சிரியாவில் இரத்த ஆறு மட்டற்ற வெள்ளமாக பாய்கின்றது. உலகத்தின் மற்றொரு மூலையில் மனிதகுலம் அழிக்கப்படுகின்றது. அந்த அழிப்பிற்கு ஜனநாயகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என அழைக்கிறார்கள். குர்திஸ்தான் விடுதலைப் போராளிகளை அழித்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஐக் காப்பாற்றுவோம் என்கிறது துருக்கி. ஐ.எஸ் இன் நிலைகள் அழிக்கப்படுவதை விரும்பாத சவூதி அரேபியா தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பி வைத்துள்ளது.
இதனிடையே மருத்துவமனையிலும் பள்ளிகளிலும் வீசப்பட்ட எறிகணைத் தாக்குதல்களால் 50 இற்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நிதியிலியங்கும் எம்.எஸ்.எப் என்ற மருத்துவ தன்னார்வ நிறுவனம் ரஷ்ய விமானங்களின் தாக்குதலாலேயே மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட, சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரஷ்யாவைக் குற்றம் சுமத்தியுள்ளன.
உலகம் தவிர்க்க முடியாத பொருளாதர நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. அந்த நெருக்கடியைத் தற்காலிகமாக எதிர்கொள்வதற்காக அமெரிக்க அரசு மூன்றாவது உலக யுத்தத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
அமெரிக்க அடியாள் அரசும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் கூடரமுமான சவூதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் துணையுடன் மத்திய கிழக்கு முழுவதையும் யுத்த வலையமாக மாற்றியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது உள்நாட்டில் டொனால்ஸ் ரம்ப் போன்ற பாசிஸ்டுக்களை யுத்தத்தின் எதிர்காலத்தைத் தலைமையேற்கும் வகையில் வளர்த்து வருகிறது.