்றங்களையும் நன்மைகளையும் தமிழர்கள் பெறக்கூடும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சம்பந்தன் தமிழ் மக்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறியபோது அதனை அவர் அவதானமாக செவிமடுத்தபோதிலும் 25 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க முடியந்ததால் நிறைய விடயங்களை பேச முடியாமல் போய்விட்டதாகவும் வடக்கு முதல்வர் கூறினார்.
முப்பது வருடப் போராட்டமும், இழப்புக்களும், எரியும் மனங்களும், குண்டுகளைத் தாங்கியே வளரும் குழந்தைகளும் ஜோன் கெரி என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்வாகி ஊடாக இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேரினவாத இராணுவத்தையும், ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளையும், இன்னும் பேசத் தயாரற்ற உரிமை மறுப்பையும் சொத்தாகக் கொண்டுள்ள இலங்கைப் பேரினவாத அரசின் ஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியம் சுய நிர்ணைய உரிமையை நிராகரித்தது.
தமிழ்த் தேசியப் பிழைப்பு நடத்தியவர்களும், தமிழ் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் மக்களின் இன்றைய நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டும். தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமைக்கான அரசியல் இயக்கம் இவர்கள் அனைவரையும் மீறி மீண்டும் முளைவிடும் போது இன்றைய தமிழ்த் தலைமைகள் அரசியல் நீக்கம் செய்யப்படும்.